November 15, 2011

பெட்ரோல் விலை குறைந்து விட்டதா?ஆச்சர்யமாக இருக்கிறதே.

கடந்த 3 ஆண்டுகளில் முதல் முறையாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.85 குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான வரியும் சேர்த்து சென்னையில் ரூ.2.35 குறைந்துள்ளது. இது நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.


கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், பெட்ரோல் விலையை நிர்ணயிப்பதில் மத்திய அரசு தனக்குள்ள அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களிடமே ஒப்படைத்தது. அதன் பிறகு, இதுவரை 10க்கும் மேற்பட்ட முறை பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிகரித்திருக்கின்றன.
அமெரிக்க டாலருக்கு இணையாக ரூபாய் மதிப்பு சரிவால், கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு அதிகரித்ததாகவும், டிசம்பர் மாதத்துக்கான கச்சா எண்ணெய் இறக்குமதி விலை உயர்ந்ததாகவும் கூறி, கடைசியாக இம்மாதம் 3ம் தேதி பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.1.82 உயர்த்தின. விலை உயர்வுக்கு எதிர்க் கட்சிகள் மட்டுமின்றி ஐ.மு.கூட்டணி கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
மத்திய அமைச்சரவையில் இருந்து விலகப் போவதாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி எச்சரித்தார். இதுதொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்கை திரிணாமுல் எம்.பி.க்கள் சந்தித்து பேசினர். எனினும், விலை உயர்வை வாபஸ் பெற இயலாது என்று அவர்களிடம் பிரதமர் கைவிரித்தார். இதையடுத்து, இனி பெட்ரோல்விலையை உயர்த்தினால் அரசில் இருந்து விலகுவோம் என்று மம்தா கூறினார்.
அப்போது ஒரு பேரல் 121.67 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை இப்போது 115.85 டாலராக குறைந்துள்ளது. எனவே, பெட்ரோல் விலையை குறைக்க இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் தகவல் வெளியானது.
எனினும், பெட்ரோல் விலை குறைய வாய்ப்பே இல்லை என்றும், எண்ணெய் நிறுவனங்கள் அதிக நஷ்டம் அடைவதால் அது சாத்தியமாகாது என்றும் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று முன்தினம் கூறினார். அதே கருத்தை பிரதமர் மன்மோகன்சிங்கும் தெரிவித்திருந்தார். ‘பெட்ரோல் விலையை குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை’ என்றார் அவர்.
இந்நிலையில், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2 வரை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் பரிசீலித்து வருவதாக நேற்று முன்தினம் இரவு முதல் தகவல்கள் வெளிவந்தபடி இருந்தன. இதுபற்றி டெல்லியில் நேற்று காலை பெட்ரோலிய அமைச்சக உயரதிகாரி ஒருவர்கூறுகையில், ‘சர்வதேச சந்தை நிலவரப்படி பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயிக்கின்றன. இப்போது கச்சா எண்ணெய் விலை சிறிது சரிந்துள்ள நிலையில் அதன் பலனை நுகர்வோருக்கு அளிக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டிருக்கலாம்’ என்றார்.
இந்த நிலையில், எண்ணெய் நிறுவனங்களின் மாத ஆய்வு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. அதில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்களின் உயரதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில் பெட்ரோல் விலையை குறைத்துக் கொள்ள முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.85 குறைக்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் நேற்று மாலை அறிவித்தன. அதன்படி, விலையுடன் வரியும் குறைவதால் சில்லரை விற்பனையில் விலை அதிகபட்சமாக ரூ.2.35 வரை குறையும் என்று தெரிவித்தன. சென்னையில் பெட்ரோல் விலை ரூ.2.35 குறைந்து ரூ.72.73ல் இருந்து ரூ.70.38 ஆகியுள்ளது. 2009க்கு பிறகு கடந்த 33 மாதங்களில் (சுமார் 3 ஆண்டுகள்) முதல் முறையாக பெட்ரோல் விலை குறைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இப்போதைய விலை புதிய விலை குறைப்பு
சென்னை ரூ.72.73 ரூ.70.38 ரூ.2.35
டெல்லி ரூ.68.64 ரூ.66.42 ரூ.2.22
கொல்கத்தா ரூ.73.15 ரூ.70.84 ரூ.2.31
மும்பை ரூ.73.81 ரூ.71.47 ரூ.2.34
மாதம் உயர்வு
2010
ஏப்ரல் ரூ.0.52
ஜூன் ரூ.3.68
செப்டம்பர் ரூ.0.37
அக்டோபர் ரூ.0.76
டிசம்பர் ரூ.3.26
2011
மே ரூ.5.00
செப்டம்பர் ரூ.3.00
நவம்பர் 3 ரூ.1.82
2006ல் விலை ரூ.52.71
2011ல் நேற்று ரூ.70.38

செய்திகள்.www.dinakaran.com

2011 ஆண்டின் மிகப்பெரிய ஆச்சர்யமாக இந்த செய்தியை சொல்லலாம்.தற்போது கூட பெட்ரோல் விலை அதிகரித்ததற்கு கூட மக்களிடையே எதிர்ப்பு கிளம்பினாலும் கிளம்பிய வேகத்திலேயே அடங்கியும் விட்டது.மாதா மாதம் இதைத்தானே பண்றீங்க என்ற எண்ணத்தினால் கூட இருக்கலாம்.அப்படி நோந்து போயிருந்த மக்களுக்கு இந்த செய்தி ஆச்சர்யமானதாகத்தான் இருக்கும்.பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்று வீதிக்கு வந்து போராடினால் கண்டு கொள்ளாத அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் இப்போது அவர்களாகவே பெட்ரோலின் விலையை குறைத்திருக்கிறார்கள்.

எனக்கென்னவோ இதுல சந்தேகமாதான் இருக்கிறது .குறைக்கிற மாதிரி குறைத்துவிட்டு பின்னாடி விலையை மேலும் அதிகரிப்பார்களோ.

எது எப்படியோ நல்லது நடந்தா சரி.

1 comment:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.