September 27, 2011

300 கி.மீ வேகத்தில் இந்தியாவில் அதிவேக ரயில் சேவை.

அதிவேக ரயில் சேவை உலகில் வளர்ந்த நாடுகளிலும்,வளரும் நாடுகளில் பலவற்றிலும் முன்பே செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவை பொறுத்த வரை அது கேள்விக் குறியுடனே இருந்து வந்தது.தற்போது இந்திய மக்களுக்கும் அதிவேக ரயில் சேவை கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
ஐதராபாத், சென்னை , பெங்களூரு , எர்ணாகுளம் மார்க்கத்தில் 300 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்கும் திட்டம் குறித்த மசோதா, பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது.


பொருளாதார வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக துணை நகரங்களை அமைக்கவும், ரயில்களின் வேகங்களை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐதராபாத் ,விஜயவாடா , சென்னை, டில்லி , ஆக்ரா லக்னோ , வாரணாசி, பாட்னா,டில்லி , சண்டிகர், அமிர்தசரஸ், புனே , மும்பை , ஆமதாபாத், ஹவுரா, ஹால்டியா, சென்னை, பெங்களூரு, எர்ணாகுளம் ஆகிய தடங்களில் 300 கி.மீ.,வேகத்தில் ரயில்களை இயக்குவது குறித்து திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை, மம்தா பானர்ஜி ரயில்வே அமைச்சராக இருந்த போது பட்ஜெட்டில் அறிவித்தார்.
இந்த திட்டம், பொதுத் துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் கூட்டு முயற்சியுடன் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தை கண்காணிப்பதற்காக, "தேசிய அதிவேக ரயில் ஆணையம்' அமைக்கப்பட உள்ளது.
ஒன்பது உறுப்பினர்களைக் கொண்டதாக இந்த ஆணையம் இருக்கும்.


ஒரு தலைவர், எட்டு உறுப்பினர்கள் இதில் இடம் பெறுவர். திட்டக் கமிஷன், நிதித் துறை, இன்ஜினியரிங் துறை ஆகியவற்றை சேர்ந்தவர்களும் , இந்த திட்டத்திற்கு நிதியளிக்கக் கூடிய நிறுவனங்களைச் சேர்ந்த நான்கு பேர் பகுதி நேர உறுப்பினர்களாகவும் இடம் பெற உள்ளனர். பொதுத் துறை தேர்வு வாரியத்தின் மூலம் இந்த ஒன்பது பேரும் தேர்வு செய்யப்படுவர்.
இந்த வரைவு மசோதா, சட்ட அமைச்சகம், நகர்ப்புற அமைச்சகம், நிதி அமைச்சகம், திட்டக் கமிஷன் ஆகியவற்றின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது. அதன் பிறகு, அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டு பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட உள்ளது.இந்த அதிவேக ரயில் பாதை ஒரு கி.மீ., தூரத்துக்கு அமைக்க, 100 கோடி ரூபாய் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, ஆறு தடங்கள் அதிவேக ரயில் பாதைக்காக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் மூன்று பாதைகள், வெளிநாட்டு ஆலோசனை நிறுவனங்களின் உதவியுடன் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.


அதிவேக ரயில் சேவை அதிவேகமாக இந்திய மக்களுக்கு கிடைத்தால் மகிழ்ச்சிதான்.

No comments: