September 29, 2011

பறவைகளின் அழிவுக்கு காரணமான மனிதன்.

நம் உலகில் பல்லாயிரக் கணக்கான பறவையினங்கள் உயிர் வாழ்ந்தன.ஆனால் இப்போது சில ஆயிரங்கள் என சுருங்கிவிட்டது.பறைவையினங்கள் அழிவதற்கும் அழிந்து கொண்டு வருவதற்கும் மனிதர்களாகிய நாம்தான் முக்கிய காரணம் என்பதை மறுக்க இயலாது.பறவைகளுக்கு பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்துவதும் அதே மனிதான் .



கி. பி. 1500 க்குப் பின்னர்தான் நூற்றுக்கும் அதிகமான பறவை இனங்கள் அழிந்துள்ளன. அத்துடன் பறவையினங்களின் அழிவு வீதமும் அதிகரித்துச் செல்வதாகவே உள்ளது. இப்பொழுது உலகில் உயிர்வாழும் ஏறத்தாழப் பத்தாயிரம் இனப் பறவைகளில் 1200 இனங்கள் அழியும் அபாயத்திலுள்ளதாகக் கருதப்படுகிறது. பெரும்பாலும் தீவுகளில் வாழும் குறிப்பாகப் பறக்க இயலாத பறவையினங்களே அதிக ஆபத்தை சந்திக்கின்றன.

சில நூறு வருடங்களுக்கு முன்பு ஓக்குகள் என அழைக்கப்படும் பறவையினங்கள் கனடாவுக்கு அருகிலுள்ள தீவுகளிலும் கிரீன்லாந்து ,ஐஸ்லாந்து ,நார்வே, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து போன்ற இடங்களில் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டன. காலப் போக்கில் இப்பறவைகள் மனிதர்களாலும் விலங்குகளாலும் அழிந்து போகும் வரை வேட்டையாடப்பட்டன. இவ்வினத்தின் கடைசி ஜோடிகள் 1844 ல் ஜூலை 3ல் ஐஸ்லாந்துக்கு அருகில் உள்ள ஒரு தீவில் வைத்துக் கொல்லப்பட்டன.இவைகள் தங்கள் சிறகுகளை உபயோகித்து நீருக்கடியில் நீந்த வல்லவை. சிறிய ஓக்குகளைப் போல பெரிய ஓக்குகளால் பறக்க முடியாது. இதனால் தான் இப்பறவைகள் மனிதருக்கு இலக்காகக் கூடியனவாக இருந்தன.பெரிய ஓக்குகள் ஒரு வருடத்தில் ஒரு முட்டையை மட்டுமே இடுகின்றன.




டேடோ அழிந்த பறவையினங்களில் இதுவும் ஒன்று. இது மொரீசியஸ் தீவில் வாழ்ந்த பறக்க முடியாத பறவையாகும். ஏறத்தாழ ஒரு மீட்டர் உயரமான டேடோ நிலத்தில் கூடு கட்டி வாழ்ந்தது; பழங்களை உணவாகக் உண்ணக்கூடியது.மாமிச உண்ணிகள் இல்லாத தீவில் வாழ்ந்த பறவை என்பதால் டேடோ மனிதர்களைக் கண்டு அஞ்சாமையால் அதன் அழிவுக்கு காரணமானது. மொரீசியஸ் தீவுகளுக்கு போர்த்துக்கீசியர்கள் 1505 இல் சென்றனர். பின்னர் டச்சுக்காரர்கள் அங்கு குடியேறினர். மனிதர்களாலும் அவர்களது வளர்ப்பு விலங்குகளாலும் ஏறத்தாழ நூறாண்டுக் காலத்தில் படிப்படியாக டேடோ பறவையினம் முற்றுலுமாக அழிக்கப்பட்டது. டேடோ பறவை மெல்ல மெல்ல சூழல் பாதுகாப்புச் சின்னமாக மாறி வருகிறது.




யானைப் பறவை அழிந்துபோன பறவையினங்களில் ஒன்றாகும்.மடகாஸ்காரில் காணப்பட்ட இவை பதினாறாம் நூற்றாண்டுடன் அழிந்து விட்டதாகக் கருதப்படுகிறது. யானைப் பறவையே உலகின் மிகப் பெரிய பறவையாக இருந்தது. அது மூன்று மீட்டரை விட உயரமானதாகவும் அரை டன் எடை உடையதாகவும் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. யானைப் பறவையின் முட்டைகளின் எச்சங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில ஒரு மீட்டரை விட அதிக சுற்றளவுடையனவாக இருந்தன. யானைப் பறவைகளின் அழிவுக்கும் மனிதன் அவற்றை வேட்டையாடியதே காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

தற்போதைய சூழ்நிலையில் நமக்கு நெருக்கமாக இருக்கும் நாம் எப்போதும் பார்க்கக் கூடிய சிறிய பறவையினமான சிட்டுக்குருவிகள் அழிந்து கொண்டு வருவதாக ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. அதற்கான காரணமாக அலைப்பேசி கோபுரங்களைக் சுட்டிக்காட்டுகின்றனர். அதிலிருந்த வெளிப்படும் மின் காந்த அலைகள் சிட்டுகுருவிகளை வெகுவாக பாதிப்பதால் அவைகள் அழிந்து வருவதாக கூறுகின்றனர்.

பறவையினங்களை காப்பாற்ற எத்தனை அமைப்புகள் ஏற்படுத்தினாலும் மனிதனின் செயற்கையான படைப்பால் இயற்கையான படைப்புகள் அழிந்து கொண்டிருக்கின்றன என்பதுதான் உண்மை.

No comments: