September 21, 2011

டாஸ்மாக் ஊழியர்கள் நியாயமாகத்தான் நடந்து கொள்கிறார்களா?

டாஸ்மாக்,தமிழில்(தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்), 1983 ஆம் ஆண்டு அப்போதய முதல்வர் எம். ஜி. ராமச்சந்திரன் அவர்களால் தமிழகத்தில் மதுவகைகளின் மொத்த விற்பனைக்காக தொடங்கப்பட்ட அமைப்பாகும். ஆனால் 2003 ல் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசால் ஒரு சட்டத் திருத்தம் செய்யப் பட்டு சில்லறை விற்பனையிலும் டாஸ்மாக் அமைப்பே ஈடுபடும் என அறிவித்தார்கள்.


அதற்கு பல காரணங்கள் சொன்னாலும் ஒரு காரணம் மட்டும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.அது இனிமேல் மதுபானங்கள் மலிவு விலையில் விற்பனைச் செய்யப்படும் என்று அறிவித்ததுதான்.இந்த செய்தியைக் கேட்டது முதல் எங்கள் ஊர் குடி மக்கள் மிகவும் மகிழ்ந்தார்கள்.எங்கள் ஊர் என்ன தமிழக குடிமகன்கள் அனைவருமே மகிழந்திருப்பார்கள்.இனிமேல் MONITTER குவாட்டர் இருபத்தயிந்து ரூபாய் M.C குவாட்டர் முப்பது ரூபாய் பீர் இருபத்தயிந்து ரூபாய், V.S.O.P குவாட்டர் பாதி விலை என அனைத்துச் சரக்குகளுக்குமே அதன் நிகர விலையிலிருந்து பாதி விலையாக கணக்கு போட்டார்கள் குடிமக்கள்.மலிவு விற்பனை என்றால் பாதி விலையாகத்தான் இருக்கும் என்று நினைப்பது இயல்புதானே.ஆனால் அரசின் அறிவிப்பு வேறாக இருந்தது அதாவது இப்போது விற்கப்படும் மதுபானங்கள் அதே விலையில் தொடரும் என்றும் ,இது போக மலிவு விலை மதுபானமும் கிடைக்கும் என்று அறிவித்தார்கள்.


டாஸ்மாக் சில்லறைக் கடைகளும் திறக்கப்பட்டது. V.S.O.P குடிப்பவனும் முதல் நாள் மலிவு விலை மதுபானத்தைதான் கேட்டான் .அந்த அளவுக்கு மலிவு விலை மது குடி மகன்களிடையே ஒருவித ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தது.ஆனால் டாஸ்மாக்கில் வினியோகம் செய்யப்பட்டதோ தொண்ணூறு மில்லி புட்டியில் அடைக்கப்பட்ட அதற்கு முன் கேள்விப்படாத பெயர்களில் மதுபானங்கள்.குவாட்டர்,ஆஃப்,புஃல் என எதுவுமே கிடையாது.வெறும் மினி குவாட்டர் மட்டுமே அதாவது தொண்ணூறு மில்லிலிட்டர். இதன் விலை பதினயிந்து ரூபாய்தான்.அரசு அறிவித்த மலிவு விலை மதுபானம் இது தான் என மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுவிட்டது.அரசின் கடமையும் அதோடு முடிந்து விட்டது.

மலிவு விலை மதுபானத்தின் பெயர்களைக் கேட்டாலே அதிரும், உதாரணத்துக்கு ஒரு சில பெயர்கள் இங்கே லயன்,புல்லக்,டைகர் இப்படி சரக்கின் பெயரே வித்தியாசமாக இருக்கும்.குறைந்த பட்சம் பத்து வெவ்வேறான பெயரில் மலிவு விலை மதுபானம் விற்பனைக்கு வந்திருந்தது.

இதனால் பயனடைந்தவர்கள் கூலி வேலை செய்யும் பாமர மக்கள் மட்டும் தான் வேறு எவரும் மலிவு விலை மதுபானத்தை விரும்பியதாக தெரியவில்லை.அதற்கான தைரியமும் யாருக்கும் இல்லை ,அதைக் குடிப்பதற்கு மிகவும் சிரமப்படவேண்டும் காரணம் சரக்கின் சக்தி அப்படி அதன் மணமே(மணமா,நாற்றமா)நாலு தெருவுக்கு அந்தப்பக்கம் அடிக்கும் அவ்வளவு மணமிக்கது. அடுத்த இரண்டு நாட்களில் செய்திதாள்களில் மலிவுவிலை மதுபானம் குடித்து ஒருவர் உயிருக்கு ஊசல் என்றும் பல பேர் மருத்துவமனையில் அனுமதி என்றும் செய்திகள் வர ஆரம்பித்தன. நாள் தோறும் இப்படிப்பட்டச் செய்திகள் அதிகரித்தனவே தவிர குறையவில்லை.ஆனால் மலிவு விலை மது பானத்தின் விற்பனையும் அதிகரித்து கொண்டுதான் சென்றது.நாளடைவில் மலிவு விலை மதுபானங்கள் அனைத்துமே ஒரே பெயரில் அழைக்கப்பட்டன அந்தப் பெயர் விஷம்.இரண்டு குடிமகன்கள் சந்தித்துக் கொண்டால் விஷம் குடிக்க போலாமா என்றுதான் கேட்பார்கள்.அந்த லட்சணத்தில் அரசின் மலிவு விலை மது இருந்தது.இது போதாதென்று சில மாதங்களுக்கு பதினயிந்து ரூபாய் என விற்றுக் கொண்டிருந்த புட்டி அதன் பிறகு பதினெட்டு ரூபாய் ஆகியது, மேலும் ஒரு சில மாதங்களில் இருபது,இருபத்து மூன்று,இருபத்தைந்து,இருபத்தெட்டு என இறுதியில் ரூபாய் முப்பதில் வந்து நின்றது.

அரசு மதுபானக் கடைகளை கையகப்படுத்தும் ஓராண்டு முன்பு வரை முப்பது ரூபாய்க்கு மினி குவாட்டர் கிடைத்து வந்தது அரசு அதை அப்போதே தடை செய்திருந்தது குறிப்பிடத் தக்கது.

இப்படி! மலிவு விலை மதுமானம் என்று கூறிய அரசு ஒரு வருடத்திலேயே ஏனைய மது பானங்களின் விலையிலேயே மலிவு விலை மதுபானத்தையும் விற்பனை செய்தது.தனியாரிடமிருந்து மதுபானக் கடைகளை அரசு கையகப் படுத்தவே இந்த மலிவு விலை நாடகம் நடத்தப்பட்டது என்று பொதுமக்கள் பேசிக்கொண்டனர்.

தனியார்த்துறைதான் போலி மதுபானங்களை விற்கின்றனர் என்றால் அரசோ தன் அனுமதியோடு போலி மதுபானங்களை தானே விற்கிறது இது எந்த உலக ஞாயம் என்று தெரியவில்லை.

கார்நாடக மாநிலத்தில் விற்கபடும் M.C பிராந்தியும்,தமிழகத்தில் விற்கபடும் M.C பிராந்தியும் ஒரே நிறுவனத்தின் தயாரிப்புதானே,அப்படியென்றால் கர்நாடகத்தில் தரமாகவும் தமிழகத்தில் தரமற்றதாகவும் இருப்பதற்கு காரணம் என்ன?பெரும்பாலான மது வகைகள் இப்படிப்பட்ட தில்லு முல்லுகளுக்கிடையேதான் தமிழக மக்களுக்கு கிடைக்கிறது.அரசு இதை தெரிந்தே செய்கிறதா அல்லது தெரியாமல் நடக்கிறதா அது அவர்களுக்கே வெளிச்சம்.

இப்படிப் பட்ட போலி மது பானங்களைக் குடிப்பது வேறு யாருமல்ல நம் அண்ணனும்,அப்பாவும்தான்.

இப்படிப்பட்ட போலி மதுபானங்கள் விற்பதைத் தடுக்க எந்த ஒரு அரசியல் கட்சியோ அல்லது சமூக அமைப்புகளோ போராடியதாகத் தெரியவில்லை.

மது பானங்கள் குடிப்பதால் உடல் நலத்துக்கும் தீங்கு விளைவிக்க கூடியது அதே நேரம் சமூக நலனுக்கும் தீங்கு விளைவிக்க கூடியதாகும். இதை யாரும் மறுப்பதற்கில்லை.நாட்டில் நடக்கும் பெரும்பாலன குற்றங்கள் குடி போதையில் நிகழ்த்தப்பட்டவை என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.அதற்காக மத்திய அரசும் ,மாநில அரசும் மது விற்பனையைத் தடைச் செய்து விட்டதா என்ன?இல்லையே.
தரமான பொருள்,தரமற்ற பொருள் அது இருக்கட்டும்.தரமற்றப் பொருளைக் கொடுத்து விட்டு இது தரமான பொருள்தான் என்று கூறுவது மக்களை ஏமாற்றும் முயற்சி அல்லவா, எங்கும் இல்லாதக் காட்சியாக டாஸ்மாக் கடைகளில் மட்டும்தான் வெளிப்படையாகவே லஞ்சம் வாங்கிறார்கள்.ஒரு குவாட்டரின் விலை 75 ரூபாய் என்றால் விற்கப்படும் விலையோ எண்பது ரூபாய் அதிகமாக வாங்கப்படும் பணம் டாஸ்மாக் ஊளியர்களுக்கு இது ஒரு அறிவிக்கப்படாதச் சட்டமாக தமிழகம் முழுவதும் இருந்து வருகிறது.
ஒரு உணவகத்துக்கு சென்று முப்பத்தயிந்து ரூபாய்க்கு சாப்பிட்டு விட்டு பரிமாறியவருக்கு ரூபாய் ஐந்து அன்பளிப்பு என்ற முறையில் சேர்த்து நாற்பது ரூபாயாக உண்ட உணவுக்கு பணம் செலுத்துவோம்.இதில் நாம் அதிகபட்சமாக தரும் பணம் நம்முடைய விருப்பத்தால் அந்த பணியாளருக்கு தருவது. ஆனால் மதுபானக் கடைகளில் அப்படியில்லை எழுபத்தயிந்து ரூபாய் குவாட்டருக்கு எண்பது ரூபாய் கொடுத்தால் தான் சரக்கே கைக்கு வரும்,உணவகங்களில் நாம் தருவது அன்பளிப்பு.ஆனால் டாஸ்மாக்குகளிலோ வலுக்கட்டாயமாக பிடுங்கி கொள்கிறார்கள்.இதுதான் கூடாதென்கிறேன். என் விருப்பமில்லாமல் என்னிடமிருந்து வாங்கப்படும் ஒரு ரூபாயாக இருந்தாலும் அது வழிப்பறிக்கு சமானமானது தானே? அவர்களைக் குற்றம் சொல்லி பயனில்லை காரணம் அவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் அப்படி மேலும் அரசு அலுவலர்கள் பெறும் எந்த சலுகைகளும் அவர்களுக்குத் தரப்படுவதில்லை ஏனென்றால் அவர்கள் அரசு ஊழியர்களாக அங்கீகரிக்கப் படவில்லை.நிலமை இப்படி இருக்கும் போது அவர்கள் வெளிப்படையாகவே செய்யும் தவறுகள் கண்டு கொள்ளப்படாமல் இருக்கின்றன.


இவை அனைத்துக்குமே முழுக்க முழுக்க காரணம் அரசு இயந்திரம்தான்.அரசிற்கு வருமானம் மட்டும் வந்தால் போதும் என்ற எண்ணத்தோடு இருப்பதால் இந்த சீர்கேடு நிகழ்கிறது. இதற்கான தீர்வு டாஸ்மாக் ஊளியர்களையும் அரசு ஊளியர்களாக மாற்ற ஆவன செய்ய வேண்டும்,மேலும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளும் அவர்களுக்கு தரப்பட வேண்டும்.அதுமட்டுமல்லாமல் தவறு செய்தால் கடுமையான தண்டனைகள் கிடைக்கும் என்ற உணர்வையும் அவர்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும்.

ஏதோ அவர்கள் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியது போல் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்ற நினைக்க வேண்டாம்.சிறு தவறுகளை பழக்கப்படுத்திக் கொண்டால் பெருந்தவறுகளும் பழகிவிடக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும் என்பது என் எண்ணம் அதற்கு உதாரணமாக ஸ்பெக்ட்ரம் ஊழலையும்,காமன்வெல்த் ஊழலையும் சொல்லலாம்.நான் சொல்வதாலோ நீங்கள் சொல்வதாலோ யாரும் மாறிவிடப் போவதும் இல்லை, கேட்க போவதும் இல்லை,அதற்காக எது நடந்தாலும் கண்ணை மூடிக்கொண்டா இருக்க முடியும்?








பின்குறிப்பு.

மேற்கூறிய கருத்துக்கள் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டதல்ல .இது தவறு என்ற என் மன ஆதங்கத்தால் எழுதப்பட்டவையாகும்.

2 comments:

சக்தி கல்வி மையம் said...

சிறு தவறுகளை பழக்கப்படுத்திக் கொண்டால் பெருந்தவறுகளும் பழகிவிடக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும் என்பது என் எண்ணம்//

உண்மைதான் நண்பரே...

Try 🆕 said...

நன்றி நண்பரேநன்றி நண்பரே