September 5, 2011

முதல்வருக்கு தமிழருவி மணியன் அவர்கள் எழுதிய கடிதம்...

7.9.2011 தேதியிட்ட ஜுனியர் விகடன் இதழில் திரு.தமிழருவி மணியன் அவர்கள் முதல்வருக்கு எழுதிய கடிதம் ஒன்று பிரசுரிக்கப்பட்டிருந்தது.அந்தக் கடிதத்தை(கட்டுரை)படித்த போது பல உணர்வுகள் என்னகத்தே தோன்றின.அவ்வளவு உணர்வுப்பூர்வமாக அந்தக் கடிதம் தமிழருவி மணியன் அவர்களால் எழுதப்பட்டிருந்தது.
நீங்களும் படித்துப் பாருங்கள்.கடிதத்தின் தொகுப்பு இதோ.





மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு வணக்கம்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழவும் நீங்கள் முதல்வர் நாற்காலியில் அமர்ந்து அரசின்அதிகார மையத்தில் பரிபாலனம் நடத்தவும் வாக்களித்த மக்களின் உணர்வுக்கு மதிப்பு அளித்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு தீர்மானங்களைச் சட்டமன்றத்தில் நிறைவேற்றியதற்காக முதலில் என் நெஞ்சார்ந்த நன்றி மலர்களைச் சமர்ப்பிக்கிறேன்.


ஈழத்தில் நடந்த இனப் படுகொலையில் இந்திய அரசுக்கு மிக பெரிய பங்கு உண்டு என்பது பொய்யின் நிழல் படாத நிஜம்.

மன்மோகன் அரசுக்கு மனம் நோகும் என்று தயங்காமல் சோனியா காங்கிரசுக்கு கோபம் கொப்பளிக்கும் என்று அஞ்சாமல் இலங்கையின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று நீங்கள் ஒரு மனதாக ஓர் அற்புதமான தீர்மானம் நிறைவேற வழி வகுத்ததன் மூலம், உலக தமிழர்களின் நெஞ்சங்களில் உயர்ந்த இடத்தை அடைந்தீர்கள்.


பல்லாண்டுகள் அகதி முகாம்களில் அல்லலுற்றுத் தவிக்கும் ஈழத் தமிழருக்கு ,நலிவுற்ற தாயக தமிழருக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தையும் வழங்கி இருண்டு கிடக்கும் அவர்களுடைய இல்லங்களில் ஓரளவு வெளிச்ச விளக்கை ஏற்றிவைத்தீர்கள்.


பேரறிவாளன்,முருகன்,சாந்தன் ஆகிய மூவருடைய கருணை மனு நம் குடியரசுத்தலைவரால் நிராகரிக்கப் பட்டதும்,செப்டம்பர் 9ஆம் நாள் அவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் என்று தேதி குறிக்கப்பட்டதும் ,அமைதியை நாடும் தமிழினம் மாநிலம் எங்கும் ஆர்ப்பரித்து எழுந்தது.

மத்தியில் ஆழ்வோரின் மரணப் பசிக்கு மூன்று உயிர்களை இரையாக்க நீங்கள் எந்த நிலையிலும் அனுமதிக்கலாகாது என்று ஒட்டு மொத்த தமிழினமும் ஓங்கி குரல் கொடுத்தது.

இளைஞன் முத்துகுமாரைப் போல் செங்கொடி என்ற இளம் சமூகப் போராளிப் பெண்,மூவர் உயிரையும் காக்க தீரத்துடன் தீக்குளித்து நெருப்பில் வெந்து நீறானாள்.அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும்,மனித உரிமை ஆர்வலர்களும் நீங்கள் முன் வந்து மூன்று பேரையும் காக்க வேண்டும் என்று கனிவுடன் கை கூப்பி வேண்டினர்.


பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் கருணை மனு ஜனாதியால் நிராகரிக்கப்பட்ட நிலையில் ,இதனை மாற்றுவதற்கு எந்தவித அதிகாரமும் மாநில முதலமைச்சர் என்ற முறையில் எனக்கு இல்லை என்று நீங்கள் சட்டப்பேரவையில் கை விரித்தப்போது,தமிழகம் கலங்கித்தவித்தது.ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பின்பு மீண்டும் அதே பொருள் தொடர்பான கருணை மனுவை மாநில கவர்னர் பரிசீலிக்க வேண்டும் என்று மாநில அரசு கோர முடியாது என 1991 ல் மத்திய அரசு தெளிவுரை வழங்கியுள்ளது. என்று கூறி நீங்கள் இந்தப் பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்க முயன்றபோது தமிழரின் நம்பிக்கை தளர்ந்து போனது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடையும் ,சட்டமன்றத்தில் நீங்கள் நிறைவேற்றிய இரண்டாவது தீர்மானமும் பாளம் பாளமாய் வெடித்துக்கிடந்த வறண்ட நிலத்தில் வான் மழை வந்து விழுந்தது போன்ற உணர்வை ஊட்டின.


சட்டத்தின் சந்நிதானத்தில் விழி மூடி கிடந்த நீதி தேவதை முற்றாக தூங்கிவிடவில்லை.உங்களுடைய நெஞ்சத்தில் நிழலாடும் நியாய உணர்வும் நிறம் மாறவில்லை மக்களின் விருப்பத்திற்கு நீங்கள் வளைந்து கொடுத்ததில் ஜனநாயகம் நிமிர்ந்துவிட்டது.



அறிவார்ந்த முதல்வரே நீங்கள் சட்டம் படித்து ஒரு சிறந்த வழக்கறிஞராக வர வேண்டும் என பள்ளிப் பருவத்தில் கனவு கண்டதாக ஒரு நேர்காணலில் பதிவு செய்து இருக்கிறீர்கள்.அந்தக் நிறைவேறியிருந்தால்,நிச்சயம் நீங்கள் முதல்வராகியிருக்க முடியாது.முறையாக நீங்கள் சட்டக்கல்லூரியில் சேர்ந்து படிக்காவிடினும் சட்டத்தின் கூறுகளைச் சரியாகப் புரிந்துக்கொள்ளும் ஆற்றல் உங்களுக்கு உண்டு.

அரசியலமைப்புச் சட்டம் ,அநியாயமாக மனித உயிர் பறிக்கப்படலாகாது என்ற விழிப்பு உணர்வின் விளைவாக ஏற்படுத்திய பாதுகாப்பு கவசம்தான்,ஜனாதிபதிக்கும் ஆளுநருக்கும் வழங்கி இருக்கும் கருணை காட்டும் உரிமை.

ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப் பட்ட பின்பு அதை மாற்றும் அதிகாரம் எனக்கு இல்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள் .ஆனால் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற பின்பும் சமூக அநீதிகளுக்கு எதிராக ஓயாமல் போராடிவரும் முதிர்ந்த போராளி வி.ஆர்.கிருஷ்ண ஐயர் உங்களுக்கு வரைந்த கடிதத்தின் வாசகங்களை உங்கள் நினைவில் நிறுத்த வேண்டுகிறேன்.


ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப் பட்ட நிலையில், மாநில ஆளுநர் அதே விவகாரத்தில் கருணை மனுவை அங்கீகரிப்பது முறையன்று.ஆனால் ஜனாதிபதியோ ,ஆளுநரோ ஒருமுறை நிராகரித்த கருணை மனுவின் மீது மீண்டும் மறு பரிசீலனை செய்ய வாய்ப்பு உண்டு. மத்திய அரசின் உள்துறை செயலர் கருணை மனு நிராகரிப்பை மறுபரிசீலனை செம்ய வேண்டி ஜனாதிபதிக்கு விண்ணப்பம் வைத்தால் அதை அவர் ஏற்று தண்டனைக் குறைப்பை வழங்க முடியும்.


ஒரே ஒரு முறைதான் கருணை மனு மீது ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க முடியும் என்று அரசியலமைப்புச் சட்டம் கட்டுப்படுத்தவில்லை என்று கிருஷ்ண ஐயர் உங்களுக்கு தெளிவுபட எழுதியிருக்கிறார். இப்போது மூவரின் மரணக் கயிறுகளை அறுத்து எறியும் கத்தி "நம் தமிழர்" ப.சிதம்பரத்தின் அமைச்சகத்திடம் உள்ளது.

உள்துறை அமைச்சரை நிர்பந்திக்கும் இடத்தில் மன்மோகன் இருக்கிறார்.தமிழகத்தின் கொந்தளிப்பை மிகச் சரியாக உணர்த்திடும் ஆற்றல் உங்களுக்கு இருக்கிறது. அதனால் நல்ல முடிவு கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.


பரவலாக மக்களிடையே பெருக்கெடுக்கும் உணர்வுகளுக்கும் ,அபிப்பிராயத்துக்கும் உரிய மதிப்பு அளித்து தண்டனை குறைப்பை தருவதில் தவறு இல்லை.




கடிதம் இத்துடன் நிறைவு பெறவில்லை சிறு தடங்கலால் இத்துடன் இந்த பதிவு முற்றுப்பெறுகிறது.கடிதத்தின் ஏனைய பகுதிகள் அடுத்த இடுகையில் நன்றி.

No comments: