November 2, 2011

தமிழக முதல்வரின் முரண்பாடுகள்.

சென்னையில் கடந்த தி.மு.க., ஆட்சியில் பிரமாண்டமாக கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகம்,உயர் சிறப்பு குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றப்படுகிறது.
தமிழகத்தில் தற்போது 4,028 நூலகங்கள் இயங்கி வருகின்றது. இதில் பெரிய நூலகமாக கன்னிமாரா நூலகம்இருந்து வருகிறது. இதைவிட அதிக நூல்களைக் கொண்ட மிகப்பெரிய நவீன நூலகத்தைக் கட்ட முடிவெடுத்து 2007-08ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து, சென்னை கோட்டூர்புரத்தில், அண்ணா பல்கலை., வளாகத்தை ஒட்டி எட்டு ஏக்கர் பரப்பிலான இடத்தில், எட்டு அடுக்குகளுடன் ரூ. 172 கோடி செலவில் சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் கடந்தாண்டு செப்டம்பர் 15ம் தேதி திறக்கப்பட்டது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி, அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் அடிக்கடி நேரில் சென்று கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு பணிகளை முடுக்கி விட்டனர். இதன் காரணமாக 22 மாதங்களில் பணிகள் முடிந்து திறப்பு விழா கண்டது நூற்றாண்டு நூலகம். நினைத்தபடி, மிக நேர்த்தியாக நூலக கட்டுமானப் பணிகள் நிறைவுபெற்றது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் முன்னாள் முதல்வர் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அண்ணா நூற்றாண்டு நூலகம் குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குழந்தைகளின் நலனை பேணிக்காக்கும் விதமாக இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை கோட்டூர்புரத்தில் தற்போதுள்ள அண்ணாதுரை நூற்றாண்டு நூலகத்தில் உயர்சிறப்பு குழந்தைகள் மருத்துவமனை ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். தற்போதுள்ள நூலகம், கல்லூரி சாலையில் உள்ள டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள அறிவுசார் பூங்கா உருவாக்கப்பட்டு அங்கு மாற்றப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகள்.www.dinamalar.com



ஜெயலலிதா ஒரு மாநிலத்தில் முதல்வரைப் போல் செயல்படுவதாக தெரியவில்லை.மாறாக அவரது செயல்பாடுகள் சிறு பிள்ளைதனமாகத்தான் இருக்கிறது.ஒட்டு மொத்த அதிகரமும் தன்னிடத்தில் இருப்பதால் எவ்வளவு பெரிய முட்டாள்தனமான காரியங்கள் செய்தாலும் தமிழக மக்கள் கண்ணையும்,காதையும்,வாயையும் மூடிக்கொண்டிருப்பார்கள் என்று நினைத்திருக்கிறார் போலும். கருணாநிதி ஆட்சியில் உருவான எல்லா திட்டங்களையும் அடியோடு ஒளித்துக்கட்டிவிட வேண்டும் என்ற முடிவில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்.புதிய சட்ட மன்ற அலுவலகத்தை நவீன பொது மருத்தவமனை என்றார்.சமச்சீர் கல்வியை தடை போட நினைத்தார் ஆனால் நீதிமன்றம் முதல்வர் தலையிலேயே இடியை போட்டது.மூவரின் தூக்கு தண்டனயை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்த மனுவை மீண்டும் தமிழக அரசே தள்ளுபடி செய்ய கேட்டுக் கொண்டிருக்கிறது. இப்போது அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை குழந்தைகள் நல மருத்துவமனை அமைக்கப்படும் என்கிறார்.

தி.மு.க வை எதிர்கிறேன் என்ற பேரில் இது போல் மக்களுக்கு விரோதமாக நடந்து கொண்டால் மக்கள் மனதிலும் அரசுக்கு எதிரான விரோதம்தான் உருவாகும்.


தற்போது பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்து குவிப்பு வழக்கில் கூட ஜெயலலிதா தண்டிக்கபட வேண்டும் என பெரும்பாலான மக்கள் நினைக்கவில்லை மாறாக அந்த வழக்கில் இருந்து விடுபட வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள்.அந்த அளவிற்கு முதல்வர் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். முதலில் முதல்வரின் சர்வாதிகார போக்கை குறைக்க வேண்டும்.அப்போதுதான் நம்மைப் போல் ஒருவர் என்ற எண்ணம் மக்கள் மனதில் தோன்றும் .இல்லையேல் 2016 ல் வடிவேலு முதல்வர் ஆகிவிடக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும்.இதை அனைத்து அரசியல் கட்சிகளும் மனதில் வைத்தால் நலம்.

No comments: