free mail

September 9, 2011

ஆனந்த விகடனின் மங்காத்தா திரை விமர்சனம்...

புதிதாக வெளியிடப்பட்ட திரைப்படங்களை திரையரங்கில் சென்று பார்க்க வேண்டுமா வேண்டாமா என்று விகடனின் விமர்சனத்தை படித்து விட்டு செல்லாம் என்று முடிவெடுக்கும் பலர் உண்டு அதில் நானும் ஒருவன்.பொதுவாக விகடனின் விமர்சனம் 90 சதவீதம் நாம் நினைத்தாற் போலவே இருக்கும்.நான் தலைவரின் திரப்படவிமர்சனத்திற்கு விகடன் எத்தனை மதிப்பெண்கள் தருவார்கள் என காத்தருந்த தருணங்களும் உண்டு.சில திரைப்படங்களுக்கு நாம் நினைத்ததை விட அதிகமாகவோ இல்லை குறைவாகவோ மதிப்பெண் தருவார்கள் அந்த நேரம் சிறிது கடுப்பாகவே இருக்கும்.இருந்தாலும் விகடனின் விமர்சனத்தை படிக்க காத்திருப்பது வாடிக்கைதான்.

அஜித் குமார் நடித்து வெங்கட்பிரபு இயக்கிய மங்காத்தா திரைப்படத்திற்கு விகடன் 42 மதிப்பெண்கள் கொடுத்திருக்கிறது.நாற்பது மதிப்பெண்களுக்கு மேல் சென்றாலே அந்த திரைப்படம் மக்கள் மத்தியில் வரவேர்ப்பை பெற்றுள்ளது என்று அர்த்தம்.

கீழே விகடனின் மங்காத்தா விமர்சனம்....
கிரிக்கெட் மேட்ச் ஃபிக்ஸிங் பணம் ரூபாய் 500 கோடியை, யார் அலேக் செய்வது என்ற தப்பாட்டமே மங்காத்தா!


தல ரசிகர்களுக்காக தல ரசிகர்களால் உருவாக்கப்பட்ட தல சினிமா?


சஸ்பென்சனில் இருக்கும் போலிஸ் அஜித். மேட்ச் ஃபிக்ஸிங் பணம் 500 கோடியை மும்பையில் வைத்து கைமாற்றுகிறார் மாஃபியா புள்ளி ஜெயப்பிரகாஷ்.அவரிடம் இருந்து 500 கோடியை லபக்கத் திட்டமிடும் நான்கு கெட்டவன்களுடன் ஐந்தாவது கெட்டவனாக கை கோர்க்கிறார் அஜீத் .இந்த மாஃபியா மங்காத்தாவில் 500 கோடியை யார் கைப்பற்றுகிறார்கள் என்ற ரேஸ் சேஸ்தான் மங்காத்தா ஆட்டம்!


நம்புவீர்களா? அஜீத் படத்தில் ஹீரோ என்று யாருமே இல்லை. எல்லோரும் கெட்டவர்கள்.அதிலும் அஜீத் அநியாத்துக்குக் கெட்டவர். சமூகத்துக்கு நல்லது செய்யும் மாஸ் ஹீரோ படங்களின் கோல்டன் ரூல் விதியை உடைத்ததற்கு வெங்கட் பிரபுவுக்கு ஒரு வெல்டன்!ஆன்ட்டி ஹீரோவாகக்கூட அல்ல ., முழு வில்லனாகவே அஜீத். தாடி, முடியில் நரையுடன் மே வந்தா எனக்கு 40 வயசாகுது என்று வெளிப்படையாகவே சொல்வது. படுக்கையில் இரவைக் கழித்த லட்சுமி ராயிடம் நீ யார்? எதுவும் தப்பா நடந்துகிட்டேனா? என்று அப்பாவியாகக் கேட்பது, காதலியின் அப்பாவை ஓடும் காரில் இருந்து தள்ளிவிடுவது, பண வெறியில் நண்பர்களை டப் டுப் என்று சுட்டுக் கொல்வது, சகட்டுமேனிக்குக் கெட்ட வார்த்தைகளைப் பிரயோகிப்பது என துவம்ச உற்சவம் நடத்தியிருக்கிறார்.திரையில் தோன்றும் சமயம் எல்லாம் லாஜிக் மறந்து ஒன் மேன் ஷோ மேஜிக்கில் அசரவைக்கிறார் அஜீத்.


கடமை உணர்வுடைய அதிகாரி என்ற பழகிய காதா பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார் அர்ஜுன். அஜீத்தின் சரக்கு கச்சேரிக்கு தொட்டுக் கொள்ள ஊறுகாயாக த்ரிஷா. அளவாக ,அழகாக இருக்கிறார் அவ்வளவே! படத்தில் அஞ்சலி,ஆண்ட்ரியா,லட்சும் ராய் ஆகியோர் இருக்கிறார்கள்.அஜீத் ஓட்டும் ஸ்விஃப்ட் கார்கூடப் படத்தில் இவர்களைவிட அதிக திருப்பத்தில் பங்கெடுக்கிறது.


சரக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் மட்டுமே புன்னகைக் வைக்கிறது வசனங்கள். சமய சந்தர்ப்பம் இல்லாமல் துருத்தும் பாடல் காட்சிகளும் பிரேம்ஜியின் ஸ்டீரியோ டைப் காமடியும்...ஆவ்வ்!நான்கு கெட்டவர்களில் வைபவ் மட்டுமே தேறுகிறார். 500 கோடியை அடிப்பதற்கு எப்படி பக்காவான திட்டம் போடவேண்டும்? ஒரு கன்டெய்னர், ஒரு வேன் ஒரு கிரேன் , ஒரு லேப்டாப்...இவ்வளவுதான் கோவாவுல ரூம் போட்டு யோசிச்சிருக்கலாமே பாஸ்!


யுவன்ஷங்கர் ராஜா இசையில் விளையாடு மங்காத்தா பாடல் மட்டும் சுறுசுறு சுதி.அஜீத் நிற்கும் ,நடக்கும்,பறக்கும் காட்சிகளில் துடிப்பு ஏற்றுகிறது பின்னணி இசை.
பரபர துரத்துதல் காட்சிகளில் சுற்றிச் சுழன்று அசத்துகிறது ஷக்தி சரவணனின் கேமரா.


மாஸ்டர் பிரைன் அஜீத் எதற்குச் சாதாரண நான்கு அடியாட்களுடன் கொள்ளைக் கூட்டு வைக்கிறார்? பணம் இருக்கும் இடம் தெரிந்தும் அஜுத் அதைக் கைப்பற்றாம தேமே என்று இருப்பது ஏன்? இதுவும் இன்ன பிறவுமாக படத்தின் பல இடங்களில் ஸ்ட்ரிக்ட்லி நோ லாஜிக்!


அஜீத்தை நம்பி ஆடலாம்!


விகடன் விமர்சனக் குழு
நன்றி

ஆனந்த விகடன்.

September 8, 2011

செங்கொடி ,செங்கொடி ,செங்கொடி

சமீபத்தில் உலக தமிழர்களையே உலுக்கிய ஒரு தியாக மரணம்

செங்கொடி என்னும் இளம் சமூக போராளினுடையது.செங்கொடியின் தியாகத்திற்கான காரணம் உலகம் அறிந்ததே, பேரறிவாளன்,சாந்தன்,முருகன் ஆகிய மூவருடைய தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டி தன் உயிரை தியாகம் செய்தார். அன்று ஒரு முத்து குமார் இன்று ஒரு செங்கொடி.செங்கொடியின் தியாகம் சாதாரணமானதல்ல இப்படி ஒரு அசாதரணமான காரியம் செய்ய எவ்வளவு துணிச்சல் வேண்டும் நினைத்தாலே தேகம் சிலிற்கிறது.கொடூரமான தூக்குத் தண்டனையை எதிர்த்து கொடூரமான முறையில் தன்னுடைய எதிர்ப்பை உலகுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.அவரின் இந்த முடிவு பொது மக்களிடையே பெரும் எழுச்சியை உருவாக்கியிருக்கிறது.ஆனால் அவரின் எதிர்ப்பைக் காட்ட தன் உடலை நெருப்புக்கு இரையாக்கியிருக்கக் கூடாது என்பது என் கருத்து.எவ்வளவு துடிதுடிக்க வைத்து சாவை தரக்கூடிய செயல் இது.நினைக்கவே முடியவில்லை அதை செங்கொடி தேர்ந்தெடுத்திருக்கிறார். அவரின் இறுதி கோரிக்கை நிறைவேற வேண்டுமென்றால் நீதிமன்றம் மனம் வைக்க வேண்டும்.அதற்கு அனைத்து தரப்பினரும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். செங்கொடியின் இளப்பை விவரிக்க வார்த்தைகளே இல்லை.இருந்தாலும் கவிஞர் வாலி அவர்கள் செங்கொடி என்னும் பெண்ணரிசிக்காக ஒரு கவிதை வடித்துள்ளார் .அக்கவிதையை 11.9.2011 தேதியிட்ட ஜுனியர் விகடன் இதழ் வெளியிட்டிருக்கிறது.இதோ அந்த கவிதை...கொடி வணக்கம்!கொடிகாக்கத் - தன்னைக்

கொளுத்திக் கொண்ட உயிருண்டு

உயிர்காக்கத் தன்னைக் -

கொளுத்திக் கொண்ட கொடியுண்டா?

உண்டு:

அதன்பேர் செங்கொடி:

இனிமேல் -

அதுதான் என் கொடி!

தொன்மைத் தமிழரெலாம் - ஒரு

தொப்புள் எழுந்த கொடி: இவள்

தொப்புள் எழுந்த கொடிகளைக் காக்க -

வெப்புள் விழுந்த கொடி!

இதுதான் -

எனது -

வணக்கத்திற்குரிய கொடி! இதை

வணங்காது வேறெதற்கு முடி?

மூவுயிர் விடு! ஈடாக என் -

பூ வுயிர் எடு!

என்று

எமனிடம் தந்தாள் தன்னை;

செங்கொடி கன்னியாயினும் - மூன்று

சேய்களைக் காத்த அன்னை!


ஆம்;
அந்தக் -

கன்னி தீயானாள்; தீயாகி -

கன்னித் தாயானாள்!

பெருவாரியான நாடுகள்

பெரும்பிழை புரிந்தோரையும் -

சிறையில் வைக்க முயலுமேயன்றி -

சிதையில் வைக்க முயாலாது;

ஏன்

எனில் -

சிதையில் வைத்தது தவறென்றால்

சீவனை வழங்க இயலாது!

மரண தண்டனைக்குதான்

மரண தண்டனை தர வேண்டும்;

மானுடற்கு

மரணம் -

கயிறு வழி யல்ல;

காலன் வழிதான் வர வேண்டும்!


விழிநிறையக் கனாக்களுமாய்;

விடை தெரியா வினாக்களுமாய்;

இருபது ஆண்டுகள்

இறந்து போனபின்...

இம் மூவர்க்கு

இன்னமும் மீதமாய் -

இருக்கும் வாழ்வையும் - கயிறு

சுருக்கும் என்றால் ....

அது - அரக்கம்

இருக்க வேண்டாமா -

இரக்கம்?


'கண்ணுக்குக் கண்! எனும்

கருத்தை ஏற்காதவர்

காந்தி;

தபால்

தலையில் மட்டுமல்ல

நம்

நடக்க வேண்டாமா -
நம்

எண்ணத்திலும் தேசப்பிதாவை

ஏந்தி?

செங்கொடியே என் செல்ல மகளே!

சேவிக்கத் தகுந்ததுன் சேவடி துகளே!

ஒன்றுரைப்பேன்; உன் தியாகத்திற்கில்லை

ஒப்பு;

என்றாலும் - அதை

ஏற்பதற்கில்லை; அது தப்பு!

நன்றி
கவிஞர் வாலி

மற்றும்

ஜூனியர் விகடன்

September 5, 2011

முதல்வருக்கு தமிழருவி மணியன் அவர்கள் எழுதிய கடிதம்.இரண்டாம் பாதி,

குற்றம் சாட்டப்பட்டவர் மீது அனுதாபத்தையும்,சட்டத்தின் மீது எதிர்ப்பு உணர்வையும் எழச் செய்யும் தண்டனையால் சமுதாயத்திற்கு நன்மையை விட தீமையே வந்து சேரும்.(LAW COMMISSION REPORT-பக்கம் 328 )என்று சட்ட கமிஷன் அறிக்கை சொல்கிறது.

சென்னை உயர்நீதி மன்றத்தில் மூவருக்கும் நியாயம் கிடைக்கும் என்று முழுமையாக நாங்கள் நம்புகிறோம்.மது மேத்தா இந்திய அரசு வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் கருணை மனு எட்டு ஆண்டுகளுக்குப் பின் நிராகரிக்கப்பட்டதன் மூலம் குற்றம் இழைத்ததற்கான மரண தண்டனை பெற்ற கியாஸிராம் என்பவர் மரணத்தின் விழிம்பில் நீண்ட காலம் மன உளைச்சலோடு வாழ்வைக் கழித்திருக்கிறார் என்று சுட்டிக்காட்டி,அவருடைய மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியது.(MADU METHA VS UNION OF INDIA) உச்ச நீதி மன்றம் ஒருவருக்கு மரண தண்டனையை உறதி செய்து இரண்டு ஆண்டுகளுக்கு பின்பும் தண்டனை நிறைவேற்றப் படாவிடின் அதை ஆயுள் தண்டனையாக மாற்றிய தீர்ப்புகள் பல உண்டு.

நீதி மன்றத்தில் விவாதிக்கப்படும் வழக்கில் நீங்களோ நானோ விமர்சனத்தில் இறங்க முடியாது.என் கடிதத்தின் நோக்கமும் அது வன்று.பேரறிவாளன்,முருகன்,சாந்தன் மூவரு சிறைக் கம்பிகளிலிருந்து விடுபட நீங்கள் உங்கள் அரசியல் ஆளுமையை உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் பயன்படுத்த வேண்டும்.ராஜீவ் காந்தி படுகொலையில் இந்த மூவரின் பங்களிப்பு ஐயத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை.ஆனாலும் அவர்கள் மூவரும் இருபது ஆண்டுகளுக்கு மேல் சிறைக்குள்ளேயே வாழ்வின் வசந்தமயமான இளமையை முற்றாக இளந்துவிட்டார்கள்.ஆயுள் தண்டனையை விட கூடுதலாக அவர்கள் அனுபவித்து விட்டார்கள்.சட்டத்தின் நோக்கம் குற்றம் செய்தவரை திருத்துவதேயன்றி தீர்த்துக் கட்டுவது அன்று.முதல்வரே நீங்கள் வைணவ சம்பிரதாயத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்.ஒரு மனிதன் வீதியில் அடிபட்டு விழுந்து கிடந்தால், விழுந்து கிடப்பவன் வேறு யாரும் அல்ல: அது நான் என்று உணர்பவனே வைணவன் என்கிறது இராமநுஜ தரிசனம்.சிலுவையில் அறைந்தவர்களுக்குப் பாவ மன்னிப்பு வேண்டிய பெருங்கருணையாளர் கர்த்தர் இயேசு.தன்னுடைய சிறிய தந்தை ஹம்சாவின் உடலைப் பிளந்து ஈரலைச் சுவைத்த ஹிந்தாவையும், அருமை மகன் ஜைனப்பை ஈட்டியால் குத்திய ஹப்பரையும்,கைபர் விருந்தில் நஞ்சு கலந்த யூத பெண்ணையும் மன்னித்த அருளாளர் நபிகளார்.கோட்சேவையும் மன்னிக்கும் மனம்கொண்ட காந்தியின் பெயரில் கடை விரித்த நம் உள்ளூர் காங்கிரஸ்காரர்களுக்கு மட்டும் மன்னிக்கும் மனோபாவம் வாய்க்கவே இல்லை. சட்டம் கடைமையை செய்யட்டும் என்று சொல்பவர்கள் சட்டம் ஒழுங்காக கடமையைச் செயதிருந்தால் பல சங்கடங்களுக்கு ஆளாகி இருப்பார்கள் என்பதை நான் அறிவேன்.
அவர்களோடு மட்டும் எந்த சூழ்நிலையிலும் கை கோர்த்து விடாதீர்கள்.

தமிழின விரோதிகள் இன்று ஆதரிப்பாரற்று அரசியல் அனாதைகளாகிவிட்டனர்.காங்கிரஸைத் தவிர அனைத்துக் கட்சிகளும் மூவர் விடுதலைக்கு ஆதரவாக குரல் கொடுப்பதைக் கவனியுங்கள். தூக்குத் தண்டனை இனி யாருக்கும் இருக்கலாகாது என்று முடிவெடுத்து செயற்படுங்கள்.சரித்திரம் என்றும் உங்களுக்கு நீங்காத இடத்தைத் தேடித் தரும்.வாழ்க்கை புனிதமானது அதைப் பறிப்பது அரக்கத்தனமானது, என்ற கிருஷ்ண ஐயரின் அர்த்தமுள்ள வாசகத்துக்கு உயிர் கொடுங்கள். ஆட்சி மாற்றம் நிகழ வேண்டும் என்று எழுத்திலும் பேச்சிலும் கருத்து யுத்தம் நடத்தியவன் நான்.அதற்காக நீங்கள் முதல்வரானதும் போயஸ் தோட்டத்தில் பூங்கொத்துக் கொடுக்க வரிசையில் நான் வந்து நிற்கவில்லை.அது என் சுதர்மத்துக்கும்,சுயமரியாதைக்கும் தகாது.மரண வாசலில் நிற்கும் மூவருக்கும் மறு வாழ்வு கொடுங்கள்.தமிர் கூட்டம் தன் நன்றி செலுத்த உங்கள் வாசல் தேடிப் பூங்கொத்துகளுடன் வந்து நிற்கும். அந்த வரிசையில் நிச்சயம் நானும் நிற்பேன்.
இவ்வாறு அந்த கடிதம் நிறைவடைகிறது.

எது எப்படியோ மூவரின் தூக்கிற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருப்பது ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கு கிடைத்த வெற்றியாகவே நான் கருதுகிறேன்.தமிழர்கள் ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இது ஒரு சின்ன எடுத்துக்காட்டு.
நன்றி...

தமிழருவி மணியன்

மற்றும்


ஜுனியர் விகடன்.

முதல்வருக்கு தமிழருவி மணியன் அவர்கள் எழுதிய கடிதம்...

7.9.2011 தேதியிட்ட ஜுனியர் விகடன் இதழில் திரு.தமிழருவி மணியன் அவர்கள் முதல்வருக்கு எழுதிய கடிதம் ஒன்று பிரசுரிக்கப்பட்டிருந்தது.அந்தக் கடிதத்தை(கட்டுரை)படித்த போது பல உணர்வுகள் என்னகத்தே தோன்றின.அவ்வளவு உணர்வுப்பூர்வமாக அந்தக் கடிதம் தமிழருவி மணியன் அவர்களால் எழுதப்பட்டிருந்தது.
நீங்களும் படித்துப் பாருங்கள்.கடிதத்தின் தொகுப்பு இதோ.

மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு வணக்கம்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழவும் நீங்கள் முதல்வர் நாற்காலியில் அமர்ந்து அரசின்அதிகார மையத்தில் பரிபாலனம் நடத்தவும் வாக்களித்த மக்களின் உணர்வுக்கு மதிப்பு அளித்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு தீர்மானங்களைச் சட்டமன்றத்தில் நிறைவேற்றியதற்காக முதலில் என் நெஞ்சார்ந்த நன்றி மலர்களைச் சமர்ப்பிக்கிறேன்.


ஈழத்தில் நடந்த இனப் படுகொலையில் இந்திய அரசுக்கு மிக பெரிய பங்கு உண்டு என்பது பொய்யின் நிழல் படாத நிஜம்.

மன்மோகன் அரசுக்கு மனம் நோகும் என்று தயங்காமல் சோனியா காங்கிரசுக்கு கோபம் கொப்பளிக்கும் என்று அஞ்சாமல் இலங்கையின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று நீங்கள் ஒரு மனதாக ஓர் அற்புதமான தீர்மானம் நிறைவேற வழி வகுத்ததன் மூலம், உலக தமிழர்களின் நெஞ்சங்களில் உயர்ந்த இடத்தை அடைந்தீர்கள்.


பல்லாண்டுகள் அகதி முகாம்களில் அல்லலுற்றுத் தவிக்கும் ஈழத் தமிழருக்கு ,நலிவுற்ற தாயக தமிழருக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தையும் வழங்கி இருண்டு கிடக்கும் அவர்களுடைய இல்லங்களில் ஓரளவு வெளிச்ச விளக்கை ஏற்றிவைத்தீர்கள்.


பேரறிவாளன்,முருகன்,சாந்தன் ஆகிய மூவருடைய கருணை மனு நம் குடியரசுத்தலைவரால் நிராகரிக்கப் பட்டதும்,செப்டம்பர் 9ஆம் நாள் அவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் என்று தேதி குறிக்கப்பட்டதும் ,அமைதியை நாடும் தமிழினம் மாநிலம் எங்கும் ஆர்ப்பரித்து எழுந்தது.

மத்தியில் ஆழ்வோரின் மரணப் பசிக்கு மூன்று உயிர்களை இரையாக்க நீங்கள் எந்த நிலையிலும் அனுமதிக்கலாகாது என்று ஒட்டு மொத்த தமிழினமும் ஓங்கி குரல் கொடுத்தது.

இளைஞன் முத்துகுமாரைப் போல் செங்கொடி என்ற இளம் சமூகப் போராளிப் பெண்,மூவர் உயிரையும் காக்க தீரத்துடன் தீக்குளித்து நெருப்பில் வெந்து நீறானாள்.அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும்,மனித உரிமை ஆர்வலர்களும் நீங்கள் முன் வந்து மூன்று பேரையும் காக்க வேண்டும் என்று கனிவுடன் கை கூப்பி வேண்டினர்.


பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் கருணை மனு ஜனாதியால் நிராகரிக்கப்பட்ட நிலையில் ,இதனை மாற்றுவதற்கு எந்தவித அதிகாரமும் மாநில முதலமைச்சர் என்ற முறையில் எனக்கு இல்லை என்று நீங்கள் சட்டப்பேரவையில் கை விரித்தப்போது,தமிழகம் கலங்கித்தவித்தது.ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பின்பு மீண்டும் அதே பொருள் தொடர்பான கருணை மனுவை மாநில கவர்னர் பரிசீலிக்க வேண்டும் என்று மாநில அரசு கோர முடியாது என 1991 ல் மத்திய அரசு தெளிவுரை வழங்கியுள்ளது. என்று கூறி நீங்கள் இந்தப் பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்க முயன்றபோது தமிழரின் நம்பிக்கை தளர்ந்து போனது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடையும் ,சட்டமன்றத்தில் நீங்கள் நிறைவேற்றிய இரண்டாவது தீர்மானமும் பாளம் பாளமாய் வெடித்துக்கிடந்த வறண்ட நிலத்தில் வான் மழை வந்து விழுந்தது போன்ற உணர்வை ஊட்டின.


சட்டத்தின் சந்நிதானத்தில் விழி மூடி கிடந்த நீதி தேவதை முற்றாக தூங்கிவிடவில்லை.உங்களுடைய நெஞ்சத்தில் நிழலாடும் நியாய உணர்வும் நிறம் மாறவில்லை மக்களின் விருப்பத்திற்கு நீங்கள் வளைந்து கொடுத்ததில் ஜனநாயகம் நிமிர்ந்துவிட்டது.அறிவார்ந்த முதல்வரே நீங்கள் சட்டம் படித்து ஒரு சிறந்த வழக்கறிஞராக வர வேண்டும் என பள்ளிப் பருவத்தில் கனவு கண்டதாக ஒரு நேர்காணலில் பதிவு செய்து இருக்கிறீர்கள்.அந்தக் நிறைவேறியிருந்தால்,நிச்சயம் நீங்கள் முதல்வராகியிருக்க முடியாது.முறையாக நீங்கள் சட்டக்கல்லூரியில் சேர்ந்து படிக்காவிடினும் சட்டத்தின் கூறுகளைச் சரியாகப் புரிந்துக்கொள்ளும் ஆற்றல் உங்களுக்கு உண்டு.

அரசியலமைப்புச் சட்டம் ,அநியாயமாக மனித உயிர் பறிக்கப்படலாகாது என்ற விழிப்பு உணர்வின் விளைவாக ஏற்படுத்திய பாதுகாப்பு கவசம்தான்,ஜனாதிபதிக்கும் ஆளுநருக்கும் வழங்கி இருக்கும் கருணை காட்டும் உரிமை.

ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப் பட்ட பின்பு அதை மாற்றும் அதிகாரம் எனக்கு இல்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள் .ஆனால் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற பின்பும் சமூக அநீதிகளுக்கு எதிராக ஓயாமல் போராடிவரும் முதிர்ந்த போராளி வி.ஆர்.கிருஷ்ண ஐயர் உங்களுக்கு வரைந்த கடிதத்தின் வாசகங்களை உங்கள் நினைவில் நிறுத்த வேண்டுகிறேன்.


ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப் பட்ட நிலையில், மாநில ஆளுநர் அதே விவகாரத்தில் கருணை மனுவை அங்கீகரிப்பது முறையன்று.ஆனால் ஜனாதிபதியோ ,ஆளுநரோ ஒருமுறை நிராகரித்த கருணை மனுவின் மீது மீண்டும் மறு பரிசீலனை செய்ய வாய்ப்பு உண்டு. மத்திய அரசின் உள்துறை செயலர் கருணை மனு நிராகரிப்பை மறுபரிசீலனை செம்ய வேண்டி ஜனாதிபதிக்கு விண்ணப்பம் வைத்தால் அதை அவர் ஏற்று தண்டனைக் குறைப்பை வழங்க முடியும்.


ஒரே ஒரு முறைதான் கருணை மனு மீது ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க முடியும் என்று அரசியலமைப்புச் சட்டம் கட்டுப்படுத்தவில்லை என்று கிருஷ்ண ஐயர் உங்களுக்கு தெளிவுபட எழுதியிருக்கிறார். இப்போது மூவரின் மரணக் கயிறுகளை அறுத்து எறியும் கத்தி "நம் தமிழர்" ப.சிதம்பரத்தின் அமைச்சகத்திடம் உள்ளது.

உள்துறை அமைச்சரை நிர்பந்திக்கும் இடத்தில் மன்மோகன் இருக்கிறார்.தமிழகத்தின் கொந்தளிப்பை மிகச் சரியாக உணர்த்திடும் ஆற்றல் உங்களுக்கு இருக்கிறது. அதனால் நல்ல முடிவு கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.


பரவலாக மக்களிடையே பெருக்கெடுக்கும் உணர்வுகளுக்கும் ,அபிப்பிராயத்துக்கும் உரிய மதிப்பு அளித்து தண்டனை குறைப்பை தருவதில் தவறு இல்லை.
கடிதம் இத்துடன் நிறைவு பெறவில்லை சிறு தடங்கலால் இத்துடன் இந்த பதிவு முற்றுப்பெறுகிறது.கடிதத்தின் ஏனைய பகுதிகள் அடுத்த இடுகையில் நன்றி.

September 4, 2011

ஓர் உயிரின் கதறல்....

தூக்கு மரத்தை

தூக்கில் இடுங்கள்...மன்னர் கால மரபும்

கொடுமையும் இன்னும் தொடர்தல்

இழிவிலும் இழிவாம்

அன்னை நேர் குடி அரசு தன் மக்கள்

இன்னுயிர் பறித்தல் ஏற்புடைத்தாமோ?

தூக்கு மரத்தை தூக்கில் இடுங்கள்....


வருந்துதல் வேண்டா

சாவின் மடியில் இருத்துதல்

வேண்டா தூக்குக் கயிற்றில்

பொருத்துதல் வேண்டா

எவர் தவறிழைப்பினும் திருத்துதல் செய்வீர்....

திருத்துதல் செய்வீர்....


தூக்கு மரத்தை தூக்கில் இடுங்கள்


மன்னன் கொன்றதும்

மன்னனைக் கொன்றதும்

முன்னை பிரஞ்சுப் புரட்சியில் பார்த்தோம்....

அந்நில அரசில் வழிவழி வழக்கில்

சென்னி அறக்கும் செயல் இன்றுண்டா?


தூக்கு மரத்தை தூக்கில் இடுங்கள்


சிறுத்தை கொல்லுதல் தடுக்கும் சட்டம்

மரத்தை வெட்டுதல் தடுக்கும் சட்டம்

பறித்தல் என்னடா மாந்தன் உயிரை?

தரத்தில் மாந்தன் உயிர் தாழ்வானதோ?


தூக்கு மரத்தை தூக்கில் இடுங்கள்....


புத்தர் அன்பில் நிலைத்த மண்ணில்

உத்தமர் காந்தி உயிர்த்த மண்ணில்

சித்தர் வள்ளலார் சிலிர்த்த மண்ணில்

எத்தனை கழுத்தை இதுவரை முறித்தீர்.


தூக்கு மரத்தை தூக்கில் இடுங்கள்....
இந்தக் கவிதை திரு.காசி ஆனந்தன் அவர்கள் எழுதியது. 7.9.2011 தேதியிட்ட ஜுனியர் விகடன் வார இதழில் பிரசுரிக்கப்பட்டது.

நன்றி

ஜுனியர் விகடன்.