January 24, 2014

ஜில்லா,வீரம் ஒரு பார்வை சின்னதாக..

இந்த இரண்டு திரைப்படங்களையும் ரசித்து பார்ப்பதற்கோ சுவைப்பதற்கோ
அவசிமில்லை.காரணம் நாயகர்களின் கதைத் தேர்வு அப்படி.இயக்குநர்களின்
இயக்கமோ எப்படியோ அப்படி.இனி ஒப்பிடலாம்.

அஜித்.
.
மங்காத்தாவில் வெள்ளை முடியோடு வந்த அஜித்தை ஏற்கமுடிந்த எனக்கு
வீரத்தில் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.கதைக்கே ஒட்டாத பாத்திர
வடிவமைப்பு.இது தேவையில்லாத விளம்பரம்தான்.அடுத்த படத்திலாவது சினிமாவை
சினிமாவாக காட்டுங்கள்.யதார்த்தமில்லாத கதையை
திரைப்படுத்திவிட்டு,யதார்த்தமான தோற்றத்தை திரையில் கொண்டு வருவது ஏன்?
.
.
விஜய்.
நீங்கள் ஒரு கல்லூரி மாணவன் என்று சொன்னால் ஒப்புக்கொள்ளத்தான்
வேண்டும்.ஏன்னா இளமை கூடிக்கொண்டே போகிறது.அழகு ஏறிக்கொண்டேச்
செல்கிறது.ஆனா ஒரு காவலதிகாரியாக உங்களை! மிடியல வேண்டாம் விட்ருங்க.
.
.
காஜல் அகர்வால்,தமன்ன,
பெருசா ஒண்ணுமில்லை அவங்களை பற்றி சொல்வதற்கு..
.
.
இயக்குநர் சிவா,
சிறுத்தைனு ஒரு சிறப்பான படத்தை பார்க்காமலே அஜித் இந்தப்பட வாய்ப்பை
உங்களுக்கு தந்திருப்பார் என நினைக்கிறேன்.வில்லனுடைய கெத்தே உங்களால்
உடைபடுகிறது சிவா.அடுத்தப் படத்திலாவது கொஞ்சம் யதார்த்தத்தை
கலக்குங்க...கவனிக்க...அடுத்தப்படம் கெடைச்சா.
..
.
இயக்குநர் நேசன்.
உங்கள் திறமை பாராட்டப்படுகிறது.ஏன்னா இந்த படத்தில் மோகன்லாலை நடிக்க
சம்மதிக்க வைத்ததற்கு.எப்படி முடிந்தது உங்களால் ஒரு மொக்கை கதையால் நல்ல
கலைஞனை கவர்ந்திழுக்க.உங்கள் ஒருசில காட்சியமைப்புக ள் அருமையாக
கையாளப்பட்டிருந்தது.ஆனால் காட்சி முடிவில் அந்த கோர்வை
கைவிடப்பட்டுவிடுகிறது.நாயக துதிபாடி சினிமா எடுக்க நினைக்காதீர்கள்.
.
.
நகைச்சுவை.
நகைத்து சுவைப்பதற்கான காட்சிகள் இரண்டு படத்திலும் ஒன்றுமில்லை.ஏதோ
சிரிக்கலாம் .சந்தானத்தையும்,சூரியையும் கதையில் திணித்திருக்கிறார்கள்
என்றே சொல்ல வேண்டும்.மனதில் நிற்கா நகைச்சுவைகள்.
.
.
வசனங்கள்.
இரண்டு இயக்குநர்களும் டிவிட்டர்,பேஸ்புக் பக்கம் அதிகமாக வலம்
வருவார்கள் போல நிறைய ஸ்டேட்டஸ்களும்,டிவீட்டுகளும் நன்றாக இருந்தன.ஆனா
அதை பன்ச் பாணியில் பேசும்போதுதான் கொஞ்சம் கடுப்ப கெளப்புது.வசனம்
நன்று.
.
.
.
பாடல்கள்.
அஜித் திரைபடத்தில் பாடல்கள் ஹிட்டாகி ரொம்ப வருசம் ஆயிடிச்சி.அந்த
வரிசையில் வீரமும் ஒன்று.
விஜய் இதில் மாறுபடுகிறார் .விஜய்யின் படத்தில் குறைந்தபட்சமாக இரண்டு
பாடலாவது ஹிட்டாகிவிடும் இந்தப்படத்திலும் அது தொடர்கிறது.
.
.
கதை.
அப்பன் வெப்பன் இரண்டு படத்துலேயும் இதுதான் கதை.அதாவது ஜில்லாவுல
வெப்பன் வைச்சுருக்கிற அப்பனை திருத்த முயல்கிறார் விஜய்.வீரத்தில்
நாயகியின் அப்பனுக்கு வெப்பனால் வரும் ஆபத்திலிருந்து காப்பாற்ற
முயல்கிறார் அஜித்.
.
..
.
பொதுவாக பெரிய கதாநாயகர்களின் திரைப்படங்கள் அவர்களின் ரசிகர்களை
திருப்திபடுத்தவே எடுக்கப்படுகின்றன.அப்படிதான் எடுக்கவும்
செய்கிறார்கள்.அந்த வரிசையில் இரண்டு எண்ணிக்கை கூடியிருக்கிறது அவ்வளவே.
.
.
.
பின்குறிப்பு.
இது என்பார்வையில் மட்டும்..
நன்றி..

January 23, 2014

ஆடு இல்லை ஆடுவேன்..

ஒரு விவசாயின் கண்காணிப்பில் வளர்ந்த ஆடு ஒன்று வழிதவறி அருகில் இருந்த
காட்டுக்குள் நெடுந்தொலைவு சென்றுவிட்டது.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைபசேலன தாவரங்களும்,புல் பூண்டுகளும்
செழித்து கிடந்தன.ஆனால் ஆவலாய் உண்பதற்கான மனநிலையில் ஆடு இல்லை.பயத்தோடு
பதறியபடி ஓடி ஓடி ஓய்ந்து போனதுதான் பலன்.

ஏற்கனவே பதறிபோன நெஞ்சை பதறவைக்கும் விதமாக புதருக்குள் இருந்து பாய்ந்து
வந்தான் எமன் சிறுத்தை.திடீர் தாக்குதலை சற்றும் எதிர்பாராத ஆடு
நிலைகுலைந்துதான் போய்விட்டது.பாய்ந்தது கிழட்டு சிறுத்தை போல்
கழுத்துக்கு வைத்த குறி தவறி போய் அருகில் இருந்த மரத்தில்
முட்டிக்கொண்டது.இந்த சிலவினாடி புலியின் தடுமாற்றத்தை சாதகமாக்கி
சிட்டாக பறந்தது ஆடு.ஓடியது ஓடியது மணிக்கணிக்கில் ஓடி சோர்ந்து
விழுந்தது.உடலில் வலுவில்லாத நிலையில் மரணபயத்துடன் தன் சுயநினைவை இழந்து
கொண்டிருந்து ஆடு


சிறிது நேரம் கழித்து கண் விழித்த ஆட்டின் எதிரே ஒரு கரிய உருவம் நின்று
கொண்டிருந்தது.அது ஒரு காட்டாடு.கண்விழித்த ஆடு காட்டாடைப்பார்த்து அலறத்
துவங்கியது.காட்டாடே கொஞ்சம் அரண்டுதான் போனது .இருந்தாலும் பொறுமையாக
பயப்படாதே நண்பா நான் உன் இனம்தான்.உனக்கு உதவலாம் என்ற எண்ணத்தில் இங்கு
நின்று கொண்டிருக்கிறேன்.

வேண்டாம் நீ எனக்கு உதவ வேண்டாம் இங்கிருந்து நகர்ந்தாலே போதும்.

நீ இந்த காட்டிற்கு புதியவன் என நினைக்கிறேன்.இந்த சூழ்நிலையில் என் உதவி
கட்டாயம் உனக்கு தேவைப்படும்.

கொஞ்சம் யோசனையோடு காட்டாடை நோக்கியது கிராமத்து ஆடு.

குறிப்பறிந்த காட்டாடு பயப்படாமல் உன்னைப்பற்றிய விவரத்தை சொல் என்றது.

சிறிய தளர்வுடனான தயக்குத்துடன் தன் முழுக்கதையையும் சொல்லியது.

கதையை கேட்ட காட்டாடு உனக்கு நான் உதவுகிறேன்.அதற்கு முன்பு நான்
சொல்வதைக் கேள்.இந்த இயற்கை அளப்பரிய வளங்களை நமக்கு
கொடுத்திருக்கிறது.விதவிதமான உணவுகள், விருப்பமான பகுதிகளுச் செல்ல முழு
சுதந்திரம் என எல்லாமே இங்கேதானே இருக்கிறது.அதனால் இங்கேயே இருந்து
விடலாமே.

ஒருக்காலும் முடியாது.சற்று முன்னர் உன் காட்டில் நடந்த அனுபவமே போதும்
என் வாழ்நாள் முழுமைக்கும் இந்த காட்டை வெறுக்க.அதனால் தயவுசெய்து என்
கிராமத்துக்குச் செல்வதற்கான வழியை காட்டு என்றது.

காட்டாடு எவ்வளவு எடுத்துச் சொல்லியும் பலன் இல்லாததால் வெள்ளாட்டின்
கிரமாத்திற்கு செல்வதற்கான வழியை தேட தீர்மானித்தது.

ஒரு வார தீவிர தேடலுக்குப் பிறகு இரு ஆடும் கிராமத்தை அடைந்தன.இந்த ஒரு
வாரத்தில் நான்கு முறை நான்கு விதமான விலங்குகளின் தாக்குதலிலிருந்து
இரண்டும் தப்பின.இதில் வெள்ளாட்டின் நிலைதான் பரிதாபத்துக்குரியது.

காட்டாடு கிராமத்து ஆட்டைப்பார்த்து கேட்டது.

ஆமா உன் கிராமம் இவ்வளவு வறண்டு காய்ந்து கிடக்கிறதே.இங்கு அதிகபட்சம்
என்ன உணவு கிடைத்துவிடும்.என கேட்டது.

உணவை நான் தேடிப்போய் கிடைக்காமல் இருந்தாலும் என் முதலாளி எங்களுக்கான
உணவை நாள்தோறும் சிறிதளவேனும் தருவார்.முதலாளியின் பாதுகாப்பில் உணவோடு
பயமில்லாமல் இருக்கிறேன்.உன்னைப்போல் உயிருக்கு பயந்து ஓடிக்கொண்டிருக்க
வேண்டிய அவசியமில்லையே.அதனால் நீயும் என்னுடன் வந்துவிடு முதலாளி
உன்னையும் ஏற்றுக்கொள்வார் என்றது.

காட்டாடு சிரித்து கொண்டே சொன்னது உன் முதலாளியின் அடிமைகளின்
எண்ணிக்கையை அதிகரிக்க நீ சிரமபடவேண்டாம்.என் வழி வேற உன் வழி வேற அதனால
நான் இப்போதே விடைப்பெற்றுக்கொள்கிறேன்.

சிறிது நேர நட்பு பாராட்டுதல்களோடு நன்றி நவிதல்களும் முடிந்து இரு
ஆடுகளும் தங்கள் பகுதிக்கான பாதையில் நடக்கதுவங்கின.

சிறு நேரத்தில் வீட்டை அடைந்த ஆடு தன் மந்தையோடு ஒட்டிக்கொண்டது.

விசாரித்த சகாக்களுக்கு தன் அனுபவத்தை விவரிக்க ஆரம்பித்தது.

மறுநாள் காலை மந்தையை பார்வையிட்ட விவசாயியின் கண்ணில் நம் ஆடும்
தென்பட்டது.திருடு போய்விட்டது என்று கருதிய ஆடு ஒரு வாரத்தில் திரும்ப
வந்திருக்கிறது.அதுவும் கொஞ்சம் கொழுத்துபோய் வந்திருக்கிறது.விவசாயி
இரட்டிப்பு மகிழ்சியோடு அன்றைய பொழுதை கழிக்கச் சென்றான்.

இப்படி இரண்டுநாள் கடந்திருக்கும் மந்தைக்கு வந்த விவசாயியோடு மூன்றுபேர்
வந்திருந்தனர்.அவர் மூன்று நான்கு ஆடுகளை சுட்டிகாட்டி பேசியபடி
இருந்தனர்.சிறிது நேரத்தில் கையில் கொண்டுவந்த கயிற்றால் மூன்று ஆடுகளை
கட்டி இழுத்துச் சென்றனர்.அதில் நம் ஆடும் ஒன்று.

மூன்று ஆடுகளும் ஒரு நிகழ்ச்சியை சிறப்பிக்க இறுதியாக பயணிக்கிறார்கள்
என்பது மட்டும் உறுதி.


இந்த கதையின் நீதி.

நம் வாழ்க்கையில் எடுக்கப்படும் முடிவுகள் நாம்தாம்
எடுக்கவேண்டும்.அம்முடிவு தவறாக போய்விடினும் கூட இறுதிவரை போராடினால்
நூலிளையில் தப்புவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

ஆனால்

நம் முடிவுகளை வேறொருவர் தீர்மானித்தால் எவ்வளவுதான் போராடினாலும்
மீள்வதற்கு வாய்ப்பு மிகமிக குறைவு.ஏனென்றால் முடிவு நம்முடையதல்ல...