free mail

January 2, 2012

ஆனந்த விகடனின் ராஜபாட்டை திரைவிமர்சனம்.

ரீல் வில்லன் கனவுடன் இருக்கும் விக்ரம் ரியலில் ஹீரோ ஆவதுதான் ராஜபாட்டை.நில அபகரிப்பு வில்லன்களை சினிமா ஸ்டன்ட் ஆர்டிஸ்ட் விக்ரம் சுளுக்கு எடுப்பதே கதை.
முதல் மூன்று படங்களில் வெரைட்டியாக வெளுத்துக்கட்டிய இயக்குநர் சுசீந்திரன் திரிஷ்டி பட்டு இருக்குமோ என நினைத்து இந்த படம் எடுத்திருப்பார் போல.


படம் முழுக்க மாஸ் மசாலா நெடி. படத்தில் ஹீரோ எங்கு சீரியசாக நடிக்கிறார்,எங்கு காமடியாக செய்கிறார் என்று கண்டு பிடிப்பவர்களுக்கு பம்பர் பரிசே தரலாம்.அந்த அளவுக்கு பல காட்சிகள் இது காமடியா சீரியசா என்ற குழப்பத்திலேயே கடந்து போகிறது.உதாரணத்துக்கு விதவிதமான சி.பி.ஐ அதிகாரிகள் வில்லனை வைத்து விசாரிக்கும் யுக்தி.காமடி ஸ்கோப் கொண்ட இந்த சீனில் விக்ரம் தசாவதார வெறிகொண்டு அடுத்தடுத்து போடும் வேசங்களால் அது இது எது என கிறுகிறுக்கிறது நமக்கு.தெய்வத்திருமகள் நடித்து டயர்டு ஆகிட்டாரோ? விக்ரமுக்கு இந்தப் படம் ஜாலி பிக்னிக்.படிக்கட்டு தாடி வைத்து,தலைமுடியைக் கலைத்து விட்டதோடு சரி.ஆனால் மனிதர் உடலை அலட்சியமாக முறுக்கி ஆர்ம்ஸ் ஏற்றி அடியாட்களை பந்தாடும் காட்சிகளில் திரையில் மட்டுமல்லாமல் தியேட்டரிலும் அதிர்கிறது.ஆனால் அதற்காக மட்டுமே பார்ப்பதற்கு இது அர்னால்ட் படம் இல்லையே பிரதர்!


ஹீரோயின் தீக்சா சேத். நெடுநெடு உயரத்தில் கிடுகிடு அழகில் கிறங்கடிக்கிறார்.படத்தில் அவருக்கு அரிய அரிய அரிய கேரக்டர் என்பதால் சிறிய சிறிய சிறிய டயலாக் கூட இல்லை.முதல்ல அம்மாவைப் பாரு அப்புறம் மகளைப் பாரு என்று ஃபிகர் கரெக்ட் பண்ண ஐடியா கொடுக்கும் கே.விஷ்வநாத் ஏரியாவில் மட்டுமே சுசீந்திரன் டச்.அக்காவாக வரும் சனா(அறிமுகம்)பாந்தமான குடும்ப தலைவி மாதிரி இருக்கிறார்.ஆனால் ஆன்ட்டி உதடு துடிக்க கோபப்படும் காட்சிகளில்கூட பளிச் அழகு.டெரர் ஃபீலிங்குக்குப் பதில் ஃபிகர் ஃபீலிங்கே கொடுக்கிறது.அடுத்த வேளை ஷுட்டிங் இருக்கிறதா இல்லையா என்று கூட தெரியாத விக்ரம் அண்ட் கோ,எதிர்கால முதல்வரோடு மோதி ஜெயிப்பது லாஜிக் இல்லாத மேஜிக். ஒரு வீடியோ கேசட்டை வைத்துக்கொண்டு ஹீரோ அரசியல்வாதிகளின் அம்பாரம் சாய்ப்பது,டிவியில் வரும் மக்கள் பேட்டி,கோர்ட்டுக்கு வெளியே மக்கள் எழுச்சி போன்ற 90களின் மசாலா இம்சைகளை இன்னும் எத்தனை நாளைக்குதான் தாளிப்பீங்க பாஸ்?படத்தில் அடுத்தடுத்து வரும் ஆக்ஸன் காட்சிகளை போஜ்பூரி சிறுவன் கூட யூகித்து விடுவான்.யுவன்ஷங்கர் ராஜா இசையில் ஒவ்வொரு பாடலும் மினி இடைவேளை.மதியின் ஒளிப்பதிவில் வரும் மழை இரவுச் சண்டை அபாரம்.தமிழகத்தின் தற்போதைய ஹாட் டாப்பிக்கான நில அபகரிப்புதான் கதையின் கரு என மாஸ் படத்துக்கான அயிட்டங்கள் அத்தனையும் இருந்தும் மிஸ் செய்த மாயம் என்ன? அட படம் முடிந்து விட்டது எனக் குதுகலமாக எழுந்தால், ஸ்ரேயா,ரீமா சென் ஆடும் குத்துப்பட்டை போடுகிறார்கள்.!

என்னா ஒரு கொல வெறி?!நன்றி..
விகடன் விமர்சனக் குழு..
ஆனந்த விகடன்.

No comments: