July 14, 2016

நியாயமாரே..

எனக்கு அப்போது பதினேழு வயதிருக்கும்.பள்ளிக்கூடத்துக்கு போகாம வெட்டியாக சுத்திக் கொண்டிருந்ததால் பல நிர்பந்தங்களுக்கிடையில் கேரளாவிற்கு சித்தாள் வேலைக்குச் செல்ல பணிந்திருந்தேன்.வெற்றிகரமாக ஒரு மாதம் வேலையும் செய்து முடித்துவிட்டேன்.அந்நிலையில் ஒருநாள் ஓர் பழைய வீட்டிற்கு பழுது நீக்கும் பணிக்காக நாங்கள் இருவர் சென்றோம்.வேலையின்போது என் கவனக்குறைவால் அங்கிருந்த வேலைப்பாடு மிக்க மண் ஜாடியை உடைத்துவிட்டேன்.நான் அதிர்ச்சியில் உறைந்திருக்க அதற்கு மேல் அதிர்ச்சியாகி என் கொத்தனார் என்னை திட்டிக்கொண்டிருந்தான்.சத்தம் கேட்டு அறையை விட்டு வெளியே வந்த மலையாளியான முதலாளி..சம்பவத்தை பார்த்தவுடன் சாரமில்லடோ அவனை சீத்த பறையல்லே என எனக்காக பரிந்தார்..ஒரு சில முணுமுணுப்புடன் கொத்தன் நடக்க பின்னே தலை கவிழ்ந்தபடி நானும் நடந்தேன்..அந்நேரத்தில் வெளியே ஆட்டோ ஒன்று வந்து நிற்கும் சத்தம் கேட்டது.சிறிது நேரத்தில் நாங்கள் வேலை செய்யும் இடத்தை ஆட்டோவில் வந்திறங்கிய மேஸ்த்திரி அதாவது கண்ராக் வந்தடைந்தார்..வரும்போதே உடைசலை வெளியே கொண்டுபோன வீட்டுக்காரை பார்த்திருப்பார் போல..லேய் அது எப்படிலே உடைஞ்சி என கொத்தநாரைப் பார்த்து கேட்டார்.நான் கொத்தநாரின் முகத்தை இன்சூரன்ஸ் இல்லாமல் மாட்டிய பைக்காரனின் கெஞ்சல் முகத்தோடு பார்த்துக்கொண்டிருந்தேன்.இந்த பயதான் உடைச்சான் என யோசிக்காம உடனே போட்டுக்கொடுத்துட்டான்.இதற்கு முன்னரும் இதேபோல் உடைதலும் சரிதலும் எனக்கு சகஜம் என்பதால் எல்லாவற்றிர்க்கும் சேர்த்து வண்டை வண்டையா திட்டினார் மேஸ்த்திரி.அன்று பதினேழு வயது வாலிபனென்று இறுமாந்து அலைந்து கொண்டிருந்த நான் அழுதுகொண்டிருந்தேன்.மாலையில் வேலை முடித்து வரும்போது நான் கொத்தநாரிடம் அண்ணா வீட்டுக்காரரே அந்த ஜாடி ஒடஞ்சதுக்கு சாரமில்லைனு சென்னாரு நீ யாமண்ணா கண்ராக்கிட்ட நான் ஒடைச்சேன்னு சென்ன என பரிதாபமாக கேட்டேன்.கொத்தன் ஒத்த வரியில் சொன்னான் நான் கள்ளம் செல்லமாட்டேம்பிலேன்னு..ு.அவ்வளவுதான் நான் அதற்கு பின் பேசவேயில்லை.இப்படி ஒரு வாரம் கடந்திருக்கும்.நாள்தோறும் இரவில் மூன்று நான்குபேர் அமர்ந்து அறையில் சீட்டு விளையாடுவது வழக்கம் .அன்றும் அதேப்போல் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.நான் வழக்கம் போல் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.ஆட்டம் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கையில் எதேச்சையாக என் எதிரி கொத்தனை கவனிக்கையில் அவன் உருவியது எத்தனை சீட்டு என்றும் தெரியாது. அவனிடம் எத்தனை சீட்டு இருக்கிறது என்றும் தெரியாது.ஆனால் அவன் களத்தில் ஒரு சீட்டு இடுவதற்கு பதிலாக இரண்டு சீட்டுகள் இட்டிருந்தான்.இது அப்பட்டமான ஏமாற்று .இதை நான் உடனே சொல்லியிருந்தால் பெரும்சண்டையே நடந்திருக்கும்.அல்லது நான் பொய் சொல்வதாக கூறி என் நொங்கை கொத்தன் எடுத்தாலும் எடுத்திருப்பான்.எதற்கு வம்பென்று நான் அமைதியாகிவிட்டேன்.அன்று இரவு மன உழச்சலிலேயே உறங்கினேன்.இந்த ஏமாற்றை மறுநாள் எப்படியும் கொத்தனிடம் கேட்டுவிட வேண்டுமேன தீர்மானித்துக்கொண்டேன்.மறுநாள் காலையில் ஆத்துக்கு குளிக்க போகும்போது கொத்தனுடன் ஒட்டிக்கொண்டேன்.அண்ணா நீ கள்ளம் செல்லமாட்ட அதுஇதுன்னு அண்ணைக்கு சென்ன.ஆனா நேத்து சீட்டு விளையாடம்ப எத்தனதடவ இரண்டு சீட்டு போட்ட ரெண்டு சீட்டு எடுத்தன்னு எனக்கு தெரியும்.ஏதோ பாவம்பாத்து அவியள்ட்ட செல்லேல சென்னா என்ன நடக்கம்னு தெரியமில்ல என மென்மையாக மிரட்டினேன்.ஊம்பி துப்பிருவானுவ போல உனக்க வேலைமயிரைப் பாத்துட்டு என கொத்தன் எகிறினான்.எனக்கும் எகிற ஆசைதான் என்ன பண்றது ஆளில்லாத இடம் வேற அவன் அடித்தானென்றால் தடுத்து நிறுத்துவதற்கும் ஆள் கிடையாது. அதனால் அமைதியாக போய்விட்டேன்.அங்கு ஒருசில வாரங்கள் கூட வேலை செய்துவிட்டு நான் வீட்டுக்கு வந்துவிட்டேன்.ஒருமாதம் கடந்து எங்க ஊர் கடைத்தெருவில் என் கொத்தனைப் பார்க்கிறேன் .தலையில் பெரிய கட்டோடு நின்று கொண்டிருந்தான்.என்னண்ணா ஆச்சி என பொய்யான அதிர்ச்சியோடு கேட்டேன்.அந்தோணிக்க பய குடிச்சிட்டு முழக்கோலெடுத்து அடிச்சி போட்டான் என சொன்னான்.நானும் ஒருசில நிமிடங்கள் நடித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டேன். பிற்பாடு வந்த தகவல்கள் இவை ...மண்டை உடைந்தது உண்மை ஏழு தையல்கள் போட்டது உண்மை,தாக்கிய ஆயுதம் முழக்கோல் வரை உண்மை. ஆனால் உடந்ததற்கான காரணம் பொய்...அவன் பொய்யினால் அடிவாங்கினான் என்பதே எனக்கு சந்தோசமாக இருந்தது.அடிநடந்தது என்னவோ சீட்டு விளையாட்டுக் களத்தில்தான் ஆனால் இம்முறை இரண்டு சீட்டு போட்டது என் கொத்தனல்ல.அடித்த அந்த அந்தோணி மகன்தான் பொய்யன்.பாவம் என் கொத்தன் நியாயம் கேட்கப் போனார் நியாயமானதை வாங்கினார்...
.
நியாயமாரே...