October 16, 2011

சிங்கார சென்னையா சிரங்கு சென்னையா.

ஆத்திரத்தைக் கூட அடக்கலாம் ஆனால் மூத்திரத்தை அடக்க முடியாது என்று நம்மூரில் ஒரு சொலவடை உண்டு.உண்மையில் பெருநகரங்களில் வாழும் மக்கள் மூத்திரத்தை அடக்கித்தான் ஆக வேண்டிய நிலை .ஏனென்றால் நகரங்களில் கழிப்பிட வசதிகள் மிக குறைவு.அதிலும் பெண்களில் நிலை கேட்கவே வேண்டாம்.வீட்டில் இருக்கும் வரை பிரச்சனை இல்லை அதே போல் அலுவலகத்துக்கு சென்ற பிறகும் பிரச்சனை இல்லை .ஆனால் வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் இடையான பயண தூரம்தான் பிரச்சனை.சென்னையில் பெரும்பாலான மக்கள் பயணத்திற்கு பேருந்து மற்றும் மின்சார ரயிலைத்தான் பயன்படுத்துகிறார்கள்.சிலருக்கு இரண்டு மூன்று பேருந்துகள் மாறிமாறி பயணம் செய்துதான் அலுவலகத்தை அடைய வேண்டியிருக்கிறது.சென்னையில் வாழும் சராசரி குடிமகன் நாளொன்றுக்கு குறைந்த பட்சம் இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை பயணத்திற்காக செவவிடுகிறான்.அதற்கு காரணம் அலுவலகம் தொலைவில் இருக்கலாம் அல்லது போக்குவரத்து நெரிசல் காரணமாகவும் இருக்கலாம். இப்படி நிலமை இருக்கையில் பெரும்பாலான பேருந்து நிலையங்களிலும் ,மின்சாரயில் நிலையங்களிலும் கழிப்பிட வசதி இருப்பதில்லை அப்படியே இருந்தாலும் கழிவறை பாதுகாப்பாக இருக்கட்டும் என்று பூட்டு போட்டு வைத்திருக்கிறார்கள்.
கழிவறையை ஏன் பூட்டி வைத்திருக்கிறார்கள் என்ற காரணம் தெரியவில்லை.ஒருவேளை வாடிக்கையாளர்கள் குறைவு என்று கடைகளை மூடுவது போல் பயன்படுத்துவோர் குறைவு என்று பூட்டு போட்டு வைத்திருக்கிறார்களோ என்னவோ.அல்லது பராமரிக்க முடியாமல் போகலாம் என்பதற்காவா.சென்னை கடற்கரை சந்திப்பிலிருந்து வேளாச்சேரி சந்திப்பு வரை உள்ள ரயில் நிலையங்களில் கழிவறை இருக்கிறது ஆனால் பூட்டி வைத்திருக்கிறார்கள்(சென்னை கடற்கரை சந்திப்பை தவிர்த்து)என்பது குறிப்பிடத்தக்கது.


கழிவறை என்பது லாபம் ஈட்டும் நோக்கிலா அமைக்கப்படுகிறது?,சேவையின் கீழ் அமைக்கப்படுவதல்லவா சேவையென்று இருந்தாலும் இலவசமாக கூட தர வேண்டாம் சிறு கட்டணங்களை பெற்றுக்கொண்டு மக்கள் அதிகம் புளங்கும் இடங்களில் கழிவறைகள் அமைக்கலாம் அல்லவா.தற்போது கூட ஒரு சில இடங்களை தவிர்த்து ஏனய இடங்களில் இருக்கும் கழிப்பிடங்களில் கட்டணம் வசூலித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து கோயம்பேடு பேருந்து நிலைய கழிவறைகளில் மட்டும்தான் இலவசமாக பயன்படுத்த முடியும்.மற்றபடி
சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் பிராட்வே பேருந்து நிலையம் வரை உள்ள கழிப்பிடங்களில் கட்டணம் வசூலிக்கிறார்கள்.பெரிய நிறுவனங்கள் பூங்காக்கள் போன்றவற்றை பராமரிக்கும் செலவை ஏற்றுக் கொள்வதைப் போல கழிப்பிடங்கள் அமைத்து அதை பராமரிக்கும் செலவையும் ஏற்றுக்கொண்டால் பொது மக்களுக்கு செய்யும் மிகப் பெரிய சேவையாகக் கருதப்படும்.ஏனோ இதை செய்ய தயங்குகிறார்கள்.



மனிதனின் முக்கியமான செயல்களே உணவு உண்பது பிறகு உங்களுக்கே தெரியும். வீடென்று ஒன்று இருந்தால் பூஜையறை இருக்கிறதோ இல்லையோ நிச்சயம் ஒன்று அல்லது இரண்டு கழிவறைகளாவது இருக்கும்.ஆனால் தினந்தோறும் பல லட்சம் பேர் வந்துபோகும் நகரின் முக்கிய பகுதிகளில் ஒரு கழிப்பிடத்தைப் பார்ப்பதே அரிதாக இருக்கிறது.இந்நிலையில் சிறுநீர் கழிக்க வேண்டிய அவசியம் வந்தால் கழிவறை இருக்காது அதனால் அருகில் இருக்கும் மரங்களின் பின்னாலோ,எதிரே இருக்கும் சுவர்களிலோ தங்கள் வேலையை முடித்துக்கொள்கிறார்கள்.இப்படி பலபேர் தங்கள் கடமையை ஒழுங்காக ஆற்ற சிங்கார சென்னை என்று கூறிக்கொண்டிருக்கும் அரசே காரணமாய் இருக்கிறது.அதனால் சிங்கார சென்னை சிரங்கு சென்னையாகிக் கொண்டிருக்கிறது.எங்கு பார்த்தாலும் சிறுநீர் கழித்த தடங்கள் மலம் கழித்த வடுக்கள் சகிக்க முடியவில்லை.



முன்பெல்லாம் அரசியல் கட்சிகள் ஓட்டு சேகரிக்கும் போது மேம்பாலங்கள் அமைக்கப்படும்,சாலைகள் போட்டுத்தரப்படும்,குடி நீர் வசதி செய்துத் தரப்படும் என்று எல்லா மக்களுக்கும் பயன்படும் வகையில் பொதுவான வாக்குறுதிகளை அளித்தார்கள். இப்போது என்வென்றால் மிக்சி வழங்கப்படும் ,டி.வி வழங்கப்படும்,தங்கம் வழங்கப்படும் என்று தனியொரு குடும்பத்தை திருப்திபடுத்தும் நோக்கில் வாக்குறுதிகளை வழங்குகிறார்கள்.
பொதுவான பிரச்சனைகள் கண்டு கொள்ளப்படுவதில்லை இது கழிவறைக்கு மட்டுமல்ல பொதுவானவை என்று எது உள்ளதோ அவற்றிற்கெல்லாம் இது பொருந்தும்.




இந்த பதிவை நான் எழுத காரணம் சென்னையில் ஒரு சில இடங்களில் சிறுநீர் கழிக்க கழிவறை இல்லாமல் அல்லது கழிவறை இருக்கும் இடம் தெரியாமல் நான் பட்ட அவஸ்தை இருக்கே யப்பப்பபபபபபபபபபபபபபபா.......

No comments: