January 1, 2012

ரஜினி எனும் அபூர்வ பிறவி , கலைஞானம் .

திரையுலகில் அரிதான மனிதர்களில் ஒருவர் கலைஞானம். ரஜினியை முதன்முதலில் ஹீரோவாக ஆக்கிய பெருமை. அந்தப் படத்திலேயே அவர் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டது குறிப்பிடத்தக்கது.
திரையுலகப் பயணத்தில் கலைஞானம் பார்க்காத ஏற்றத் தாழ்வுகள் இல்லை. ஆனாலும் ரஜினி, பாக்யராஜ் என தேர்ந்தெடுத்த ஜாம்பவான்களின் நெருக்கத்துக்குரியவராக தொடர்கிறார் கலைஞானம். யாரும் எப்போதும் எளிதில் அவரை அணுக முடியும். பலமுறை அவருடைய திரையுலக அனுபவங்களை அவரே சொல்லக் கேட்ட அனுபவம் நமக்குண்டு. 37 ஆண்டுகள் ரஜினிக்கு நெருக்கமானவராகத் திகழும் பெருமைக்குரியவர்

.
ஆனாலும் ரஜினி பிறந்த நாளுக்காக விகடனில் அவர் பகிர்ந்து கொண்ட விஷயங்கள், ஒரு ப்ளாஷ்பேக் பயணம் மாதிரி இருந்தது.
அதை இங்கே தருகிறோம்.
‘சார் இவரோட பேர் கலைஞானம். இவர்தான் என்னை முழுசா நம்பி முதன்முதலா ‘பைரவி’ படத்துல ஹீரோ சான்ஸ் கொடுத்தார்…’ இப்படித்தான் கோலிவுட், பாலிவுட், டோலிவுட் வி.வி.ஐ.பி-க்களிடம் கலைஞானத்தை அறிமுகபடுத்துவார், சூப்பர் ஸ்டார் ரஜினி. இரண்டு நபரைக் கண்டால் மட்டும் சட்டென்று எழுந்து நிற்பார். வாசல்வரை வந்து வழியனுப்புவது ரஜினியின் வழக்கம். ஒருவர் கே.பாலசந்தர்… இன்னொருவர் கலைஞானம்.
குடும்ப விஷயங்கள் முதல் ‘கோச்சடையான்’ படம்வரை அனைத்தையும் கலைஞானத்துடன் கலந்து ஆலோசிப்பார், ரஜினி. ‘பைரவி’முதல் ‘கோச்சடையான்’வரை ரஜினிபற்றி நமக்கு தெரியாத இன்னொரு பக்கத்தை நம்மு
டன் பகர்கிறார், கலைஞானம்.



‘முதன்முதலா ‘பைரவி’ படத்தை தயாரிச்சேன், அதுக்கு படத்துக்கு பைனான்ஸ் உதவி செஞ்சவர், தேவர். ஒருநாள் ‘ஏண்டா நீ தயாரிக்குற படத்துக்கு ஹீரோ யாருடா..?’ என்று தேவர் கேட்டார்.
‘ரஜினிகாந்த்…’ என்றேன்.
‘ வில்லனா நடிக்கிற ஆளை ஹீரோவா போடுறியே. தப்பான முடிவா தெரியுது…’
‘ ரஜினியை ‘ஆறு புஷ்பங்கள்’ படத்துல பக்கத்துல இருந்து பார்த்தவன் நான்.. நீங்க வேணா பாருங்க, அவர் நிச்சயமா பெரிய நடிகரா ஜெயிப்பார்’னு அவர்கிட்டே சொன்னடோட நிற்கலை.. என்னோட முடிவுல இருந்தும் நான் மாறலை. 1978 ஜனவரி மாசம் ‘பைரவி’ படத்துக்கு பூஜை போட்டேன். தேவர் தலைமை தாங்க, சிவாஜி குத்துவிளக்கு ஏற்றினார். ஒருவழியா ‘பைரவி’ படம் ரிலீஸாச்சு.



முதல்நாள் மேட்னி ஷோ ராஜகுமாரி தியேட்டர்ல ‘பைரவி’யை நானும் தேவரும் பார்த்தோம். வெள்ளித்திரையில ரஜினி காட்டுன விதவிதமான ஸ்டைலுக்கு, ஜனங்ககிட்டே இருந்து பயங்கர கைத்தட்டல். முக்கியமா ரஜினியும், பாம்பும் சேர்ந்து நடிக்கிற சீனுக்கு ஏகோபித்த வரவேற்பு.
அதன்பின், ரஜினியும் பாம்பும் சேர்ந்து நடிச்சா சென்டிமென்ட்டா படம் சக்ஸஸ். அப்புறமா வெளிவந்த ‘தம்பிக்கு எந்த ஊரு’ ‘அண்ணாமலை’ ‘படையப்பா’ இப்படி ஏகப்பட்ட உதாரணங்கள் இருக்கு.
‘பைரவி’ படத்தை பார்த்த தேவர் ஆச்சர்யத்துல அசந்து போனார். ‘கலைஞானம்… நான் ரஜினி நடிப்பை பத்தி தப்பா எடை போட்டுட்டேன்… உடனே ரஜினிய கிளம்பி வீட்டுக்கு வரச்சொல்…’ என்றார். அடுத்த சில நிமிஷத்தில் ரஜினி, தேவர் வீட்டில் ஆஜர்.
எவ்வளவோ வற்புறுத்தியும் சோபாவில் உட்காராமல் தேவர் முன்பு நின்று கொண்டே இருந்தார், ரஜினி! ‘கலைஞானம் ‘பைரவி’ படத்துக்கு ரஜினிக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தே..?’ என்னைப் பார்த்து தேவர் கேட்டார். ‘ஐம்பதாயிரம் ரூபாய்…’ என்றேன்.
தேவர் தனது உதவியாளரை அழைத்து காதில் கிசுகிசுத்தார். அடுத்த சில நோடிகளில் சூட்கேஸில் கட்டுக்கட்டாய் கரன்சியை நிரப்பி தூக்க முடியாமல் எடுத்து வந்தார், உதவி. ‘ அடுத்து நான் தயாரிக்க போற ரெண்டு படத்துலயும் நீதான் ஹீரோ… இந்தாப்பா ரஜினி, அதுக்கான சம்பளம் இது! பத்தலைன்னா இன்னும் வாங்கிக்கோ… சொந்தமா வீடு இருக்கா? நான் வேணா வாங்கி தரட்டுமா…’ தேவர் சொல்லச் சொல்ல திகைச்சு போயிட்டார், ரஜினி. அந்தக் காலத்துல நிறைய ஹீரோக்களுக்கு தேவர் வீடு வாங்கி கொடுத்து இருப்பது தனிக்கதை.


தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் ‘தாய்மீது சத்தியம்’ ‘அன்னை ஒர் ஆலயம்’ படங்கள் வெளிவந்துச்சு. தேவரின் செல்லமான ஹீரோவாயிட்டார், ரஜினி. அந்த நேரத்துல தேவர் பிலிம்ஸ்ல கமல் நடிக்கிற ‘தாயில்லா குழந்தை’ படம் தயாராச்சு. ‘என்னை ஏன் நடிக்க கூப்பிடல…’ என்று ரஜினி தேவர்கிட்டே செல்லமா கோபிச்சுக்கிட்டார். அதன்பிறகு தானே வலியபோய் உரிமையா கேட்டு கமலோட ‘தாயில்லாமல் நானில்லை’ படத்துல கெஸ்ட் ரோல்ல நடிச்சார், ரஜினி. அந்தளவுக்கு தேவர் பிலிம்ஸோட நெருக்கமா இருந்தார். அதன்பின் ரஜினி உச்சத்துல ஒளிர்கிற சூப்பர் ஸ்டார் ஆயிட்டார்.


அன்று முதல் இன்று வரை ரஜினி நடித்த நிறைய திரைப்படங்களின், கதை, திரைக்கதை, டிஸ்கஷனில் கலந்து வந்திருக்கேன். ஒரு தடவை நடிகை மனோரமா ரஜினியை பத்தி தாறுமாறா திட்டி மேடையில பேசினாங்க. அதைக்கேட்டு எனக்கு கோபம் வந்துடுச்சு. மனோரமாவைத் திட்டி டிவி மீடியாவுல பேட்டிக் கொடுக்க தயாரானேன்.
அப்போ பி.வாசுவோட வீட்டுல, அவர் படத்தோட விவாதத்துல இருந்தேன். அதனால மீடியாவை வாசு வீட்டுக்கு வரச்சொன்னேன். இந்த விஷயம் ஏ.வி.எம் ஸ்டுடியோ ஷூட்டிங்குல இருந்து ரஜினிக்கு தெரிஞ்சு போச்சு. உடனே வாசு வீட்டுக்கு போன் போட்டார் ரஜினி. வாசு போனை என்னிடம் தந்தார். ‘மனோரமா மேடம் எவ்ளோ பெரிய ஆர்டிஸ்ட். அவங்க என்னை எப்படி வேணா திட்டி பேசட்டும்.. அதுக்கு அவங்களுக்கு ரைட்ஸ் இருக்கு. கலைஞானம் சார், தயவுசெய்து நீங்க எனக்காக ஆச்சியை எதிர்த்து மீடியாவுல எதுவுமே பேசாதீங்க ப்ளீஸ்…’னு மன்றாடினார். அதுதான் ரஜினி.


ரஜினியை அடிக்கடி நேரில் சந்தித்து பேசுவேன். பொதுவா தன்னைச் சந்தித்து பேசுகிறவர்களிடம், ரஜினி ‘அப்புறம்..?’ என்று ஆரம்பித்தால் கிளம்புங்கனு அர்த்தம். பலமுறை பார்த்து இருக்கிறேன். அதனால் நான் பார்த்து பேசிக்கொண்டு இருக்கும்போது, அவர் என்னைப் பார்த்து ‘அப்புறம்…? கேட்கும் முன்பே நான் அவரைப் பார்த்து ‘அப்புறம்…’ போட்டுவிட்டு கிளம்பி வந்துவிடுவேன்.


ஒருநாள் ஏவி.எம்ல ‘வீரா’ படப்பிடிப்புல ரஜினிய சந்திச்சேன். அப்போ தனிமையில இருந்தார். என்னை பார்த்ததும் சேர்ல இருந்து எழுந்து நின்று உதவியாளர் ஜெயராமை ஒரு பார்வை பார்த்தார். அடுத்த நிமிஷமே கையில் சேர் எடுத்து வந்தார். நான் உட்கார்ந்தவுடன் தன்னுடைய நெற்றில் பொட்டில் ஆட்காட்டி விரலை வைத்து என்னையே பார்த்தார். ‘கலைஞானம் சார்… என்னைச்சுற்றி இப்போ வி.ஐ.பி தயாரிப்பளருங்க வேலி போட்டு இருக்காங்க… அதைத்தாண்டி வெளியில என்னால வரமுடியலை… அதனால கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சரியான நேரத்துல உங்களை கூப்பிடுவேன்…’ என்று ஃப்ராமிஸ் செய்தார்.


காலம் வேகமா போயிக்கிட்டே இருந்துச்சு. அப்பல்லாம் பெரியவர் வி.கே.ராமசாமி ரஜினிய பாக்குறப்போ ‘ஏம்ப்பா ரஜினி எனக்கு ஒரேஒரு படம் நடிச்சுக் கொடுப்பா… என்னாட எல்லா கடனையும் அடைச்சுட்டு நான் நிம்மதியா கண்ண மூடுவேன்…’ என்று அடிக்கடி சொல்வார்.
திடீர்னு ஒருநாள் ரஜினி வீட்டுல இருந்து போன். ‘சார் உடனே கிளம்பி வீட்டுக்கு வர்றீங்களா..?’ ரஜினி கூப்பிட்டார். வீட்டுக்குள் போனதும் அங்கே பக்கவாதத்தால் பாதிச்ச வி.கே.ராமசாமி… ஆக்ஸிடென்ல கையுடைஞ்ச பண்டரிபாய்… ‘காளி’ பட தீ விபத்தால ஏகப்பட்ட பணத்தை இழந்த தயாரிப்பாளர் ஹேம்நாக்… ‘எஜமான்’ல புரொடக்ஷன் மேனேஜரா வேலை பார்த்த நாகராஜராவ்… ‘அபூர்வ ராகங்கள்’ தயாரிப்பாளர் இறந்துட்டார், அதனால அவரோட வாரிசுகள்… இவங்க எல்லாம் ஒண்ணா இருந்தாங்க.


முக்கியமான ஒருத்தரை சொல்லியே ஆகணும் அவர்தான் எம்.ஜி.ஆரோட பாடிகார்டா இருந்த, பத்மநாபன். சரியான எம்.ஜி.ஆர் வெறியர். எம்.ஜி.ஆர் சினிமாவில் நடிக்கும் காலத்தில் எப்போதும் அவர் கூடவே இருப்பார். சி.எம் ஆனபிறகு பத்மநாபனை சத்யா ஸ்டுடியோ மேனேஜராக்கிவிட்டு போனார்.
எம்.ஜி.ஆர். அமெரிக்க சிகிச்சைக்கு அப்புறம் 1987-ல தன்னோட கடைசி காலத்துல பத்மனாபனை தன்னோட ராமவரம் தோட்டத்துக்கு வரச்சொன்னார், எம்.ஜி.ஆர். பத்மாவோட குடும்ப நிலைமைய புரிஞ்சு, ‘உனக்கு 30-லட்சம் ரூம்ல மூட்டைக்கட்டி வச்சிருக்கேன் போய் எடுத்துக்கோ…’னு சொன்னார், எம்ஜி.ஆர். ‘தலைவரே நீங்க உயிரோட இருந்தா அதுவே போதும்’னு எம்.ஜி.ஆர் காலை பிடிச்சு கரகரனு கதறி அழுதார். எம்.ஜி.ஆர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், வற்புறுத்தியும் கடைசிவரை பணத்தை வாங்க மறுத்துட்டார், பத்மநாபன்.
ஆறு பெண் குழந்தைகளை பெத்து வச்சுக்கிட்டு கஷ்ட ஜீவனம் நடித்திக்கிட்டு இருந்த பத்மநாபன், திடீர்னு ஒருநாள் இறந்துட்டார். அப்பாவை இழந்த அவரோட குடும்பம் நிலைகுலைஞ்சு போயிடுச்சு.


‘ராணுவவீரன்’ ‘ஊர்க்காவலன்’ ஷூட்டிங் நடந்தப்போ ரஜினிகூடவே இருந்து ஹெல்ப் பண்ணினார், பத்மநாபன். அதனால ரஜினி மனசுல பத்மநாபன் இடம்பிடிச்சார்.
பத்மநாபன் மறைவுக்கு அப்புறம், அவரோட குடும்பம் கஷ்டப்படுற நிலைமையை கேள்விப்பட்டு அவரோட ஆறுபெண்களை போயஸ்கார்டன் வீட்டுக்கு வரவழைச்சு இருந்தார், ரஜினி. என்னை தனியே அழைத்தார் ‘ கலைஞானம் சார், இங்கே இருக்குற ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா தயாரிப்பாளராக்கி நான் நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு. ஆனா இப்போ இருக்குற நிலையில சாத்தியமில்லே. அதனால நான் நடிக்கப்போற ‘அருணாச்சலம்’ படத்துல கிடைக்குற லாபத்துல இவங்க எல்லாருக்கும் ஒரு தொகைய பங்கு தர நினைக்கறேன். அதனால உங்களோட இவங்களையும் தயாரிப்பாளரா ஒண்ணா சேர்த்துக்குங்க…’ என்று சொன்னார்.


நானே பார்த்து பார்த்து ஸ்டோரி, டயலாக் எழுதுற வசனகர்த்தா. அப்படிப்பட்ட நான் அவரது அர்த்தம் பொதிந்த வார்த்தை கூர்மையை பார்த்து நெகிழ்ந்து போனேன். ‘அருணாச்சலம்’ படம் ஏப்ரல் மாசம் ரிலீஸ்னு அறிவிப்பு வந்துச்சு. அதுக்கு ரெண்டுநாள் முன்னாடி எங்க எல்லாரையும் முன்னாடி கூப்பிட்ட மாதிரியே ஒரே நேரத்துல போயஸ் கார்டன் வீட்டுக்கு கார் எடுத்துட்டு வரச்சொன்னார்.
வீட்டுக்குள் இருந்த அறையில வரிசையா ட்ரங்க் பெட்டிகளை அடுக்கி வைத்திருந்தார். பெட்டிமேல் ஒவ்வொருத்தர் பெயரையும் பளிச்னு எழுதியிருந்தார். வி.கே.ராமசாமி, பண்டரிபாய், என்னை இப்படி எல்லோரையும் ஒவ்வொருத்தரா அழைச்சார் ‘ நான் உங்ககிட்ட குறிப்பிட்டுச் சொன்ன தொகையவிட டபுள் மடங்கு பணம் இதுல இருக்கு… ஹேப்பியா…’னு அவரோட பாணியில கேட்டார், ரஜினி.
நாங்க எல்லாரும் கண்கலங்கி ரஜினியோட பெரிய மனசைப் பார்த்து ஆடிப்போயிட்டோம்.


இந்த வருஷம் கடந்த மார்ச் மாசம் ஆரம்பத்துல இருந்தே அவருக்கு உடம்பு சரியில்லை. ‘எப்பவும் சுறுசுறுப்பா ஃபாஸ்ட்டா இருக்கிறவர் திடீர்னு டல்லா இருக்காரே…’ன்னு ஃபீல் பண்ணியிருக்கார், லதா. ‘மனசுக்குள்ளே ஏதோ கவலைய சுமந்துக்கிட்டு இருக்கார். மனம்விட்டு பேசக்கூடிய பழைய சினிமா ஆட்களை ஒண்ணா வீட்டுக்கு அழைச்சா கலகலன்னு குழந்தையா மாறி சிரிச்சுடுவார்னு நினைச்சிருக்காங்க.
ரஜினிக்கு நெருக்கமான பிடிச்சவங்க லிஸ்ட்டை பார்த்து… பார்த்து லதா தயார் செய்து இருக்காங்க. அந்த பட்டியல ஒருநாள் ரஜினிகிட்டே காட்டி இருக்காங்க. அந்த லிஸ்ட்ல ரஜினி டிக் பண்ணின ஆட்களை மட்டும் செலக்ட் செய்து இருக்காங்க.




மார்ச் மாசம் 18 அன்னிக்கு திடீர்னு லதாகிட்டே இருந்து போன் வந்துச்சு ‘அப்பா.. அவர் உங்களை சந்திக்கணும்னு ஆசைப்படுறார். அதனால நாளைக்கு மறக்காம வீட்டுக்கு வாங்க’னு சொன்னார். நானும் மறுநாள் மறக்காம போயஸ் கார்டன் போனேன்.
ரஜினி மனசுக்கு பிடிச்ச… அவரோட நெருங்கி பழகின பழைய ஆட்களான பஞ்சு அருணாச்சலம், டி.எம்.சௌந்தர்ராஜன், வாலி, மகேந்திரன் எல்லாம் குழுமி இருந்தாங்க. எல்லாரிடமும் பழைய சம்பவங்களை நினைவுபடுத்தி பச்சைக்குழந்தை மாதிரி சிரிச்சுக்கிட்டே இருந்தார், ரஜினி.
ஐஸ்வர்யா, சௌந்தர்யாகிட்டே எங்க எல்லாரையும் ஒவ்வொருத்தரா அறிமுகம் செஞ்சாங்க, லதா. மதியம் தடபுடலா நடந்த விருந்துல எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிட்டோம். ஒவ்வொருத்தர் இலையையும் பக்கத்துல இருந்து பார்த்து பார்த்து பதார்த்தத்தை பரிமாறுனாங்க, லதா.



கடந்த மே மாசம் 5-ம்தேதி ராத்திரி திடீர்னு ரஜினிகிட்டே இருந்து போன், ‘ சார் நான் ரஜினி பேசுறேன்… எப்படி இருக்கீங்க. நாளைக்கு காலைல ‘ராணா’ படத்தோட பூஜை. நிறைய பேருக்கு சொல்லலை. கொஞ்சம் ஆளுங்களுக்கு மாத்திரம் சொல்லி இருக்கேன். அதுல நீங்க ஒருத்தர். அதனால மறக்காம வந்துடுங்க’னு சொன்னார்.
மறுநாள் ‘ராணா’ பூஜை நடந்த ஏ.வி.எம் ஸ்டுடியோ போனேன். வழக்கமா ரஜினிகிட்ட எப்பவும் ஒரு துறுதுறு துள்ளல் இயற்கையா இருக்கும். அது ‘ராணா’ பூஜையில மிஸ்ஸிங். ரொம்ப டயர்டா இருந்தார். முகத்துல எந்தவித எக்ஸ்பிரஷனும் காட்டாம போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.


திடீரென்று பூஜையில் இருந்த யாரிடமும் எதுவும் சொல்லாமல், கொள்ளாமல் தன்னோட மேக்கப் ரூமுக்கு ஒடிப்போயிட்டார்.
ரஜினிக்கு என்னாச்சு? என்று யோசித்தபடி நானும் அவர் பின்னாடியே போனேன். அறையில் கொஞ்ச நேரம் காத்திருந்தேன். பாத்ரூம் போயிட்டு வெளியில வந்தவர், ரொம்ப டயர்டா இருந்தார். நான் ஒடிப்போய் குசலம் விசாரிச்சேன் ‘ஒண்ணுமில்லே சரியாயிடும்’னு சிரிச்சார். அவர் மனசை மாற்றும் விதமா, நான் கையில் கொண்டு போயிருந்த மலர் கிரீடத்தை தலையில் பொருத்தினேன். ‘இதெல்லாம் எதுக்கு வேணாமே’னு தயங்கினார். பின்னர் சிரித்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். அதன்பிறகு நடந்தது நாட்டுக்கே தெரியும். நான் ‘பைரவி’யில் பார்த்த ரஜினியை மறுபடியும் ‘கோச்சடையன்’ படத்துல பார்க்க ஆசையா காத்திருக்கேன்.


ரஜினி ஒரு அபூர்வமான பிறவி. தன்னோட எதிரிக்குகூட எந்த துன்பமும் வரக்கூடது, அவங்க நல்லாயிருக்கனும்னு பிரார்த்தனை செய்கிற பெரிய மனசுக்காரர். ஒருதடவை காவிரி பிரச்னை தமிழ்நாட்டுல தலைவிரிச்சு ஆடுச்சு. அந்த சமயத்துல ரஜினியபத்தி ஆளாளுக்கு விமர்சனம் செஞ்சாங்க. அப்போ ‘ தமிழ்நாட்டுல இருக்குறவங்க என்னை கன்னடன்னு கோபமா திட்டுறீங்க… கர்நாடகம் போனா என்னை மராட்டியன்னு மோசமா ஏசுறாங்க… மகராஷ்ட்ரா போனா நீ ஒரு சவுத் இந்தியன்னு சபிக்குறாங்க… நான் எங்கேதான் போவேன்’ என்று கதிகலங்கி கண்கலங்கி ரஜினி பேசுனது காட்சி அப்படியே என் கண்ணுல நிக்குது.” என்று கலங்கினார், கலைஞானம்.






நன்றி: விகடன்


நன்றி:www.envazhi.com

No comments: