October 30, 2011

என் பலம் என் வேகம்தான்.சூப்பர் ஸ்டார்.



‘என் பலம் என் வேகம்தான். அந்த வேகம் குறையும் வரை நடிப்பேன்’ என்றார் சூப்பர் ஸ்டார்.
உடல் நலம் பெற்று சென்னை திரும்பிய பின் 3 மாதங்கள் ஓய்வெடுத்து வந்த ரஜினி, இப்போது வெளி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்க ஆரம்பித்துள்ளார்.
சமீபத்தில் சில நண்பர்களின் திருமணங்களுக்குப் போன அவர், கடந்த வாரம் ரா ஒன் மற்றும் 7 ஆம் அறிவு படங்களைப் பார்த்தார்.
இப்போது முதல் முறையாக வெளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். 75 படங்களுக்கு மேல் இயக்கிய இயக்குநர் எஸ்பி முத்துராமனின் கலைச் சேவைக்காக சங்கர ரத்னா விருது வழங்கும் விழா அது.
சென்னையில் ஏவிஎம் ராஜேஸ்வரி மண்டபத்தில் சனிக்கிழமை சங்கர நேத்ராலயா சார்பில் நடந்த இந்த விழாவில் பங்கேற்ற ரஜினியின் பேச்சு, அங்கு வந்திருந்தவர்களை உருக்கிவிட்டதென்றால் மிகையல்ல.
அதே கம்பீரமும் சுறுசுறுப்பும் வசீகர புன்னகையும் தவழ, அனைவருக்கும் வணக்கம் சொன்னார் ரஜினி. புகைப்படக்காரர்கள் விரும்பும் வரை படம் எடுக்கவும் அனுமதித்தார்.
ஆரம்பத்தில் ரஜினி இந்த விழாவுக்கு வருவார் என யாரும் எதிர்ப்பார்க்கவில்லை. திடீரென அவரைப் பார்த்ததில் அரங்கம் திக்குமுக்காடிப் போனது. பின்னர் அதிர வைக்கும் கைத்தட்டலும் அவரை வரவேற்றனர்.
விழாவில் ரஜினி பேசியது:
சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் என்னை தொடர்பு கொண்டு பேசினார். எனக்கு சங்கர ரத்னா விருது வழங்கப்படுகிறது. அந்த நிகழ்ச்சியில் நீ கலந்து கொள்ளாவிட்டாலும், உன் வாழ்த்து மடலையாவது அனுப்ப வேண்டும் என்றும், அதை மேடையில் மகிழ்ச்சியுடன் படிப்பேன் என்றும் கூறினார். அதற்கு நானும் சம்மதம் தெரிவித்தேன்.
பின்புதான் யோசித்தேன், உடல் நிலை சரியான பிறகு, ஏதாவது ஒரு நல்ல நிகழ்ச்சியில்தான் கலந்து கொள்ள வேண்டும் என்று இருந்தேன். அப்படி பார்த்தால், என்னை சினிமாவில் வளர்த்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுக்கு விருது வழங்கும் இந்த நிகழ்ச்சியை விட வேறு நல்ல நிகழ்ச்சி எதுவும் கிடையாது.
உடலில் வேகம் இருக்கும் வரை…
நான் முழுமையாக குணம் அடைய மக்களின் அன்பும், ரசிகர்களின் வேண்டுதலும்தான் காரணம். என்னை உருவாக்கிய ஜாம்பவான்கள் இருக்கிற இந்த மேடையில், நான் அதிகம் பேசினால், அது அதிக பிரசங்கித்தனம் ஆகிவிடும்.
எனக்கு வெற்றிப் படங்களை கொடுத்தார் என்பதால் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 25 படங்களில் நடிக்கவில்லை. அவர் மீது கொண்ட அன்பினால் தான் 25 படங்களில் நடித்தேன்.
நான் ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்க வேண்டும் எனக் குறிப்பட்டனர். ஆனால் சிவாஜியைப் போலவோ, கமலைப் போலவோ என்னிடம் நல்ல நடிப்பும், திறமையும் இல்லை (தலைவா… இது டூ மச்!).
எனது பலமே எனது வேகம்தான். அந்த வேகம் குறைந்தால் என்னால் நடிக்க முடியாது. என் வேகம் குறையும் வரை நடிப்பேன். ரசிகர்களை மகிழ்விப்பேன்,” என்றார் ரஜினி.

முன்னதாக சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை சார்பில் தமிழ் திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமனின் கலைச் சேவையைப் பாராட்டி சங்கர ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்த விருதை கம்பன் கழகத் தலைவர் இராம.வீரப்பன் வழங்கினார்.
விழாவில், திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஏ.வி.எம். சரவணன், பஞ்சு அருணாச்சலம், வி.சி.குகநாதன், திரைப்பட இயக்குநர்கள் கே.பாலசந்தர், திரிலோகச்சந்தர், நடிகர் விசு, நடிகை குஷ்பு, பாடகி வாணி ஜெயராம், எழுத்தாளர் சிவசங்கரி, டாக்டர் எஸ்.பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவுக்கு வந்த அனைவரும் ரஜினியை நலம் விசாரித்தனர். அனைவரிடமும் சிரித்துப் பேசிய ரஜினி, விழா முடியும் வரை இருந்துவிட்டே கிளம்பினார்.

nandri envazhi.com

No comments: