தூக்கு மரத்தை
தூக்கில் இடுங்கள்...
மன்னர் கால மரபும்
கொடுமையும் இன்னும் தொடர்தல்
இழிவிலும் இழிவாம்
அன்னை நேர் குடி அரசு தன் மக்கள்
இன்னுயிர் பறித்தல் ஏற்புடைத்தாமோ?
தூக்கு மரத்தை தூக்கில் இடுங்கள்....
வருந்துதல் வேண்டா
சாவின் மடியில் இருத்துதல்
வேண்டா தூக்குக் கயிற்றில்
பொருத்துதல் வேண்டா
எவர் தவறிழைப்பினும் திருத்துதல் செய்வீர்....
திருத்துதல் செய்வீர்....
தூக்கு மரத்தை தூக்கில் இடுங்கள்
மன்னன் கொன்றதும்
மன்னனைக் கொன்றதும்
முன்னை பிரஞ்சுப் புரட்சியில் பார்த்தோம்....
அந்நில அரசில் வழிவழி வழக்கில்
சென்னி அறக்கும் செயல் இன்றுண்டா?
தூக்கு மரத்தை தூக்கில் இடுங்கள்
சிறுத்தை கொல்லுதல் தடுக்கும் சட்டம்
மரத்தை வெட்டுதல் தடுக்கும் சட்டம்
பறித்தல் என்னடா மாந்தன் உயிரை?
தரத்தில் மாந்தன் உயிர் தாழ்வானதோ?
தூக்கு மரத்தை தூக்கில் இடுங்கள்....
புத்தர் அன்பில் நிலைத்த மண்ணில்
உத்தமர் காந்தி உயிர்த்த மண்ணில்
சித்தர் வள்ளலார் சிலிர்த்த மண்ணில்
எத்தனை கழுத்தை இதுவரை முறித்தீர்.
தூக்கு மரத்தை தூக்கில் இடுங்கள்....
இந்தக் கவிதை திரு.காசி ஆனந்தன் அவர்கள் எழுதியது. 7.9.2011 தேதியிட்ட ஜுனியர் விகடன் வார இதழில் பிரசுரிக்கப்பட்டது.
நன்றி
ஜுனியர் விகடன்.
No comments:
Post a Comment