September 5, 2011

முதல்வருக்கு தமிழருவி மணியன் அவர்கள் எழுதிய கடிதம்.இரண்டாம் பாதி,

குற்றம் சாட்டப்பட்டவர் மீது அனுதாபத்தையும்,சட்டத்தின் மீது எதிர்ப்பு உணர்வையும் எழச் செய்யும் தண்டனையால் சமுதாயத்திற்கு நன்மையை விட தீமையே வந்து சேரும்.(LAW COMMISSION REPORT-பக்கம் 328 )என்று சட்ட கமிஷன் அறிக்கை சொல்கிறது.

சென்னை உயர்நீதி மன்றத்தில் மூவருக்கும் நியாயம் கிடைக்கும் என்று முழுமையாக நாங்கள் நம்புகிறோம்.மது மேத்தா இந்திய அரசு வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் கருணை மனு எட்டு ஆண்டுகளுக்குப் பின் நிராகரிக்கப்பட்டதன் மூலம் குற்றம் இழைத்ததற்கான மரண தண்டனை பெற்ற கியாஸிராம் என்பவர் மரணத்தின் விழிம்பில் நீண்ட காலம் மன உளைச்சலோடு வாழ்வைக் கழித்திருக்கிறார் என்று சுட்டிக்காட்டி,அவருடைய மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியது.(MADU METHA VS UNION OF INDIA) உச்ச நீதி மன்றம் ஒருவருக்கு மரண தண்டனையை உறதி செய்து இரண்டு ஆண்டுகளுக்கு பின்பும் தண்டனை நிறைவேற்றப் படாவிடின் அதை ஆயுள் தண்டனையாக மாற்றிய தீர்ப்புகள் பல உண்டு.

நீதி மன்றத்தில் விவாதிக்கப்படும் வழக்கில் நீங்களோ நானோ விமர்சனத்தில் இறங்க முடியாது.என் கடிதத்தின் நோக்கமும் அது வன்று.



பேரறிவாளன்,முருகன்,சாந்தன் மூவரு சிறைக் கம்பிகளிலிருந்து விடுபட நீங்கள் உங்கள் அரசியல் ஆளுமையை உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் பயன்படுத்த வேண்டும்.ராஜீவ் காந்தி படுகொலையில் இந்த மூவரின் பங்களிப்பு ஐயத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை.ஆனாலும் அவர்கள் மூவரும் இருபது ஆண்டுகளுக்கு மேல் சிறைக்குள்ளேயே வாழ்வின் வசந்தமயமான இளமையை முற்றாக இளந்துவிட்டார்கள்.ஆயுள் தண்டனையை விட கூடுதலாக அவர்கள் அனுபவித்து விட்டார்கள்.சட்டத்தின் நோக்கம் குற்றம் செய்தவரை திருத்துவதேயன்றி தீர்த்துக் கட்டுவது அன்று.



முதல்வரே நீங்கள் வைணவ சம்பிரதாயத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்.ஒரு மனிதன் வீதியில் அடிபட்டு விழுந்து கிடந்தால், விழுந்து கிடப்பவன் வேறு யாரும் அல்ல: அது நான் என்று உணர்பவனே வைணவன் என்கிறது இராமநுஜ தரிசனம்.சிலுவையில் அறைந்தவர்களுக்குப் பாவ மன்னிப்பு வேண்டிய பெருங்கருணையாளர் கர்த்தர் இயேசு.தன்னுடைய சிறிய தந்தை ஹம்சாவின் உடலைப் பிளந்து ஈரலைச் சுவைத்த ஹிந்தாவையும், அருமை மகன் ஜைனப்பை ஈட்டியால் குத்திய ஹப்பரையும்,கைபர் விருந்தில் நஞ்சு கலந்த யூத பெண்ணையும் மன்னித்த அருளாளர் நபிகளார்.கோட்சேவையும் மன்னிக்கும் மனம்கொண்ட காந்தியின் பெயரில் கடை விரித்த நம் உள்ளூர் காங்கிரஸ்காரர்களுக்கு மட்டும் மன்னிக்கும் மனோபாவம் வாய்க்கவே இல்லை. சட்டம் கடைமையை செய்யட்டும் என்று சொல்பவர்கள் சட்டம் ஒழுங்காக கடமையைச் செயதிருந்தால் பல சங்கடங்களுக்கு ஆளாகி இருப்பார்கள் என்பதை நான் அறிவேன்.
அவர்களோடு மட்டும் எந்த சூழ்நிலையிலும் கை கோர்த்து விடாதீர்கள்.

தமிழின விரோதிகள் இன்று ஆதரிப்பாரற்று அரசியல் அனாதைகளாகிவிட்டனர்.காங்கிரஸைத் தவிர அனைத்துக் கட்சிகளும் மூவர் விடுதலைக்கு ஆதரவாக குரல் கொடுப்பதைக் கவனியுங்கள். தூக்குத் தண்டனை இனி யாருக்கும் இருக்கலாகாது என்று முடிவெடுத்து செயற்படுங்கள்.சரித்திரம் என்றும் உங்களுக்கு நீங்காத இடத்தைத் தேடித் தரும்.



வாழ்க்கை புனிதமானது அதைப் பறிப்பது அரக்கத்தனமானது, என்ற கிருஷ்ண ஐயரின் அர்த்தமுள்ள வாசகத்துக்கு உயிர் கொடுங்கள். ஆட்சி மாற்றம் நிகழ வேண்டும் என்று எழுத்திலும் பேச்சிலும் கருத்து யுத்தம் நடத்தியவன் நான்.அதற்காக நீங்கள் முதல்வரானதும் போயஸ் தோட்டத்தில் பூங்கொத்துக் கொடுக்க வரிசையில் நான் வந்து நிற்கவில்லை.அது என் சுதர்மத்துக்கும்,சுயமரியாதைக்கும் தகாது.மரண வாசலில் நிற்கும் மூவருக்கும் மறு வாழ்வு கொடுங்கள்.தமிர் கூட்டம் தன் நன்றி செலுத்த உங்கள் வாசல் தேடிப் பூங்கொத்துகளுடன் வந்து நிற்கும். அந்த வரிசையில் நிச்சயம் நானும் நிற்பேன்.
இவ்வாறு அந்த கடிதம் நிறைவடைகிறது.





எது எப்படியோ மூவரின் தூக்கிற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருப்பது ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கு கிடைத்த வெற்றியாகவே நான் கருதுகிறேன்.தமிழர்கள் ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இது ஒரு சின்ன எடுத்துக்காட்டு.




நன்றி...

தமிழருவி மணியன்

மற்றும்


ஜுனியர் விகடன்.

No comments: