October 29, 2011

என்ன நடக்கிறது அன்ன ஹசாரே குழுவில்.

அன்னா ஹசாரே இயக்கத்தின் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் பல்வேறு சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில் இந்தக் குழுவை கலைத்துவிட்டு புதிய குழு அமைக்க அன்னா திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ளார். இதன் உயர்மட்டக்குழுவில் பிரபல வக்கீல் சாந்திபூஷன், அவரது மகன் பிரசாந்த் பூஷன், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடி, வருமானவரித்துறை முன்னாள் அதிகாரி அரவிந்த் கெஜ்ரிவால், கர்நாடக மாநில லோக் ஆயுக்தா முன்னாள் தலைவர் சந்தோஷ் ஹெக்டே, சமூக ஆர்வலர் அக்னிவேஷ், மேதா பட்கர் உள்பட பலர் இடம் பெற்றிருந்தனர்.
மத்திய அரசின் உளவாளியாக செயல்படுவதாக அண்மையில் அக்னிவேஷ் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதை தொடர்ந்து அவர் அன்னாகுழுவிலிருந்து விலக்கப்பட்டார். அன்னா குழுவில் ஜனநாயகம் இல்லை என அக்னிவேஷ் குற்றம் சாட்டினார். இந்த சம்பவத்தை தொடர்ந்து காஷ்மீர் பிரச்னையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அன்னா குழுவில் இடம் பெற்றுள்ள பிரபல வக்கீல் சாந்தி பூஷன் கருத்து தெரிவித்தார். இதற்கு அன்னா எதிர்ப்பு தெரிவித்தார். பிரசாந்த் பூஷனின் கருத்துகளில் தனக்கு உடன்பாடு இல்லை என மறுப்பு தெரிவித்தார்.
பிரசாந்த் பூஷனை உயர்மட்டக் குழுவிலிருந்து நீக்க வேண்டும் என பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் அன்னாவுக்கு நெருக்கமான அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. வருமான வரித்துறையில் பணி செய்த போது, மேல் படிப்புக்காக சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுத்ததாகவும், மேல்படிப்பு முடித்தவுடன் பணியிலிருந்து நின்று விட்டதாகவும் கெஜ்ரிவால் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கு பதில் அளிக்க கெஜ்ரிவால் கால அவகாசம் கேட்டுள்ளார். மேலும், அன்னா அறக்கட்டளைக்கு அனுப்பப்பட்ட நிதியை, தனக்கு சொந்தமான அறக்கட்டளைக்கு மாற்றிக் கொண்டதாகவும் கெஜ்ரிவால் மீது சர்ச்சை கிளம்பியது.
இதற்கிடையில் கிரண்பேடி மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. விமானத்தில் சாதாரண வகுப்பில் பிரயாணம் செய்து விட்டு உயர்வகுப்புக்கான டிக்கெட் பணத்தை விழா குழுவினரிடம் வசூலித்துக் கொண்டதாக அவர் மீது புகார் எழுந்தது. தனது அறக்கட்டளைக்கு நிதி திரட்டுவதற்காக இவ்வாறு செய்ததாக கிரண்பேடி விளக்கம் அளித்தார். கூடுதலாக வசூலித்த கட்டணத்தை திருப்பி தந்து விடுவதாகவும் தெரிவித்தார். இதற்கிடையில் அவர் நடத்தும் இரண்டு அறக்கட்டளைகளுக்கு வருமானவரித்துறை நேற்று நோட்டீஸ் அனுப்பியது.
அரியானா மாநிலம் ஹிசார் இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக அன்னா குழுவினர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.இதில் காங்கிரஸ் பலத்த தோல்வியடைந்தது. ஒரு கட்சிக்கு எதிராக தேர்தல் பிரசாரம் செய்தது தவறு என லோக் ஆயுக்தா முன்னாள் தலைவர் சந்தோஷ் ஹெக்டே கருத்து தெரிவித்தார். காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அன்னா குழுவிலிருந்து ராஜிந்தர் சிங் மற்றும் ராஜகோபால் ஆகியோர் விலகினர். அன்னா திசைமாறி செல்வதாக ராஜிந்தர்சிங் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் அன்னா இயக்கத்தின் உயர்மட்டக்குழு இன்று டெல்லியில் கூடுகிறது.
ஏற்கனவே மவுன விரதம் இருந்து வரும் அன்னா இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளார். சந்தோஷ் ஹெக்டேவும், மேதாபட்கரும் இன்றைய கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். குழு உறுப்பினர்கள் பல்வேறு சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில் குழுவை கலைத்து விட்டு அரசியல் சார்பு இல்லாத புதிய உறுப்பினர்கள் கொண்ட குழுவை அமைக்க அன்னாவுக்கு யோசனை வழங்கப்பட்டுள்ளது. சட்ட அனுபவமும், ராணுவ அனுபவமும் கொண்டவர்களை உறுப்பினர்களாக சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இன்று டெல்லியில் நடைபெறும் உயர்மட்டக்குழு கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.


இந்த செய்தியை படிக்கும் போது எனக்கு தோன்றியது ,ஆழும் வர்க்கத்தை எதிர்த்ததால் இந்த நிலையா இல்லை அரசியல் கட்சிகளில் ஏற்படும் உட்கட்சி பூசல் போல் அன்ன ஹசாரே குழுவிலும் ஏதேனும் பூசல் புகுந்து விட்டதோ?


ஊழலுக்கு எதிராக போராடியவர்கள் மீது ஊழல் புகார்கள்.என்ன கொடுமை சார் இது.



செய்திகள்.www.dinakaran.com

No comments: