October 2, 2011

முதன் முதலாக இந்தியாவில் இரண்டு அடுக்கு பயணிகள் ரயில்.

இந்தியாவில் முதன் முறையாக இரண்டு அடுக்கு குளிர்சாதன வசதியுடன் அதிவேக ரயில் ஹவுரா மற்றும் தன்பாத் இடையே நேற்று முன்தினம் தொடங்கிவைக்கப்பட்டது.


மேற்கு வங்காளம் ஹவுராவிலிருந்து ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் நகருக்கு இடையே இந்த ரயில் இயக்கப்படுகிறது. ஹவுரா ரயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில், ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி பச்சைக் கொடி அசைத்து ரயில் பயணத்தை தொடங்கி வைத்தார்.
வாரத்தில் ஐந்து நாட்கள் இந்த ரயில் இயக்கப்படும். தசரா பண்டிகை பரிசாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த 2 அடுக்கு ரயில் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. அமரும் இருக்கைகள் கொண்ட இந்த ரயில் பெட்டி (சேர் கார்) வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வெள்ளி, சனி ஆகிய 5 நாட்கள் தன்பாத்திலிருந்து காலை 5.00 மணிக்கு புறப்பட்டு 9.15 மணிக்கு ஹவுரா சென்றடையும்.

அதேபோல் ஹவுராவிலிருந்து ஞாயிறு, திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய 5 நாட்களில் மாலை 3.20க்கு புறப்பட்டு 7.40 மணிக்கு தன்பாத் சென்றடையும்.
ஹவுரா மற்றும் தன்பாத் இடையே தூரம் 270 கி.மீ.
ஒன்பது ரயில் பெட்டிகளைக்கொண்ட இந்த ரயிலில் ஏழு குளிர்சாதன 2 அடுக்கு ரயில் பெட்டிகள் உள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் 128 இருக்கைகள் உள்ளன.
இதனுடன் இரண்டு ஜெனரேட்டர் ரயில் பெட்டிகளும் இணைக்கப்பட்டு உள்ளன.

இந்த ரயில் பர்தமான் துர்காபூர், அசன்சால், பாராக்கர், குமார்துபி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் ஹவுராவிலிருந்து பரதமான் வரை குறுக்கு பாதையில் செல்லும். இந்த இரண்டடுக்கு ரயில் அறிமுகம் குறித்து ஏற்கனவே ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிநவீன தொழில் நுட்ப வசதிகளுடன் குளிர்சாதன 2 அடுக்கு ரயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இந்திய ரயில்வேயின் திறமையை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டு உள்ளது.