October 30, 2011

உலக மக்கள் தொகை எழுநூறு கோடியா?

இன்று உலக மக்கள் தொகை 700 கோடியை தொடும் என ஐ.நா.சபை தெரிவித்துள்ளது. அதுவும் குறிப்பாக, 700 கோடியாவது குழந்தை உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிறக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மனிதன் தோன்றி பல ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன. எனினும், கடந்த 1805ம் ஆண்டில்தான் உலக மக்கள் தொகை 100 கோடியை எட்டியது.ஆனால், அடுத்த 122 ஆண்டில் (1927) 200 கோடியை எட்டியது. அதன்பிறகு 32 ஆண்டில் (1959) 300 கோடியையும்,
14 ஆண்டில் (1974) 400 கோடியையும், 13 ஆண்டில் (1987) 500 கோடியையும், 12 ஆண்டில் (1999) 600 கோடியையும் எட்டியது. கடந்த 100 ஆண்டில் மட்டும் 5 மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், இன்று உலக மக்கள் தொகை 700 கோடியை எட்டும் என ஐ.நா.சபை தெரிவித்துள்ளது. தினமும்சராசரியாக குழந்தை பிறக்கும் அளவை கருத்தில் கொண்டு இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
700 கோடியாவது குழந்தை எங்கு பிறக்கும் என்பதை துல்லியமாக சொல்ல முடியாது. எனினும், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிறக்க வாய்ப்பு உள்ளதாக பிளான் இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது. நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக இது விளங்குகிறது. அதாவது பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய மூன்று நாடுகளின் மக்கள் தொகைக்கு சமம் ஆகும்.
மக்கள் தொகை பெருக்கத்தைக் குறைக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதால் இனி மக்கள் தொகைவளர்ச்சி வேகம் குறையும் என ஐ.நா. சபை மதிப்பீடு செய்துள்ளது. அந்த வகையில் 800 கோடியை தொட 14 ஆண்டுகள் (2025) ஆகும். 900 கோடியை தொட 25 ஆண்டுகளும் (2050) 1000 கோடியை தொட 50 ஆண்டுகளும்(2100) ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது.
700 கோடியை இப்படி கணக்கிட்டால்...
700 கோடி விநாடிகள் பின்னோக்கி சென்றால், 1789ம் ஆண்டுக்கு செல்வோம். அப்போது, அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் பதவி வகித்த காலம் அது.
பூமத்திய ரேகையை ஒட்டி 700 கோடி காலடிகள் எடுத்து வைத்தால், 106 முறை உலகை சுற்றி வரலாம்.
2 மிலி தண்ணீர் கொள்ளக்கூடிய 700 கோடி சிறிய கப்களில் தண்ணீரை ஊற்றினால், அந்த தண்ணீர் மூலம் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்கு அமைக்கப்படும் பிரம்மாண்டமான 5 நீச்சல் குளங்களுக்கு தண்ணீரை நிரப்ப முடியும்.
5 அடி உயரமுள்ள சராசரி மனிதன் 700 கோடி பேரை ஒருவரின் மேல் ஒருவராக அடுக்கினாற்போல நிற்க வைத்தால், சூரியனை அடையும் தூரத்தில் 14ல் ஒரு பங்கு தூரத்தை எட்டலாம். அதேநேரம், நிலவின் தூரத்தை போல 27 முறை இருக்கும்.
ஸீ 3 மிலி கிராம் எடை கொண்ட 700 கோடி எறும்புகளின் எடை 23 டன்னாக இருக்கும்.





இந்தியாவை பொறுத்தவரை இது வருத்தமான விஷயம் என குலாம்நபி ஆசாத் கருத்து தெரிவித்துள்ளார்.
உலகின் 700 கோடியாவது குழந்தை உ.பி.யில் இந்தியாவில் பிறப்பது பற்றி கருத்து தெரிவித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறியதாவது:
இந்த சம்பவம் கொண்டாப்பட்டாலும், இந்தியாவை பொறுத்தவரை மிகவும் கவலைப்படக் கூடிய விஷயம். இந் நிகழ்ச்சியை நாம் கொண்டாக் கூடாது.
உலக நிலப்பரப்பில் 2.4 சதவீதம் மட்டும் உள்ள இந்தியாவில், உலக மக்கள் தொகையில் 18 சதவீதம் பேர் இருக்கிறோம். நமது நாட்டின் மக்கள் தொகை தற்போது 121 கோடியாக உள்ளது. இந்த நிலையை கட்டுக்குள் வைத்திருந்தாலே மகிழ்ச்சிதான். கடந்த 1991 முதல் 2001ம் ஆண்டு வரை இந்திய மக்கள் தொகை 20 கோடி அதிகரித்தது. கடந்த 2001ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை 18 கோடி பேர் அதிகரித்துள்ளனர்.
தற்போது இந்தியாவில் ஒரு பெண்ணின் கருத்தரிப்பு விகிதம் 2.6 ஆக உள்ளது. 2060ம் ஆண்டில் இது 2.1 ஆக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் பல பகுதிகளில் குழந்தை பெற்றுக் கொள்வது பொழுபோக்கு நிகழ்ச்சியாக இருக்கிறது. பீகார், சட்டீஸ்கர், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் பெண்களின் கருத்தரிப்பு விகிதம் அதிகளவில் உள்ளது. இந்தியாவில் மக்கள் தொகை வளர்ச்சி தற்போது அதிகமாக உள்ளது. 2030ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை சீனாவை மிஞ்சும் என தெரிவித்தார்.




மக்கள் தொகை வளர்ச்சியில் முன்னணியில் இருந்துவிட்டு பொருளாதார முன்னேற்றத்தில் வளர்ந்த நாடுகள், வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளை விட பத்து இருபது ஆண்டுகள் பின்னோக்கி இருப்பது உண்மையிலேயே நாம் கவலைப்படக் கூடிய விசயமாகும்.அடுத்து வரும் இருபது ஆண்டுகளிலாவது இந்தியா மக்கள் தொகை மட்டுமல்ல பொருளாதார முன்னேற்றத்திலும் நாங்கள்தான் முன்னணியில் இருக்கிறோம் என்று மார்தட்டிக் கொள்ளக் கூடிய சூழல் நிலவினால் அது இந்தியர்களாகிய நமக்கு பெருமை.



செய்திகள்.www.dinakaran.com

No comments: