February 27, 2012

தமிழ் சின்னத்திரை ஒரு பார்வை.

இன்று தமிழகத்தின் பெரும்பாலான அனைத்து வீடுகளிலும் முக்கிய அங்கத்தினராக இருக்கும் ஒரு தொலைக்காட்சி அலை வரிசை டிஸ்கவரி தமிழ்தான்.மற்ற தமிழ் அலை வரிசைகளில் தமிழ் நிகழ்ச்சியென்ற பெயரில் ஆங்கிலத்தில் பேசி தொகுத்து வழங்குவார்கள் .ஆனால் டிஸ்கவரி தமிழில் மட்டும் ஆங்கில நிகழ்ச்சிகளை அழகான தமிழில் தொகுத்து வழங்குகிறார்கள்.

தமிழ் மொழியை தாய் மொழியாய் கொண்டவர்களின் அலை வரிசைகள் தமிழை விட ஆங்கிலத்தில் அதிகமாகப் பேசித் தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களை அதிக அளவில் வேலைக்கு அமர்த்தியிருக்கிறார்கள்.குறிப்பாக பெரும்பாலான பெண் தொகுப்பாளர்கள் வடமாநிலங்களையும் மற்ற தென் மாநிலங்களையும் சேர்ந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள்.தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு சில தொகுப்பாளினிகள் இருந்தாலும் அவர்களுக்கு வாயில் தமிழே வராது.நாற்பது சதவீதம் தமிழும் அறுபது சதவீதம் ஆங்கிலமும் கலந்து ஆங்கிலத்தில் பேசுவார்கள்.அப்படியே தமிழில் பேச முயற்சி செய்தாலும் இப்படித்தான் வரும்.......அதாவது நடிகர் தனுஷ் பேசுவது போல் அந்தாளுக்கு "ள்" என்கிற எழுத்தே தெரியாது என்றே நினைக்கிறேன்.அவள் என்று சொன்னால் அவல் என்று நமக்கு புரிகிறது.அதேபோல் 'ண' வையும் ன என்றே உச்சரிக்கிறார்கள்.இது தனுஷுக்கு சிறு வயது முதல பழகிக்கொண்டது என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த தொகுப்பாளர்கள் தவறான உச்சரிப்பென்று தெரிந்தே மீண்டும் மீண்டும் அதையே செய்கிறார்கள்.அப்படி பேசுவதில் ஒரு வித கவர்ச்சி இருப்பதாக நினைத்துக் கொள்கிறார்களோ என்னவோ.அவர்கள் அப்படி கொச்சையாக பேசும்போது உண்மையில் கோபம்தான் ஏற்படுகிறது.சன் அலைவரிசையில் இந்த நிலை குறைவுதான் ஆனால் இந்த விஜய் அலைவரிசையில்தான் அநியாத்திற்கு எல்லோரும் ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்கள்.எனக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால் தவறு கண்டுபிடிக்க வில்லை.மாறாக ஒரு தமிழ் அலைவரிசை தமிழில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்காமல் ஆங்கிலத்தையும் ஏன் சேர்க்க வேண்டும் என்பதே என் ஆதங்கம்.டிஸ்கவரி அலைவரிசையில் அந்தந்த நிகழ்ச்சியின் மொழிப்பெயர்ப்பை கேட்கும்போது உண்மையிலே உடல் சிலிர்க்கிறது.இதே போல் மக்கள் தொலைக்காட்சி அலைவரிசையையும் சொல்லலாம் அழகான தமிழில் அருமையாக தொகுத்து வழங்குகிறார்கள்.அனைத்துமே பயனுள்ள நிகழ்ச்சிகள்.ஆனால் மக்கள் அலைவரிசையின் செய்திகளை தவிர்த்து விடுவது நல்லது.மருத்துவர் புராணமும் சின்ன மருத்துவர் புராணமும் பாடியே செய்தியை முடித்து விடுவார்கள்.அது மட்டுமல்லாமல் செய்தி வாசிப்பாளர் செய்தியை வாசிக்கும் போது ராமதாஸ் தொடர்பான செய்திகள் வரும்போது மருத்துவர் ராமதாஸ் என்றே குறிப்பிடுகிறார்.ஆனால் மற்ற தலைவர்களின் பெயரை உச்சரிக்கும் போது மொட்டையாக கருணாநிதி,ஜெயலலிதா,விஜயகாந்த் என்றே குறிப்பிடுகிறார்.இது ஒரு பாரபட்சமான செயல்.இதை தவிர்த்தால் நன்றாக இருக்கும்.



ராஜ் தொலைக்காட்சி அலைவரிசையின் நிகழ்ச்சிகளின் விளம்பர இடவேளையில் ஒரு வேளை உணவுக்கான சமையலை முடித்து விடலாம் அந்த அளவுக்கு விளம்பரங்களை ஒளி பரப்புகிறார்கள்.
கிட்டத்தட்ட பதினயிந்து நிமிடங்கள் இருக்கலாம்.

ஆங்கில அலைவரிசையான நேஷ்னல் ஜியோகிராபி மற்றும் கிஸ்ட்ரி அலைவரிசைகளில் தமிழில் மொழி பெயர்த்து நிகழ்ச்சியை வழங்குகிறார்கள்.ஆனால் டிஸ்கவரியில் மட்டும்தான் தனி தமிழ் அலைவரிசை இருக்கிறது.இருந்தாலும் அவர்கள் மொழிபெயர்ப்பும் அருமையாக இருக்கிறது.

செய்தி அலைவரிசைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் நேர்ந்து விட்டார்போல் ஒருபக்கமாகவே செய்திகள் வெளியிடுகின்றனர்.புதுவரவாக இருக்கும் புதியதலைமுறையின் செய்திகளை ஓரளவுக்கு கேட்கலாம் ஆனால் அவர்களின் மற்ற நேரலை நிகழ்ச்சிகள் படு மொக்கையாக இருக்கிறது.ஏதேனு ஒரு முக்கிய நிகழ்வு சம்மந்தமாக மூன்று நபர்களை கூட்டிவந்து கருத்து கேட்பார்களாம் ஆனால் அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே விளம்பர இடைவேளை என்பார்கள் அல்லது அடுத்த நபரை பேச அழைப்பார்கள்,இப்படியே இறுதியில் நிகழ்ச்சியின் நேரம் முடிந்து விட்டது மீண்டும் சந்திப்போம் என்று அவர்களை அழைத்து வந்தர்கான காரணம் நிறைவேறாமலே நிகழ்ச்சியை முடிப்பார்கள்.நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு ஒருமாதிரி இருக்கிறதோ இல்லையோ ஆனால் பார்த்துக்கொண்டுருக்கும் பார்வையாளர்களுக்கு சிறு வெறுப்பு தோன்றும் என்பதே என் எண்ணம்.புதிய தலைமுறை செய்தியின் வெற்றி புதிய யுக்திகளை புகுத்துவதுதான் உதாரணமாக ஒரு நேரலை நிகழ்ச்சியின் கலந்துரையாடலின் போது பார்வையாளரான நம் கருத்தை தெரிவிக்க தொலைபேசியில் அழைக்கலாம் அல்லது புதியதலை முறையின் முகநூல் பக்கத்தில் நம் கருத்தை பதிவு செய்யலாம்.ஒரு சில நிமிடங்களிலேயே நம் கருத்து தொலைக்காட்சியல் ஒளிபரப்பாகிவிடும்.இந்த யுக்தியை முதல்முறையாக புதியதலைமுறைதான் மேற்கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.

எது எப்படியோ இந்த தமிழ் தொலைக்காட்சி அலைவரிசைகளெல்லாம் ஆங்கில வார்த்தைகளை குறைத்து தமிழில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினால் அருமையாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.