free mail

December 31, 2011

விவாகரத்துக்கு முக்கிய காரணம் பேஸ்புக்.

உலகம் முழுவதும் நடக்கும் மூன்றில் ஒரு விவகாரத்துக்கு சமூக இணையதளமான பேஸ்புக்தான் காரணம் என்று இங்கிலாந்து சட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, விவாகரத்து சட்ட ஆலோசனை அளிக்கும் டைவர்ஸ் ஆன்லைன் நிறுவன நிர்வாக இயக்குனர் மார்க்கென்னன் கூறியுள்ளார்.


டெய்லி மெயில் நாளேடு வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:கடந்த ஓராண்டில் பெறப்பட்ட விவாகரத்துகளில் 33 சதவீதவழக்குகளின் நீதிமன்ற வாதங்களில் பேஸ்புக் இடம்பெற்றது. எங்களிடம் வந்த விவாகரத்து தொடர்பான 5,000 புகார்களில் மூன்றில் ஒன்றில் பேஸ்புக் பற்றி மனுதாரர்கள் குறிப்பிட்டனர்.பேஸ்புக் பக்கங்களில் தங்கள் நண்பர்களுடன் பலர் மனம் திறந்து தகவல்களை பரிமாறிக் கொள்கின்றனர். அவற்றில் தங்கள் முன்னாள்காதல், கள்ளக் காதல், அலுவலக நட்பு ஆகியவை பற்றி தெரிவிக்கின்றனர்.


இவை வாழ்க்கை துணைக்கு தெரிய வரும்போது குடும்பத்தில் பிரச்னை ஏற்படுகிறது. இதனால் விவாகரத்தை நாட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மேலும், பேஸ்புக் தொடர்புமூலம் கள்ளத் தொடர்பு ஏற்படுத்தவும், காதலை வெளிப்படுத்தவும் எளிதாக முடிகிறது. அதை வாழ்க்கை துணையிடம் இருந்து மறைக்க முயன்றாலும் நண்பர்கள் அல்லது பேஸ்புக் பக்கத்தில் தேடுவதன் மூலம் கணவர் அல்லது மனைவியால் கண்டுபிடித்து விட முடிகிறது. விவாகரத்து வழக்கில் பேஸ்புக் பதிவுகளை சாட்சியாக காட்டுவோர் அதிகரித்துள்ளதே இதற்கு சாட்சி. இவ்வாறு டெய்லி மெயில் செய்தி தெரிவிக்கிறது.


செய்திகள்.www.dinakaran.com
இதிலிருந்து என்ன தெரிகிறது சமூகத்தை பலப்படுத்தவும்,பலவீனப்படுத்தவும் பேஸ்புக்கால் முடிகிறது என்று காரணம் கொள்ளலாம்?

ஆட்சி மாற்றத்துக்கும் பேஸ்புக், வாழ்கை மாற்றத்துக்கும் பேஸ்புக் .

December 29, 2011

இந்திய அணியைப் பற்றி என்ன சொல்ல ஆனால் சொல்கிறோம்.

எப்பவாச்சும் இப்படின்னா பராவாயில்ல எப்பவுமே இப்படின்னா எப்படி!அந்த மாதிரி கதையாகிப் போச்சு இந்திய அணியின் நிலமை.எவ்வளவுதான் வக்காலத்து வாங்குறது அடுத்த தொடர் அதற்கடுத்த தொடரென்று ஒவ்வொரு முறையும் ஒரே முடிவுதான் பதிலாக இருக்கிறது .


நாங்க வெளிநாட்டு சுற்று பயணங்களுக்கு சரிபட்டு வரமாட்டோம் என்று மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டிருக்கிறது இந்திய அணி.இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் போதுதான் வீரர்களுக்கு காயம்,காலநிலை ஏற்புடையதாக இல்லை என்றார்கள்.இப்போது என்ன காரணம் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.அதற்கும் தகுந்த காரணம் யோசித்து வைத்திருப்பார்கள்.இந்திய ரசிகர்கள் மிக மிக ஆவலுடன் எதிர்பார்த்த தொடர் இதுவென்றால் மிகையாகாது.ஏனென்றால் உலக கிரிக்கெட் அணிகளிலேயே வலிமையான அணி எதுவென்று நேற்று இங்கிலாந்து ரசிகரிடம் கேட்டால் கூட இந்திய அணிதான் என்று யோசிக்காமல் பதில் வரும்.அந்த அளவு வலிமையான அணியாக காட்சி தந்த இந்திய அணி மேல் அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தான் ரசிகன்.


ஆனால் வலிமை என்ற அந்த பிம்பம் இவ்வளவு விரைவாகவும்,எழிதாகவும் உடைந்துவிடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
ஆஸ்திரேலியாவுக்கெதிரான முதல் போட்டி துவங்கு முன் இருந்த இந்திய ரசிகனின் மனநிலையும் இப்போது இருக்கும் மனநிலையையும் ஒப்பிட்டால் வேதனைதான் மிஞ்சும்.எப்படியும் டெஸ்ட் தொடரை மொத்தமாக வெல்வார்கள் என்று இறுமாந்திருந்தால் இந்திய அணியோ முதல் போட்டியில் படுகேவலமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோற்றிருக்கிறது.ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள ஆஸ்திரேலிய அணியிடம் தோற்றிருந்தால் கூட இந்த அளவிற்கு வெறுப்பு ஏற்பட்டிருக்காது.ஆனால் நாம் தோற்றதோ எண்பது சதவீதம் புது முக வீரர்களை கொண்ட அணியிடம் அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் கடந்த பெரும்பாலான போட்டிகளில் திறமையற்ற அணியாகவே செயல்பட்டிருக்கிறது.அப்படியிருந்த அணி எழுச்சி காண இந்திய அணி உதவியதா அல்லது இந்திய அணிதான் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறதா?இதற்கான பதிலும் இந்திய அணியிடமே இருக்கிறது.இந்திய அணி மேலும் மேலும் இது போன்ற தோல்விகளை சந்தித்துக்கோண்டிருந்தால் ரசிகர்களுக்கு கிரிக்கெட் மீதான மோகம் மறைந்து வெறுப்பு ஏற்படத் துவங்கி விடும்.ஏறக்குறைய நான் வெறுப்படையும் நிலைக்கு வந்து விட்டேன்.அடுத்த போட்டி என்றைக்கு என ஊடகங்கள் டமாரம் அடிக்காதவரை கிரிக்கெட் ரசிகன் தப்பினான்.
முதலில் ஊடகங்கள் மீண்டும் ஏமாற்றினார் சச்சின் என்ற வாசகத்தை அழித்து விட வேண்டும்.சச்சின் நூறாவது சதம் அடிக்குறாரோ இல்லையோ ஆனா இந்த ஊடகங்களுக்கு விரைவிலேயே உயர் இரத்த அழுத்தம் வந்துவிடும் அப்படி இருக்கிறது ஊடகங்களின் அலப்பரை.

December 27, 2011

இந்தியாவின் பிரம்மாண்டமான சில அணைகள்.

அணை என்பது வெறும் நீர் தேக்கத்தோடு முடிந்து போவதில்லை.அதில் கோடிக் கணக்கானோரின் வாழ்வாதாரமே நிறைந்துள்ளது.விவசாயத்திற்கும், குடிநீருக்காகவும் பல பகுதி மக்கள் அணைகளையே நம்பி உள்ளனர்.விதிவிலக்காக சில அணைகள் மின் உற்பத்தி செய்யவும் உருவாக்கப்பட்டுள்ளன.இந்தியாவில் நூற்றுக்கணக்கான அணைகள் இருக்கிறது அதில் பிரம்மாண்டமான சில அணைகளின் தகவல்கள் இதோ.


பாக்ரா அணை


இமாச்சல பிரதேசத்தில் அமைந்திருக்கும் இந்த அணை சட்லெட்ஜ் நதியின் குறுக்கே கட்டப்பட்டதாகும்.பாக்ரா அணையின் உயரம் .741 அடி (226 மீ)நீளம்.1,700 அடி (520 மீ)உடையதாகும்.தெக்ரி அணைஇந்த அணை உத்தரகண்ட் மாநிலத்தில் பகீரதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையாகும்.இதன் உயரம்.
உயரம் 260 மீ (850 அடி)

நீளம் 575 மீ (1,886 அடி)
நீர் கொள்ளளவு.(2,100,000 ஏக்கர்.
அணையின் கட்டுமான பணிகள் 1978 ஆம் ஆண்டு துவங்கி 2006 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.


ஹிராகுட் அணைஇந்த அணை ஒடியா மாநிலத்தில் அமைந்துள்ளது.இந்த நதி மகாநதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.இதன் உயரம் 61 மீ(200 அடி)நீளம்.4800 மீட்டர் ஆகும்.


நாகார்ஜுன் சாகர் அணை


ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த அணை கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.ஐம்பதுகளில் கட்டி முடிக்கப்பட்ட இந்த அணையின் செலவு சுமார்1300 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.அணையின் உயரம். 124 மீட்டர் (407 அடி)நீளம்.1450 மீட்டர் (4,757 அடி.


சர்தார் சரோவார் அணை
இந்த அணை குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளது.நர்மதா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.இதன் உயரம்.138 மீட்டர் (453 அடி)நீளம்.1210 மீட்டர்,3970 அடி ஆகும் .இந்த அணை 2008 ஆம் கட்டி முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

December 19, 2011

கை உடைந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா.

அ.தி.மு.க பொது செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில் அ.தி.மு.,க வில் இருந்து மொத்தம் 12 பேரை நீக்குவதாக அறிவித்துள்ளார்.சசிகலா,


நடராஜன், தினகரன், சுதாகரன், திவாகர் ,பாஸ்கரன்,ராமசந்திரன், வெங்கடேசன், ராஜராஜன், குலோத்துங்கன்,ராவணன், மோகன் உள்ளிட்ட 12 பேரும் அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்த அவர் மேலும் இந்த 12 பேருடன் கட்சிக்காரர்கள் யாரும் இனி எவ்வித தொடர்பும் கொள்ள கூடாது என்று கடும் எச்சரிக்கையும் வெளியிட்டுள்ளார். 12 பேரும் சசியின் நெருங்கிய வட்டாரம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியால் தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்கள் மகிழ்ந்திருப்பார்கள்.அந்த அளவுக்கு அ.தி.மு.க வில் சசிகலா குடும்பத்தாரின் ஆதிக்கம் இருந்து வந்தது.பல ஆண்டுகளுக்கு முன்னரே இதை பிரபல பத்திரிகைகள்,வார இதழ்கள் போன்றவை வெளிப்படையாக சுட்டிகாட்டியப் பின்னரும் ஜெயலலிதா கண்டு கொள்ளவில்லை.ஆனால் இப்போது யாரும் எதிர்பாரா வண்ணம் அனைவரும் அதிர்ச்சியடையம் விதத்தில் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.உண்மையில் ஜெயலிலிதா ஒரு கை அல்ல இரு கையும் உடைந்த நிலையில் இருக்கிறார். தமிழ்நாட்டைப் பொறுத்த வரை இது மகிழ்ச்சியான விசயமாக இருந்தாலும்,முதல்வரைப் பொறுத்தவரை இது இளப்புதான்.தொண்ணூறுகளில் ஒற்றை பெண்மணியாய் போராடிய காலத்தில் ஜெயலலிதாவுக்கு பக்கதுணையாகவும்,ஆதரவாகவும் இருந்தவர் சசிகலா என்பது எவராலும் மறுக்க முடியாது.இன்று முதல் ஒரு வாரத்துக்கு ஊடகங்களுக்கும்,இணைய பதிவர்களுக்கும் இதைப்பற்றி ஆராயவே பொழுது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.தற்போது தமிழகத்தில் நடந்த நடைப்பெற்றுக்க கொண்டிருக்கிற நிகழ்வுகளால் பொதுமக்களிடம் கெட்டப்பெயரை வாங்கி வைத்திருக்கும் முதல்வர் இனிமேலாவது நற்பெயரை சம்பாதிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

December 16, 2011

தலைவனென்றால் போராட வேண்டும்?

தமிழகத்தின் பெரும் பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது முல்லை பெரியாறு அணை.அணை உடைந்து விடும் என்ற பெயரில் கேரள அரசு செய்யும் அடவாடித்தனங்கள் எல்லை மீறிக் கொண்டிருக்கும் நிலையில் பதில் சொல்ல வேண்டிய தமிழக அரசோ வெற்றுத் தீர்மானங்களை நிறைவேற்றி நாங்களும் போராடுகிறோம் என்று அறிக்கை விடுகிறார்கள்.


அரசியல் கட்சிகளுக்கு பஞ்சமில்லாத தமிழ்நாட்டில் போராட்ட களத்தில் ஒரு சில கட்சிகளை தவிர மற்ற அரசியல் கட்சிகளும் தலைவர்களும் என்ன ஆனார்கள் என்ற தகவலுமில்லை.முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் ஓங்கி ஒலிக்கும் ஒரே குரலாக என் கண்களுக்கு தென்படுவது திரு.வைகோ அவர்களின் குரல் மட்டும் தான்.கேரளாவில் போராட்டக்காரர்கள் வைகோ ஒழிக என்று கோசம் எழுப்புகிறார்களேயொளிய ஜெயலலிதா ஒழிக தமிழினத் தலைவர் கருணாநிதி ஒழிக என்று யாரும் கோசம் எழுப்பவில்லை.நிலமை இப்படி இருக்க கடமை உணர்சியுடைய சில அரசியல்வாதிகள் தங்கள் வீட்டிலிருந்தபடியெ அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.அவர்களுக்கென்ன அல்லல்படுவது தமிழர்கள் தானே தமிழினத் தலைவர்கள் இல்லையே அதனால் அறிக்கை மட்டும் போதும் என்று நினைத்திருப்பார்கள்.ஆட்சி அதிகாரங்களுக்கு ஆசைப்படும் தலைவர்கள் போராட்டக்களத்தில் முன் நின்று போராட வேண்டும் என்று நினைப்பதில்லை.லட்சக்கணக்கான மக்களுக்கு தலைவர் என்று சொல்லிக் கொள்ளும் அவர்கள் போராடினால் அவர்களுக்கு பின்னால் லட்சம் பேர் திரளுவார்கள்.


தனி மனிதனான நான் போராடினால் ஏதாவது ஒருச் சிறையில் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருப்பேன்.என்னை மீட்க என் குடும்பத்தார் மட்டுமே போராட வேண்டும்.ஆனால் தலைவர்கள் மேல் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்தால் கூட அதை எதிர்த்து போராட தொண்டன் என்ற பெயரில் சாதாரண குடிமகன் இருக்கிறான்.தனி மனிதர்களான நம்மால் என்ன செய்ய முடியும் நண்பரிடமோ அல்லது பக்கத்து வீட்டுக்காரரிடமோ நாலு கெட்டவார்த்தைகளால் அர்சித்து விட்டு அடுத்த வேலைய பார்க்க போய்விடுவோம்.இதுதான் யதார்த்தம்.இந்த யதார்த்தையும் மீறி ஒரு சிலர் இருப்பர் அவர்கள்தான் தலைவராகியிருப்பார்கள் எதிர்காலத்தில் தலைவராகவும் இருப்பார்கள்.ஒரு சமூகமோ ஒரு இயக்கமோ ஒரு நாடோ எதுவாயினும் முன்னேற அல்லது எழுச்சி காண ஒரு தீரமிக்க தலைவன் தேவைப்படுகிறான்.ஆனால் தமிழக மக்களின் துரதிஷ்டம் தலைவர்கள் நிறைய கூடவே குறைகளும்.எது எப்படியோ தலைவர்களோ தொண்டர்களோ அனைவரும் ஒரு அணியில் இணைந்தால்தான் நம் வலிமை என்னவென்று உலகுக்கு பறைசாற்ற முடியும்.

December 11, 2011

வாழ்த்துகள் சூப்பர் ஸ்டார்.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்(12-12-2011)உண்மையிலேயே ரஜினி ரசிகர்களுக்கு இது ஒரு திருநாள்தான்.ரசிகர்கள் மன்றங்கள் சார்பாக தங்களின் பணத்தில் அன்னதானம் வழங்குவதும்,ஏழைகள் பயன்பெறும் விதத்தில் சிறு உதவிகளான தையல் இயந்திரங்கள் வழங்குவது,வேட்டி,சேலை,கல்வித்தொகை வழங்குவது என ரஜினி ரசிகர்கள் தங்களால் இயன்ற உதவியை வழங்கி வருகிறார்கள்.அது மட்டுமல்லாமல் கலைநிகழ்ச்சிகள்,விழையாட்டு போட்டிகள் என அன்றைய தினமே திமிலோகப்படும்.எனக்கு ரஜினி என்ற நடிகர் மீது ஈடுபாடு வர காரணமும் ஒரு ரசிகர் மன்றம்தான்.கன்னியாகுமரி மாவட்டத்தில் காட்டாத்துறை என்னும் ஊரின் அருகே இருக்கும் தும்பயன் தோட்டம் என்ற சிறு கிராமத்தில்தான் அந்த ரசிகர் மன்றம் இருந்தது.தும்பயன் தோட்டம் என்னுடைய பாட்டியின் ஊர் என்பதால் என்னுடைய குழந்தை பருவத்தை பெரும்பாலும் அங்குதான் களித்தேன்.அதனால் அங்கிருந்த ரஜினி ரசிகர் மன்றம் மூலமும் அவர்கள் நடத்தும் நிகழ்சிகள் மூலமும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற பெயர் என் மனதில் கவர்ச்சிகரமாக நுளைந்தது.என்னை பொறுத்த வரை ரஜினியின் ரசிகர்கள் மற்ற ஏனய நடிகர்களின் ரசிகர்களை விட வித்தியாசமானவர்கள்.இதற்கு விளக்கம் கூற அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.ஏனென்றால் ரஜினியைப் போல அவர் ரசிகர்களும் தனி வழியைக் கடைபிடிப்பவர்கள்.அப்படிப்பட்ட அன்பு ரசிகர்களின் சார்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துகள்.


thankyou...google.images.com

December 9, 2011

உலகக் கோப்பையை வென்ற அணிகள் ஒரு பார்வை.

இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி ஆனால் இந்திய மக்களால் அதிகம் ரசிக்கப்படும் விளையாட்டு கிரிக்கெட்.ஐந்து வயது சிறுவன் முதல் எண்பது வயது முதியவர் வரை என அனைத்து தரப்பினரையும் தன்னுடைய ரசிகர்களாக வைத்திருக்கிறது கிரிக்கெட்
.கிரிக்கெட்டை கண்டு பிடித்து பல ஆண்டுகள் வரை டெஸ்ட் போட்டிகள்தான் நடைபெற்றன.1970 களில்தான் ஒரு நாள் போட்டிகள் அறிமுகப் படுத்தப்பட்டன.1975 ஆம் ஆண்டு முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி துவங்கப்பட்டது.இதன் பின்னர்தான் கிரிக்கெட்டிற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.இது வரை மொத்தம் பத்து முறை உலககோப்பை போட்டிகள் நடந்துள்ளன.அதில் வெற்றிப் பெற்ற அணிகளின் சிறு பட்டியல் இதோ.

1975 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற முதல் ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதின இதில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிப் பெற்றது.போட்டி விவரம்.மே.தீ.291/ 60 ove 8 விக்.

ஆஸ்.274/58.4 overs all out.


1979 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் மீண்டும் மேற்கிந்திய தீவு அணி வெற்றி வாகை சூடியது.இது இங்கிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து மண்ணில் கிடைத்த வெற்றியாகும்.போட்டி விவரம்.

மே.தீ.286/60 overs . 9 Wickets


இங்கி: 194/51 overs all out1983 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைப்பெற்ற போட்டியில் இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியை தோற்கடித்து வெற்றி வாகை சூடியது.

போட்டி விவரம்.
இந்தியா:183/54.4 overs all out


மே.தீ:140/52 overs all out


1987 ல் நடைப்பெற்ற உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவும் , பாகிஸ்தானும் இணைந்து நடத்தின.இத் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியும் இங்கிலாந்து அணியும் மோதின இதில் ஆஸ்திரேலிய அணி வெற்றிப் பெற்றது.

போட்டி விவரம்.
ஆஸ்: 253/50 overs 5 Wickets


இங்கி: 246/50 overs 8 Wickets
1992 ஆம் ஆண்டு நடைப்பெற்ற போட்டிகளை ஆஸ்திரேலியாவும் , நியூசிலாந்தும் இணைந்து நடத்தின.இத்தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு எதிராக வெற்றிப்பெற்றது.போட்டி விவரம்.பாகி: 249/50 overs 6 Wickets


இங்: 227/49.2 all out
1996 ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை போட்டிகளை இந்தியா , பாகிஸ்தான் , இலங்கை ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்தின.இத்தொடரின் இறுதி போட்டியில் இலங்கை அணி ஆஸ்திரேலிய அணியை வென்றது.
போட்டி விவரம்.ஆஸ்: 241/50 overs 7 Wickets


இலங்: 245/46.2 overs 3 Wickets
1999 ல் இங்கிலாந்தில் நடைப்பெற்ற தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் அணியை தோற்கடித்தது.

போட்டி விவரம்.ஆஸ்: 133/20.1 overs 2 wickets


பாகி:132 All out 39 Overs
2003 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைப்பெற்ற உலகக்கோப்பை போட்டி தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் இந்திய அணி தோல்வியை பெற்றது.

போட்டி விவரம்.
ஆஸ்: 359/ 50 overs 2 wickets


இந்தியா: 234 All out in 39.2 Overs

2007 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளில் நடைப்பெற்ற உலகக்கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி இலங்கை அணியை வீழ்த்தி நான்காவது முறையாக கோப்பையை வென்று சாதனைப் படைத்தது.
போட்டி விவரம்.
ஆஸ்.281/ 38.0 overs 4 wickets


இலங்.215 /36.0 overs 8 wickets .

2011 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை போட்டிகள் இந்தியா , இலங்கை , வங்காளதேசம் ஆகிய நாடுகளில் நடைபெற்றது.மும்பையில் நடைப்பெற்ற பரபரப்பான இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக உலக கோப்பையை வென்றது.

போட்டி விவரம்.
இந்தியா.277/48.2 overs 4 wickets;


இலங்.274/50 Overs 6 wickets,

December 7, 2011

இயற்கையின் பத்து பிரம்மாண்டங்கள்.

இயற்கை அன்னையின் பிரம்மாண்டங்களில் சில.கிரேட் பேரியர் ரீப் . ஆஸ்திரேலியாஇது உலகின் மிகப்பெரிய பவளப்பாறைகளின் சங்கமம் ஆகும். வடக்கு கிழக்கு கடற்கரை சுமார் 344.400 சதுர
கிலோமீட்டர் ஆகும்.ஒரு பகுதிக்கு 2,600 கிலோமீட்டர் .இந்த நீட்சி 2.900 தனிப்பட்ட திட்டுகள் மற்றும் 900 தீவுகளை
உள்ளடக்கிய உலகின் மிக பெரிய பவள பாறைகள் அமைப்பு ஆகும்.இங்கு
ஸ்கூபா டைவிங், ஸ்நோர்கெலிங், போன்ற பொழுதுபோக்குகள் பிரபலமானவை.
நயாகரா நீர்வீழ்ச்சி,அமெரிக்கா

கனடா மற்றும் ஐக்கிய அமெரிக்கா இடையிலான எல்லையில் இந் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது, நயாகரா
நீர்வீழ்ச்சி மூன்று தனி நீர்வீழ்ச்சிகளை கொண்டிருக்கிறது.

இது உயரமானது அல்ல, ஆனால் அதிக அகலமும் லட்சகணக்கான கேலன் நீரையும் சுமந்து கொண்டிருக்கிறது.
குனங் முலு தேசியப்பூங்கா,மலேசியாஇந்த பூங்கா உலகின் மிக விரிவான மற்றும்
கண்கவர் குகை அமைப்பு கொண்டிருக்கிறது.
இங்கு 600 அடி உட்புற
நீர்வீழ்ச்சிகளை காண முடியும். அது மட்டுமல்லாமல் இங்கு பத்து லட்சத்துக்கும் அதிகமான வெளவால்கள்
உயிர் வாழ்கின்றன.இதன் மொத்தப் பரப்பு 754 சதுர கி.மீட்டர்கள்.

விக்டோரியா நீர்வீழ்ச்சி, சாம்பியா ,ஜிம்பாப்வே


விக்டோரியா நீர்வீழ்ச்சியில் ஒரு நிமிடத்தில் வெளியேறும் தண்ணீரின் அளவு 120 மில்லியன் கேலன்கள் ஆகும். 1,500 மீட்டர் உயரமுடைய குன்றின் மீதிருந்து
விக்டோரியா நீர்வீழ்ச்சி கீழே விழுகிறது.
பரீகுடின் எரிமலை,மெக்ஸிகோ


பரீகுடின் எரிமலை 1943 ஆம் ஆண்டு வெடித்ததில் இரு கிராமங்கள் எரிமலைக் குழம்பால் மூடப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.இன்றும் இந்த எரிமலை லாவா குழம்பை உமிழ்ந்து கொண்டிருக்கிறது.இதன் உயரம் 2,800 மீட்டர்கள்.

ஏஞ்சல் நீர்வீழ்ச்சி,வெனிசுலா


807 மீட்டர் உயரம் கொண்ட ஏஞ்சல் நீர் வீழ்ச்சி உலகின் உயரமான இயற்கை நீர்வீழ்ச்சிகளில் உயரமானது ஆகும்.

அரோரா பொரியலிஸ்,அரோரா பொரியலிஸ் என்பது இயற்கையின் மாற்றத்தால் ஏற்படும் ஒரு வகை ஒளியின் வாண வேடிக்கை ஆகும். இது முழுக்க முழுக்க இயற்கையின் ஜாலமாக கருதப்படுகிறது.இது பெரும்பாலும் நார்வே,
ஸ்வீடன், பின்லாந்து, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, அலாஸ்கா மற்றும் கனடா போன்ற
நாடுகளில் இந்த ஒளி நிகழ்வு அடிக்கடி தோன்றுவதாக அறியப்படுகிறது.பெரும்பாலும் செப்டம்பர் ,ஏப்ரல் ,அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களில் வானத்தில் இயற்கையின் வாணவேடிக்கைகள் நடைபெறுகிறது.

எவரெஸ்ட் சிகரம்,

எவரெஸ்ட் சிகரம் பூமியில் மிக உயரமான பகுதி ஆகும்.எவரஸ்ட்டின் உயரம். சுமார் 8.844 மீட்டர்
இது ஒவ்வொரு ஆண்டும் சுமார் இரண்டு முதல் ஐந்து மில்லி மீட்டர் வளர்ச்சி பெறுவதாக கண்டறியப்பட்டுள்ளது.ரியோ டி ஜெனிரோ துறைமுகம்.பிரேசில்

ரியோ டி ஜெனிரோ துறைமுகம் சுமார் 30 கி.மீட்டர்கள் நீளத்திற்கு இயற்கையாய் அமைந்த துறைமுகம் ஆகும்.

கிராண்ட் கேனியன்,அரிசோனா,அமெரிக்காகிராண்ட் கேனியன் பத்து லட்சம் வருடங்களுக்கு முன்பே கொலராடோ நதியின் நீரோட்டத்தால் உருவானதாக வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள்.இது
445 கி.மீட்டருக்கு மேல் நீளமும் கிட்டத்தட்ட 26 கி.மீட்டர் அகலமும் கொண்டதாகும்.இது பார்ப்பதற்கு வறண்ட பாலைவனம் போல் காட்சி அளிக்கும் ஓர் இயற்கையின் அ ற்புதம்.

December 3, 2011

November 28, 2011

இயற்கையின் பிரம்மாண்டங்களில் சில.

பூமியில் இயற்கை அன்னை எவ்வளவோ பிரம்மாண்டங்களையும் அற்புதங்களையும் படைத்திருக்கிறாள்.ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணத்தோடு படைக்கப்பட்டவை.அவை அமைதியாய் இருந்தால் நமக்கு மகிழ்ச்சி.சீற்றம் கொண்டால் பெரும் இழப்பை நாம் சந்திக்கிறோம்.ஆனால் இயற்கையின் படைப்புகளுக்கு எந்த ஒரு இளப்பும் இல்லை.எப்போதுமே இயற்கை தன் விருப்பம் போலவே இருக்கிறது. அதை மாற்ற மனிதர்களாகிய நாம் முயற்சித்தால் மாற்றம் நம்மிடையேதான் நேரும்.ஆதலால் இயற்கையை அதன் வழியிலேயே விட்டு விடுவோம்,இயற்கையின் அன்பையும்,பலனையும் பெறுவோம்.

மவுண்ட் மசாமா எரிமலை,ஒரேகான்,அமெரிக்கா

இந்த எரிமலை க்ரேட்டர் ஏரியின் நடுவே அமைந்துள்ளது.இது 6,000 ஆண்டுகள் பழமையான எரிமலை.வெடிப்பிற்கு முன்பு மலையாக இருந்த போது இதன் உயரம் 12,000 அடியாக இருந்தது ஆனால் வெடிப்பு நிகழ்ந்த பின்பு 1,900 அடி ஆழமான பள்ளமாக உருவாகியது.பின்பு 1902 ல் கிரேட்டர் ஏரியில் செயற்கை தீவு உருவாக்கப்படு அப்பகுதி முழுவதும் தேசிய பூங்காவாக பிரகடனப்படுத்தப்பட்டது.


அமேசான் காடுகள்

பிரேசில் ,தென் அமெரிக்கா.

இது உலகின் மிகப் பெரிய காடாகும்.இதன் பரப்பளவு.55 லட்சம் சதுர கிலோமீட்டர்கள்(நிலத்தில் பத்து விழுக்காடு)

அமேசான் காடு
பிரேசில்,பெரு,கொலம்பியா,வெனிசுலா,ஈக்வேடார்,பொலிவியா,கயானா,பிரான்ஸ் (பிரஞ்சு கயானா)
போன்ற நாடுகளில் பரவியுள்ளது.அதிக பட்சமாக பிரேசிலில் அறுபது விழுக்காடும் ஏனைய நாடுகளில் நாற்பது விழுக்காடு என பரவியுள்ளது.
அமேசான் காடுகளில் உள்ள மரங்கள் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மெட்ரிக் டன் கார்பன்டை ஆக்ஸைடை சுவாசித்து ஆக்சிஜனை வெளியிடுகிறது.இது ஒரு இயற்கையின் வரப்பிரசாதம்.சகாரா பாலைவனம்.ஆப்ரிக்கா


சாகரா உலகின் மிகப்பெரிய பாலவனம் ஆகும். இதன் பரப்பளவு தொண்ணூறு லட்சம் சதுர கிலோமீட்டர்களாகும்.இப்பாலைவனம் இருபத்தையிந்து லட்சம் ஆண்டுகள் பழமையானது.


பைக்கால் ஏரி,ரஷ்யா


இது உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரியாகும்.பைக்கால் ஏரியின் ஆழம். 1637 மீட்டர். 23,600 கன கிலோ மீட்டர் நீரும் தன்னகத்தே கொண்டுள்ளது.உலகில் உள்ள ஏரிகள் யாவற்றினும் மிகப்பழைய ஏரியும் ஆகும். உலகில் நீர்ம நிலையில் நிலத்தின் மேற்புறத்தில் உள்ள நீரில் 20% இந்த ஓர் ஏரியில் உள்ளது. ரஷ்யாவின் நன்னீரில் 90% இவ்வேரியில் உள்ளது.மூன்று கோடி ஆண்டுகள் பழமையான நன்னீர் ஏரி எனவும் கருதப்படுகிறது.


ஜெனரல் ஷெர்மன்

இது உலகின் மிகப் பெரிய மரம் என கணக்கிட்டிருக்கிறார்கள்.இம்மரம் அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மகாணத்தில் இருக்கிறது.இதன் உயரம்.270 அடி,அடிப்பாக சுற்றளவு.130 அடி,
இதன் எடை தோராயமாக .28 லட்சம் கிலோவுக்கும் மேல்.

November 25, 2011

ஸ்டீபன் ஹாஃக்கின்ஸ் என்றொரு தன்னம்பிக்கை.

தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக ஸ்டீபன் ஹாஃக்கின்ஸை தாராளமாக கூறலாம்.மொத்த உடலுமே இயங்காத நிலையில் அண்டத்தை பற்றி பல புத்தகங்கள் காலத்தைப் பற்றிய ஆராய்ச்சி என மனிதர் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறார்.எனக்கு ஹாஃக்கின்ஸ் அறிமுகமானது டிஸ்கவரி தொலைக்காட்சி மூலமாகத்தான்.இந்த சாதனை மனிதரைப் பற்றி சில குறிப்புகள் http://ewow.lk இணையத்தின் உதவியுடன் கீழே.


2005-ம் ஆண்டு வீல் நாற்காலியில் அமர்ந்தபடி தொலைக்காட்சி நிலையத்துக்கு செவிலியர்கள் துணையுடன் வந்தார் 63 வயதான ஸ்டீபன் ஹாஃக்கின்ஸ்.கை,கால்,வயிறு,தலை என உடலின் எந்தப் பாகமுமே செயல்படாத நிலை.அவரது வீல் நாற்காலியில், வலது கண் அசைவின் மூலமாக இயங்கும் கணினியும், வாய்ஸ் ஸென்சரும் இருந்தது. பிரிட்டிஸ் டே டைம் டாக் ஷோ நிகழ்ச்சி நடத்திய ரிச்சர்ட் மற்றும் ஜூடி கேட்ட கேள்விகளுக்கு கணணி மூலம் எளிதாகப் பதில் சொன்னார் ஸ்டீபன்.
‘‘பெருவெடிப்பு எனப்படும் ‘பிக் பாங்’ ஏற்படும் முன்னர்,அண்ட வெளியில் என்ன இருந்தது?’’ என்று கேட்டார் ரிச்சர்ட். ‘‘வட துருவத்தின் வடக்கில் என்ன இருக்குமோ அது!’’என்று சாதுர்யமாகப் பதில் சொல்லி அனைவரையும் அசத்தினார் ஸ்டீபன். கை தட்டிப் பாராட்டியவர்கள், ‘‘வாழ்க்கை எப்படி இருக்கிறது?’’ எனக் கேட்டார்கள். ‘‘முன்னை விட சுவாரஸ்யமாகவும், சவால் நிறைந்ததாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது’’ என்றார். ‘‘இந்த உடல் நிலையுடன் உண்மையில் சந்தோஷமாக இருக்க முடியுமா?’’ என்று தயங்கித் தயங்கிக் கேட்டார்கள். ‘‘எதை இழந்தீர்கள் என்பதல்ல; என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!’’ என்றார் ஸ்டீபன்.


பிரிட்டனில் 1942-ம் வருடம் பிறந்த ஸ்டீபன், படிப்பில் படு சுட்டியாக இருந்தார். ஆக்ஸ்ஃபோர் யூனிவர்சிட்டியில் மூன்றாவது வருடம் படித்துக் கொண்டு இருந்தபோது, தன் உடல் தளர்ந்திருப்பதை உணர்ந்தார். காரணமின்றி அடிக்கடி கீழே விழுந்தார்.21-வது வயதில் உடலெங்கும் தசை மாதிரிகளை வெட்டி எடுத்துப் பரிசோதித்தும், மருத்துவர்களால் தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை. ஆனால், இரண்டு அல்லது மூன்று வருடத்துக்கு மேல் உயிர் வாழ முடியாது என்பதை மட்டும் தீர்மானமாகச் சொன்னார்கள்.
துயரத்திலிருந்த ஸ்டீபனுக்கு எதிர் வார்டில் ஒரு சிறுவன் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டான். சில நாட்களிலேயே எதிர்பாராமல் நிகழ்ந்த அந்தச் சிறுவனின் மரணம், ஸ்டீபனுக்கு பயம் தருவதற்குப் பதிலாகத் தைரியம் கொடுத்தது. அந்தச் சிறுவனைவிட தான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்பதை உணர்ந்தார். உடல் தன் கட்டுப்பாட்டில் இல்லா விட்டாலும் மூளையும் சிந்தனையும் முழு உற்சாகத்துடன் இருப்பதை உணர்ந்தார். வீல் நாற்காலியில் இருந்தபடியே பல்கலைக் கழக ஆய்வினை முடித்து,பேராசிரியர் ஆனார். திருமணம் முடிந்து, மூன்று குழந்தைகளும் பிறந்தன.
ஏ.எல்.எஸ். எனக் கண்டறியப்பட்ட நரம்பு நோய் முற்றியதால், 1985-ம் வருடம் அவரது உடல் முழுமையாகச் செயலிழந்தது. ஆனாலும், நம்பிக்கை இழக்காமல் வலக்கண்ணை மட்டுமே அசைத்து எழுத்துக்களை அடையாளம் காட்டிப் பாடம் நடத்தியதுடன், வரலாற்றுத் திருப்பு முனையான புத்தகம் ஒன்றும் எழுதினார். ‘எப்ரீஃப் ஹிஸ்ட்ரி ஆஃப் டைம்’ என்கிற அந்தப் புத்தகம் ஸ்டீபனின் புகழை உச்சிக்கு உயர்த்தியது. கலிஃபோர்னியாவைச் சேர்ந்த கணினி நிபுணர் ஒருவர் ஸ்டீபனின் கண்ணசைவுக்கு இயங்கும் கணணி மென்பொருள் கண்டு-பிடித்து, வீல்சேரில் பொருத்தித் தர,சிரமம் குறைந்து அதிகமாகச் சிந்தித்து நிறைய எழுதிக் குவித்தார் ஸ்டீபன்.
‘காலம் எப்போது தொடங்கியது? எப்போது முடியும்? காலத்தை பின்னோக்கிச் சென்று காண முடியுமா? விண்வெளிக்கு எல்லை உண்டா?’ என எல்லோர் மனதிலும் இருக்கும் கேள்விகளுக்கு அறிவியல் ரீதியாக பதில் சொல்லி மலைக்க வைத்த ஸ்டீபன் ஹாஃக்கின்ஸின் வாழ்வு, மருத்துவர்களுக்கு இன்றும் ஒரு புதிர்தான். உடல் நிலை மோசமான காலகட்டத்தில் மனைவியும், குழந்தைகளும் அவரை விட்டுப் பிரிந்தனர். ஸ்டீபன் அப்போதும் மனம் தளராமல், தன்னை அன்புடன் கவனித்துக் கொண்ட நர்சை இரண்டாவதாகத் திருமணம் முடித்தார்.
‘‘இந்த நோயால் பாதிக்கப்பட்டதால்தான் வெளி உலக கவனச் சிதறல்கள் இல்லாமல், முழுக் கவனமும் செலுத்தி என்னால் புத்தகங்கள் எழுத முடிகிறது. உண்மையில் நான் அதிர்ஷ்டம் செய்தவன்’’ என்று ஸ்டீபன் நம்பிக்கையுடன் பேசக் காரணம், ‘எதை இழந்தீர்கள் என்பதல்ல; எது மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!’ என்கிற மந்திரச் சொல்லின் மகத்துவம் தான்!

நன்றி.www.ewow.lk