free mail

September 23, 2011

இணையத்தின் சக்கரவர்த்தி கூகுல்.பாகம்2.

திட்டமிட்டப்படி நிறுவனமும் துவங்கியாயிற்று .ஆனால் புதிய நிறுவனத்திற்கு முதலீடு செய்வதற்கு பணம் வேண்டுமல்வா,அதற்காக நண்பர்களுக்கு சிறிது சிரமப்பட வேண்டியிருந்தது.இருந்தாலும் ஒரு வழியாக பலரிடம் உதவிப்பெற்று இறுதியில் 1.1 மில்லியன் டாலர்களை சேர்த்து கொண்டனர்.மேலும், இவர்கள் ஆரம்பத்தில் மிக தீவிரமாக googol.com என பெயர் சூட்டுவதில் மிகுந்த ஆர்வமாக இருந்தனர் (googol என்பதன் அர்த்தம்1 ஐ தொடர்ந்து வரும் 100 பூஜ்ஜியங்கள் கொண்ட எண்ணைக் குறிக்கும் பெயராகும்.

ஆனால்,அது சிலிக்கான் பள்ளத்தாக்கு பொறியியலாளர் ஒருவரால் ஏற்கனவே பதிவு செய்யப் பட்டிருந்ததுடன்அந்த பெயரை அவர் அப்போது விட்டுக் கொடுக்கவும் சம்மதிக்கவில்லை.எனவே,இவர்கள் தமது நிறுவனத்திற்கு தீவிரமாக பெயர் தேடும் போது தவறுதலாக தட்டச்சு செய்யும் போது பிறந்ததே "Google" என்ற புதிய சொல். car grage ல் இருந்து இந்த நிறுவனத்தின் அலுவலகங்கள் 1999 ம் மார்ச் மாதம் சிலிக்கன் பள்ளத்தாக்குகிற்கு(Silicon Valley) இடம் மாற்றலாகின.அங்கு வெவ்வேறு இரு இடங்களில் Google இயங்கிய போதிலும் விரைவான வருவாய்,வளர்ச்சி காரணமாக பெரிய கட்டிடம் அவர்களுக்கு தேவைப்பட்டது. அதனால் வாடகை அடிப்படையில் 2003 இல் மற்றொரு கட்டிடத்திற்கு இடம் பெயர்ந்தனர். அன்றிலிருந்து அதே இடத்திலேயே இருப்பதுடன் அந்த கட்டிடப் பகுதி googleplex எனவும் அழைக்கப்பட்டது.


பின்பு 2006 ல் 319 மில்லியன் டாலர்களை கொடுத்து அந்த கட்டிடத்தின் ஒரு பகுதியை Googleகொள்முதல் செய்தும் கொண்டது.

Google தனது எளிமையான தேடி மூலமாக அடிக்கடி உபயோகிக்கும் இணைய பயனாளர்களுளடன் புதிது புதிதாகவும் பலரையும் கவரத்தொடங்கியது. தேடுதல் இயந்திரத்தில் தேடப்படும் சொற்களுடன் தொடர்பான விளம்பரங்களை 2000 ம் ஆண்டில் இருந்து கூகுல் சேர்க்கத் தொடங்கியதோடு விளம்பரங்கள் இணைப் பக்கங்களின் அமைப்பை குலைக்காமலும்,இணைப் பக்கங்கள் கணினி திரைகளில் விரைவாக தோன்று வதற்காகவும் ஆரம்பத்தில் எழுத்துருக்களில் மட்டும் வடிவமைக்கப்பட்டிருந்தன. தேடுபொறியில்தேடலை சார்ந்த விளம்பரங்கள் கேள்வி மூலமாக அல்லது சொடுக்கப்படும்(click) விகிதத்திலும் விற்கப் படுவதுடன் இவற்றின் ஆரம்ப விலை 0.05 டாலராகவும் உள்ளது. இந்த தேடுதல் தகவல் சார்ந்த விளம்பரத்தினை இணையத்தளங்களில் காண்பிக்கும் நுட்பமானது goto.com என்ற நிறுவனமே முன்னோடிகளாக இருந்தார்கள். (goto.com என்ற இதன் பெயர் overtrueservices வாகவும் பின் நாளில் Yahoo! வினால் கொள்முதல் செய்யப்பட்டு "யாகூ சேர்ச் மாற்கெற்றிங் என பெயர் மாற்றம் ஆகியது).


கூகிளுடன் போட்டி ஆகி இருந்த பல புதிய நிறுவனங்களும் இணையத்தள சந்தையில் தோற்று விட"கூகிள்" லாபம் ஈட்டுவதுடன் வெற்றியும் பெற்று வருகிறது.

.ஆரம்பத்தில் "கூகோல்"(googol) என்ற வார்த்தையின் அர்த்தத்தைப் பார்த்து விருப்பப்பட்ட போதிலும் எழுத்துப் பிழைகளுடனான "கூகிள்"(Google) என்பது மிக பிரபலம் அடைந்து விட்டது. இன்று பெரும்பாலும் ஒவ்வொரு மொழியிலும் அதிகம் பேசப்படும் வினைச் சொல்லாக கூகுல் மாறிவிட்டது என்று சொன்னால் அதில் எவ்வித ஆச்சர்யமும் இல்லை .கூகுல் என்ற வார்த்தையை ஆக்ஸ்போர்ட் அகராதி 2006 ல் சேர்த்ததுடன் அதனை 'கூகில் தேடுதல் இயந்திரம் இணையத்தில் தகவல் பெற வசதியான தேடுதல் தளம் என்ற அர்த்தத்தில் சேர்க்கப்பட்டது.

கூகிள் தேடுபொறி (googlesearch) தேடுதலுக்கான பட்டியலிடும் தொழில் நுட்பமானது 2001ம் செப்டம்பர் 4 ம் தேதி (PageRankmechanism) காப்புரிமம் செய்யப் பட்டதுடன் ஸ்ரான்போஃர்ட் பல்கலைக் கழக அதிகாரபூர்வ கண்டுபிடிப்பாளர் காப்புரிமத்திலும் பட்டியலிடப்பட்டுள்ளது.
கூகுலின் அடுத்தக்கட்டச் சாதனையாக பங்குச் சந்தை யில் காலடி எடுத்து வைத்தது.

இன்னும் தேடுவோம்..........

September 22, 2011

அமெரிக்காவில் ராஜபக்சேவுக்க எதிராக வழக்கு.

அமெரிக்க சுற்று பயணத்தில் இருக்கும் ராஜபக்சே மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதியாக இருந்த கார்னல் ரமேஷின் மனைவி, இலங்கை அதிபர் ராஜ பக்சேவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.தனது கணவர் கொல்லப்பட்டதை எதிர்த்து அமெரிக்காவின் நியுயார்க் தென் மாவட்ட நீதிமன்றத்தில் அவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க ராஜபக்சே தற்போது அமெரிக்கா வந்துள்ளார். இந்த நிலையில் அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.கார்ணல் ரமேஸின் மனைவியின் சார்பில் இந்த வழக்கை விஸ்வநாதன் ருத்திர குமாரன் என்பவர் தாக்கல் செய்துள்ளார்.வழக்கு குறித்து எந்த விதமான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற செய்திகள் இன்னும் வெளியாகவில்லை.

இணையத்தின் சக்கரவர்த்தி கூகுல்.பாகம் 1.

இணையம்(internet) மனிதன் கண்டுபிடித்த மிகப் பெரிய படைப்பு என்று சொல்லலாம்.இணையம் மூலம் இந்த அகண்ட உலகத்தை நம் கைப்பிடிக்குள் வைத்திருக்கிறோம் என்றால் அது மிகையாகாது.இணையம் என்றால் அனேகமாக அனைவருக்கும் ஒருசேர ஞாபகத்திற்கு வருவது கூகுல்(google)என்ற தேடுதல் இயந்திர இணையதளம்தான் .கூகுலில் கிடைக்காத தகவல்களும்,வசதிகளும் இல்லை என்னும் அளவிற்கு அனைத்தும் கொட்டிக் கிடக்கின்ற இந்த பிரபஞ்சம் போலவே என் கண்களுக்கு தோன்றுகிறது. அப்படிப்பட்ட கூகுல் பிறந்த கதையும்,வளர்ந்த கதையும் இங்கு தொகுக்கப்படுகிறது.என்னைப் போன்ற இணையத்தின் புதிய பயனாளர்களுக்கு இது பயன்படும் என்று நம்புகிறேன். தமிழ்விக்கிபீடியா, தமிழ்வெப்.com, மற்றும் சில இணையதளங்களின் உதவியுடன் இந்த கட்டுரை பதிவுச் செய்யப்படுகிறது.கூகுல்(google) 1996 ம் வருடம் ஜனவரி மாதம் ,லாரி பேஜ்(Larry Page)உம் இவரது சக மாணவரான சேர்ஜி பிரின் (Sergey Brin) என்பவரும் தங்கள் பட்டப்படிப்பிற்காக கலிபோர்னியாவிலுள்ள stanford பல்கலைக் கழகத்தினால் வழங்கப்பட்ட ஆராய்ச்சிக்கானதலைப்பின் (இணையங்கள் இடையிலான கணித தொடர்பு) முடிவில் தோன்றியதாகும் கூகுல்.அவர்களின் நோக்கம் வேறு ஆனால் கிடைத்த பலனோ அவர்களே நினைத்துப் பார்க்காதது.ஆரம்பத்தில் லாரி பேஜின் ஆராய்ச்சிக்கான ஒரு பாடமாக மட்டுமே இது இருந்த போதிலும் வெகு விரைவிலேயே சகமாணவரும் நெருங்கிய நண்பருமான சேர்ஜி பிரின் இணைந்து கொண்டார். இவர்கள் இருவரும் தங்களது ஆய்வை இணைய தேடு பொறிக்கான ஒரு ஆய்வாக முன்னெடுத்தனர்.இவர்கள் தாம் சேகரித்த தகவல்களின் படி தேடு பொறியில் தேடப்படும் செய்தி எந்த இணையப் பக்கங்களில் உள்ளது என்பதையும் அதன் தொடர்புகளையும் அலசி ஆராய்ந்து தேடலின் பதிலாக பட்டியலிடுவதே சிறந்த முறை எனவும் முடிவு செய்தனர்.


இது அப்போது பரிசோதனையில் இருந்த தேடு பொறி தனது தேடும் செய்தியை எந்த இணையப் பக்கம் அதிகம் கொண்டிருந்ததோ அதன் எண்ணிக்கை வரிசையில் (இறங்கு முகமான வரிசை) பதிலாக (கணனியின்திரையில்) கொடுப்பதை
விட, தமது தேடுதல் கருவியானது தேடிய தகவல்களின் பக்கங்களை அலசி தேடுதலின் பதிலாக வழங்கும் முறை சிறப்பான தொழில் நுட்பம் என்பதில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தார்கள்.இவர்கள் தமது ஆராய்ச்சிக்கு புனை பெயராக 'பாக்ரப்'(பின்னால் தடவு அல்லது வருடு)என்ற பெயரை சூட்டிருந்ததுடன் இந்த ஆய்வு ஒரு இணையத்தின் பின் புல இணைப்புகளுடன் முக்கிய பங்கு வகிப்பதனால் அவ்வாறு அர்த்தத்தில் குறிப்பிடனர்.இவர்கள் ஆய்வை போலவே தேடுதலை பதிலாக கொடுப்பதற்கு அந்த கால கட்டத்தில் சிறிய தேடு பொறி"ராங்டெக்ஸ்" (rankdex)என்ற நிறுவனம் முயற்சியில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

தேடப்படும் தகவல் அடங்கிய இணையப் பக்கங்களினால் அதிகம் எந்த ஒரு இணையப் பக்கம் இணைக்கப் படுகின்றதோ அதுவே தேடப்படும் தகவலின் தொடர்பான பதில் என தமது ஆராய்ச்சியை நியாயப்படுத்தினர்.இந்த ஆராய்ச்சி ஸ்ரான்போஃர்ட்(stanford) பல்கலைக்கழகபட்டப் படிப்புடன் சம்பந்தமான ஆராய்ச்சி என்பதால் தமது விதிகளை அங்கு சோதனை செய்து பார்த்ததோடு google தோன்றவும் அடிகோலினர்.ஆரம்பத்தில் ஸ்ரான்போஃர்ட் பல்கலைக் கழகத்தின் இணையப் பக்கங்களை தேடுவதற்க்காக google.stanford.edu என்று பெயர் சூட்டப்பட்டாலும் பின்னர் google.com என 1997ம் வருடம் செப்டம்பர் 15 ம் நாள் பதிவு செய்யப்பட்டதுடன் 1998ம் வருடம் செப்டம்பர் 15ம் நாள் Google தனியார் நிறுவனமாகவும்பதியப்பட்டது.1998ம் ஆண்டு செப்டம்பர் 7 இல் நண்பர் ஒருவரின் car grageல் Google நிறுவனம் வர்த்தக நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது.


இன்னும் தேடுவோம்.......

பேஸ்புக்னா சும்மாவா.

பேஸ்புக் சமூக வலைத்தளம் ஏறக்குறைய நாள் தோறும் ஏதேனும் ஒரு புது வசதியை
அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கிறது.கூகுல் நிறுவனம் தன்னுடைய சமூக வலைத்தளமான கூகுல் பிளஸ்சை பல புதிய வசதிகளோடு
அறிமுகப்படுத்தியதிலிருந்து பேஸ்புக்கிற்கு பிடித்தது தலைவலி. இருந்தாலும் போட்டியை சமாளிக்க பேஸ்புக்கும் ஏதேனும் ஒரு புது வசதியை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தனது newsfeed எனும் செய்தியோடையில் real time updates எனும் நிஜ நேர மேம்படுத்தல் வசதியை இணைத்துள்ளது. இதன் மூலம் இறுதியாக பேஸ்புக்கை பயன்படுத்திய நேரத்தை அறிந்து கொள்ள முடிவதுடன்,பெரிய புகைப்படங்களையும் இணைக்க முடியும்.இதனால் பார்வையாளர்களுக்கு மிகவும் அண்மைய தகவல்கள் தானாகவே வழங்கப்படும் .அதே வேளையில் குறைந்த அளவு தகவல் தொகுப்புகள் அடங்கிய மற்றொரு பகுதி கணினியின் வலது பக்கத்தின் மேலே காணக்கிடைக்கும்.பேஸ்புக்கின் செய்தியோடை தினந்தோறும் 750 மில்லியன் உறுப்பினர்களால் பார்வையிடப்படுகின்றது. அதிகளவு புதிய தகவல்கள் தற்போது வெளியிடப்படுவதால் இதனை பேஸ்புக்கின் அறிமுக காலம் என வர்ணித்துள்ளார் அதன் நிறுவனர் MarkZuckerberg .


இந்த புதிய மாற்றமானது தற்போது நடை முறையில் உள்ள Top news மற்றும் Most Recent ஆகிய தேர்வுகளை ஒருங்கிணைக்கும் நோக்கத்தை கொண்டது எனவும் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் தனது செய்தியோடையிலுள்ள பெரிய அளவிலான புகைப்படங்க ளை ஒன்றிணைத்து வலது பக்க மேல் மூலையில் “ Ticker ”எனும் புதிய வசதியையும் இணைக்கவுள்ளது. இதனால் நமது நண்பர்களின் செயற் பாடுகளை நேரடியாக கவனிக்க முடியும்.இந்த புதிய மாற்றங்கள் கடந்த ஓர் இரு நாட்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

September 21, 2011

டாஸ்மாக் ஊழியர்கள் நியாயமாகத்தான் நடந்து கொள்கிறார்களா?

டாஸ்மாக்,தமிழில்(தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்), 1983 ஆம் ஆண்டு அப்போதய முதல்வர் எம். ஜி. ராமச்சந்திரன் அவர்களால் தமிழகத்தில் மதுவகைகளின் மொத்த விற்பனைக்காக தொடங்கப்பட்ட அமைப்பாகும். ஆனால் 2003 ல் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசால் ஒரு சட்டத் திருத்தம் செய்யப் பட்டு சில்லறை விற்பனையிலும் டாஸ்மாக் அமைப்பே ஈடுபடும் என அறிவித்தார்கள்.


அதற்கு பல காரணங்கள் சொன்னாலும் ஒரு காரணம் மட்டும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.அது இனிமேல் மதுபானங்கள் மலிவு விலையில் விற்பனைச் செய்யப்படும் என்று அறிவித்ததுதான்.இந்த செய்தியைக் கேட்டது முதல் எங்கள் ஊர் குடி மக்கள் மிகவும் மகிழ்ந்தார்கள்.எங்கள் ஊர் என்ன தமிழக குடிமகன்கள் அனைவருமே மகிழந்திருப்பார்கள்.இனிமேல் MONITTER குவாட்டர் இருபத்தயிந்து ரூபாய் M.C குவாட்டர் முப்பது ரூபாய் பீர் இருபத்தயிந்து ரூபாய், V.S.O.P குவாட்டர் பாதி விலை என அனைத்துச் சரக்குகளுக்குமே அதன் நிகர விலையிலிருந்து பாதி விலையாக கணக்கு போட்டார்கள் குடிமக்கள்.மலிவு விற்பனை என்றால் பாதி விலையாகத்தான் இருக்கும் என்று நினைப்பது இயல்புதானே.ஆனால் அரசின் அறிவிப்பு வேறாக இருந்தது அதாவது இப்போது விற்கப்படும் மதுபானங்கள் அதே விலையில் தொடரும் என்றும் ,இது போக மலிவு விலை மதுபானமும் கிடைக்கும் என்று அறிவித்தார்கள்.


டாஸ்மாக் சில்லறைக் கடைகளும் திறக்கப்பட்டது. V.S.O.P குடிப்பவனும் முதல் நாள் மலிவு விலை மதுபானத்தைதான் கேட்டான் .அந்த அளவுக்கு மலிவு விலை மது குடி மகன்களிடையே ஒருவித ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தது.ஆனால் டாஸ்மாக்கில் வினியோகம் செய்யப்பட்டதோ தொண்ணூறு மில்லி புட்டியில் அடைக்கப்பட்ட அதற்கு முன் கேள்விப்படாத பெயர்களில் மதுபானங்கள்.குவாட்டர்,ஆஃப்,புஃல் என எதுவுமே கிடையாது.வெறும் மினி குவாட்டர் மட்டுமே அதாவது தொண்ணூறு மில்லிலிட்டர். இதன் விலை பதினயிந்து ரூபாய்தான்.அரசு அறிவித்த மலிவு விலை மதுபானம் இது தான் என மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுவிட்டது.அரசின் கடமையும் அதோடு முடிந்து விட்டது.

மலிவு விலை மதுபானத்தின் பெயர்களைக் கேட்டாலே அதிரும், உதாரணத்துக்கு ஒரு சில பெயர்கள் இங்கே லயன்,புல்லக்,டைகர் இப்படி சரக்கின் பெயரே வித்தியாசமாக இருக்கும்.குறைந்த பட்சம் பத்து வெவ்வேறான பெயரில் மலிவு விலை மதுபானம் விற்பனைக்கு வந்திருந்தது.

இதனால் பயனடைந்தவர்கள் கூலி வேலை செய்யும் பாமர மக்கள் மட்டும் தான் வேறு எவரும் மலிவு விலை மதுபானத்தை விரும்பியதாக தெரியவில்லை.அதற்கான தைரியமும் யாருக்கும் இல்லை ,அதைக் குடிப்பதற்கு மிகவும் சிரமப்படவேண்டும் காரணம் சரக்கின் சக்தி அப்படி அதன் மணமே(மணமா,நாற்றமா)நாலு தெருவுக்கு அந்தப்பக்கம் அடிக்கும் அவ்வளவு மணமிக்கது. அடுத்த இரண்டு நாட்களில் செய்திதாள்களில் மலிவுவிலை மதுபானம் குடித்து ஒருவர் உயிருக்கு ஊசல் என்றும் பல பேர் மருத்துவமனையில் அனுமதி என்றும் செய்திகள் வர ஆரம்பித்தன. நாள் தோறும் இப்படிப்பட்டச் செய்திகள் அதிகரித்தனவே தவிர குறையவில்லை.ஆனால் மலிவு விலை மது பானத்தின் விற்பனையும் அதிகரித்து கொண்டுதான் சென்றது.நாளடைவில் மலிவு விலை மதுபானங்கள் அனைத்துமே ஒரே பெயரில் அழைக்கப்பட்டன அந்தப் பெயர் விஷம்.இரண்டு குடிமகன்கள் சந்தித்துக் கொண்டால் விஷம் குடிக்க போலாமா என்றுதான் கேட்பார்கள்.அந்த லட்சணத்தில் அரசின் மலிவு விலை மது இருந்தது.இது போதாதென்று சில மாதங்களுக்கு பதினயிந்து ரூபாய் என விற்றுக் கொண்டிருந்த புட்டி அதன் பிறகு பதினெட்டு ரூபாய் ஆகியது, மேலும் ஒரு சில மாதங்களில் இருபது,இருபத்து மூன்று,இருபத்தைந்து,இருபத்தெட்டு என இறுதியில் ரூபாய் முப்பதில் வந்து நின்றது.

அரசு மதுபானக் கடைகளை கையகப்படுத்தும் ஓராண்டு முன்பு வரை முப்பது ரூபாய்க்கு மினி குவாட்டர் கிடைத்து வந்தது அரசு அதை அப்போதே தடை செய்திருந்தது குறிப்பிடத் தக்கது.

இப்படி! மலிவு விலை மதுமானம் என்று கூறிய அரசு ஒரு வருடத்திலேயே ஏனைய மது பானங்களின் விலையிலேயே மலிவு விலை மதுபானத்தையும் விற்பனை செய்தது.தனியாரிடமிருந்து மதுபானக் கடைகளை அரசு கையகப் படுத்தவே இந்த மலிவு விலை நாடகம் நடத்தப்பட்டது என்று பொதுமக்கள் பேசிக்கொண்டனர்.

தனியார்த்துறைதான் போலி மதுபானங்களை விற்கின்றனர் என்றால் அரசோ தன் அனுமதியோடு போலி மதுபானங்களை தானே விற்கிறது இது எந்த உலக ஞாயம் என்று தெரியவில்லை.

கார்நாடக மாநிலத்தில் விற்கபடும் M.C பிராந்தியும்,தமிழகத்தில் விற்கபடும் M.C பிராந்தியும் ஒரே நிறுவனத்தின் தயாரிப்புதானே,அப்படியென்றால் கர்நாடகத்தில் தரமாகவும் தமிழகத்தில் தரமற்றதாகவும் இருப்பதற்கு காரணம் என்ன?பெரும்பாலான மது வகைகள் இப்படிப்பட்ட தில்லு முல்லுகளுக்கிடையேதான் தமிழக மக்களுக்கு கிடைக்கிறது.அரசு இதை தெரிந்தே செய்கிறதா அல்லது தெரியாமல் நடக்கிறதா அது அவர்களுக்கே வெளிச்சம்.

இப்படிப் பட்ட போலி மது பானங்களைக் குடிப்பது வேறு யாருமல்ல நம் அண்ணனும்,அப்பாவும்தான்.

இப்படிப்பட்ட போலி மதுபானங்கள் விற்பதைத் தடுக்க எந்த ஒரு அரசியல் கட்சியோ அல்லது சமூக அமைப்புகளோ போராடியதாகத் தெரியவில்லை.

மது பானங்கள் குடிப்பதால் உடல் நலத்துக்கும் தீங்கு விளைவிக்க கூடியது அதே நேரம் சமூக நலனுக்கும் தீங்கு விளைவிக்க கூடியதாகும். இதை யாரும் மறுப்பதற்கில்லை.நாட்டில் நடக்கும் பெரும்பாலன குற்றங்கள் குடி போதையில் நிகழ்த்தப்பட்டவை என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.அதற்காக மத்திய அரசும் ,மாநில அரசும் மது விற்பனையைத் தடைச் செய்து விட்டதா என்ன?இல்லையே.
தரமான பொருள்,தரமற்ற பொருள் அது இருக்கட்டும்.தரமற்றப் பொருளைக் கொடுத்து விட்டு இது தரமான பொருள்தான் என்று கூறுவது மக்களை ஏமாற்றும் முயற்சி அல்லவா, எங்கும் இல்லாதக் காட்சியாக டாஸ்மாக் கடைகளில் மட்டும்தான் வெளிப்படையாகவே லஞ்சம் வாங்கிறார்கள்.ஒரு குவாட்டரின் விலை 75 ரூபாய் என்றால் விற்கப்படும் விலையோ எண்பது ரூபாய் அதிகமாக வாங்கப்படும் பணம் டாஸ்மாக் ஊளியர்களுக்கு இது ஒரு அறிவிக்கப்படாதச் சட்டமாக தமிழகம் முழுவதும் இருந்து வருகிறது.
ஒரு உணவகத்துக்கு சென்று முப்பத்தயிந்து ரூபாய்க்கு சாப்பிட்டு விட்டு பரிமாறியவருக்கு ரூபாய் ஐந்து அன்பளிப்பு என்ற முறையில் சேர்த்து நாற்பது ரூபாயாக உண்ட உணவுக்கு பணம் செலுத்துவோம்.இதில் நாம் அதிகபட்சமாக தரும் பணம் நம்முடைய விருப்பத்தால் அந்த பணியாளருக்கு தருவது. ஆனால் மதுபானக் கடைகளில் அப்படியில்லை எழுபத்தயிந்து ரூபாய் குவாட்டருக்கு எண்பது ரூபாய் கொடுத்தால் தான் சரக்கே கைக்கு வரும்,உணவகங்களில் நாம் தருவது அன்பளிப்பு.ஆனால் டாஸ்மாக்குகளிலோ வலுக்கட்டாயமாக பிடுங்கி கொள்கிறார்கள்.இதுதான் கூடாதென்கிறேன். என் விருப்பமில்லாமல் என்னிடமிருந்து வாங்கப்படும் ஒரு ரூபாயாக இருந்தாலும் அது வழிப்பறிக்கு சமானமானது தானே? அவர்களைக் குற்றம் சொல்லி பயனில்லை காரணம் அவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் அப்படி மேலும் அரசு அலுவலர்கள் பெறும் எந்த சலுகைகளும் அவர்களுக்குத் தரப்படுவதில்லை ஏனென்றால் அவர்கள் அரசு ஊழியர்களாக அங்கீகரிக்கப் படவில்லை.நிலமை இப்படி இருக்கும் போது அவர்கள் வெளிப்படையாகவே செய்யும் தவறுகள் கண்டு கொள்ளப்படாமல் இருக்கின்றன.


இவை அனைத்துக்குமே முழுக்க முழுக்க காரணம் அரசு இயந்திரம்தான்.அரசிற்கு வருமானம் மட்டும் வந்தால் போதும் என்ற எண்ணத்தோடு இருப்பதால் இந்த சீர்கேடு நிகழ்கிறது. இதற்கான தீர்வு டாஸ்மாக் ஊளியர்களையும் அரசு ஊளியர்களாக மாற்ற ஆவன செய்ய வேண்டும்,மேலும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளும் அவர்களுக்கு தரப்பட வேண்டும்.அதுமட்டுமல்லாமல் தவறு செய்தால் கடுமையான தண்டனைகள் கிடைக்கும் என்ற உணர்வையும் அவர்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும்.

ஏதோ அவர்கள் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியது போல் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்ற நினைக்க வேண்டாம்.சிறு தவறுகளை பழக்கப்படுத்திக் கொண்டால் பெருந்தவறுகளும் பழகிவிடக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும் என்பது என் எண்ணம் அதற்கு உதாரணமாக ஸ்பெக்ட்ரம் ஊழலையும்,காமன்வெல்த் ஊழலையும் சொல்லலாம்.நான் சொல்வதாலோ நீங்கள் சொல்வதாலோ யாரும் மாறிவிடப் போவதும் இல்லை, கேட்க போவதும் இல்லை,அதற்காக எது நடந்தாலும் கண்ணை மூடிக்கொண்டா இருக்க முடியும்?
பின்குறிப்பு.

மேற்கூறிய கருத்துக்கள் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டதல்ல .இது தவறு என்ற என் மன ஆதங்கத்தால் எழுதப்பட்டவையாகும்.

September 19, 2011

காலத்தை வென்றப் பாடகி எஸ்.ஜானகி.

எனக்குப் பிடித்தப் பின்னணிப் பாடகிகளில் முதலாவதாக இருப்பது எஸ்.ஜானகி அவர்கள்தான்.அவரின் குரலில் இனம் புரியாத ஏதோ ஒன்று இருக்கிறது.அப்படியே அந்தக் குரலுக்கு அடிமையாகிவிடுகிறோம்.கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் தமிழ் திரை உலக பின்னணி பாடகிகளில் முன்னணியில் இருந்தவர்.இப்போது அவர் திரை இசையில் பாடுவது மிகவும் குறைவு என்றே கருதுகிறேன்.இசைக்கடவுள் இளையராஜாவின் இசையில் இவர் பாடியப் பாடல்கள் அனைத்துமே மக்களிடத்தில் பெரும் வரவேர்ப்பை பெற்றுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.


எண்பதுகளில் ஜானகி அவர்கள் பாடாத திரைப்படங்கள் வெளிவருவது அரிதாகவே இருந்தது.இவரின் மற்றொருச் சிறப்பு குழந்தைகள் குரலில் பாடுவது ,இவர் குழந்தை குரலில் பாடினால் அவ்வளவு தத்ரூபமாக இருக்கும்.ஜானகி அவர்களின் குரல் தனித்துவம் வாய்ந்தது ஏனேனென்றால் அவர் குரல் மட்டும் தான் திரையுலகில் தனித்து ஒலிக்கும் குரல் ஆகும்.இவரைப் போல் பாடக்கூடியவர் இந்தி திரைஇசைப் பாடகி ஆஷா போன்ஸ்லேவைக் கூறலாம் இவரின் குரலும் ஜானகி அவர்களின் குரலும் கேட்பதற்கு ஒன்று போலதான் தோன்றும் என்பது என் கணிப்பு.ஜானகி அவர்கள் மிகவும் கடவுள் பக்தி உடையவர் அதனால் தானோ என்னவோ அவர் நிறைய பக்தி பாடல்களைப் பாடியிருக்கிறார்.பாடுவதோடு மட்டுமல்லாமல் பக்திப் பாடல்களுக்கு இசையும் அமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரைப் பற்றிய சில தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா உதவியுடன் கீழே தொகுக்கப்படுகிறது.
எஸ்.ஜானகி அவர்கள் 23.4.1938 அன்று ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம், பள்ளப்பட்லா என்னும் ஊரில் பிறந்தார்.இவரின் தந்தை பெயர் குணராமமூர்த்தி தாயார் பெயர் சத்தியவதி என்பது ஆகும் .ஜானகி அவர்கள் சிறு வயதிலேயே பாடத் தொடங்கி விட்டார்.நாதசுர மேதை பைடி சாமி என்பவரிடம் முறையாக இசைப் பயிற்சியைப் பெற்றார்.சென்னைக்கு இடம் பெயர்ந்த ஜானகி ஏ.வி.எம். ஸ்டூடியோவில் இணைந்து திரைப்படத் துறையில் நுழைந்தார்.1957ஆம் ஆண்டில் வெளி வந்த விதியின் விளையாட்டு என்ற திரைப் படத்தில் இடம் பெற்ற பெண் என் ஆசை பாழானது ஏனோ என்ற பாடல் இவரது முதல் பாடல் ஆகும். அடுத்த நாளே அவருக்கு தெலுங்குப் படத்தில் பாடும் வாய்ப்புக் கிடைத்தது. "எம்.எல்.ஏ" என்ற படத்தில் நீயாசா அடியார் என்ற பாடலை கண்டசாலாவுடன் இணைந்து பாடினார்.
இதைத் தொடர்ந்து பல படங்களில் பாடும் வாய்ப்புக் கிட்டியது.25 ஆண்டுகளில் தென்னிந்தியமொழிகளில் மட்டுமல்லாமல்,கொங்கினி,துளு,சௌராஷ்டிரம்,இந்தி,வங்காளம்,சமஸ்கிருதம்,சிங்களம்,ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆயிரக்காணக்கான பாடல்களைப் பாடினார்.1992 ஆம் ஆண்டில் இலங்கை சென்றிருந்த போது இவருக்கு ஞான கான சரஸ்வதி என்ற பட்டம் வழங்கப்பட்டது. தமிழ்,தெலுங்கு மொழிகளில் பல பக்திப் பாடல்களைத் தாமே எழுதி இசையமைத்துப் பாடியுள்ளார்.மௌனப் போராட்டம் என்ற தெலுங்குப் படத்திற்கு முதன் முதலில் இசையமைத்திருக்கிறார்.


இவரது கணவர் காலஞ்சென்ற ராம்பிரசாத். தனது மகன் முரளி கிருஷ்ணாவுடன்சென்னையில் வாழ்ந்து வருகிறார். முரளி கிருஷ்ணா சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.


ஜானகி அவர்கள் பெற்ற விருதுகள்.


1986 இல்தமிழ்நாடு அரசின்கலைமாமணி விருது.

2002 இல் கேரளா மாநில சிறப்பு விருது.

நான்கு முறை சிறந்தப் பாடகிக்கான தேசிய விருது பெற்றிருக்கிறார்.
1976 ல் பதினாறு வயதினிலே திரைப்படத்தில் வரும் செந்தூரப் பூவே என்ற பாடலுக்காகவும்,

1980 ல் ஒப்போல் என்ற மலையாளத் திரைப்படத்தில் வரும் எட்டு மனூரம் பழத்தில் என்ற பாடலுக்காகவும் ,1984 ல் சித்தாரா என்ற தெலுங்குப் திரைப்படத்தில் வரும் வென்னெல்லோ கோடாரி அந்தம் என்ற பாடலுக்காவும்,
1992 ல் தேவர் மகன் படத்தில் வரும் இஞ்சி இடுப்பழகா மஞ்ச சிவப்பளகா என்ற பாடலுக்காக என நான்கு முறை தேசிய விருதுப் பெற்றுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் பதினான்கு முறை கேரள மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருதும்,ஏழு தடவைகள் தமிழ்நாடு அரசின் சிறந்த பாடகிக்கான விருதும்,பத்து தடவைகள் ஆந்திர மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருதும் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.எ.ஸ் .ஜானகி அவர்களின் ரசிகர்கள் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் உள்ளனர்.அவர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமைப் படுகிறேன்.