நேர்மையான பத்திரிகையாளர்களை அடக்குவதற்கு ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வழி முறையை ஆட்சியாளர்கள் கையில் எடுக்கிறார்கள். இலங்கை,பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான்,ஈராக்,லிபியா,பிரேசில் போன்ற நாடுகளிலும் அடிக்கடி பத்திரிகையாளர்கள் காணாமல் போவதும், கொல்லப்படுவதும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.இது போன்ற சம்பவங்களுக்குத் தீர்வு காணப்படாத நிலையில் ,அமெரிக்காவின் காலடியில் இருக்கும் மிகப் பெரிய நாடான மெக்ஸிகோவில்,இரண்டு பெண் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருப்பது உலகெங்கும் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெக்ஸிகோ நாட்டின் தலை நகரான மெக்ஸிகோ சிட்டி இடுகாட்டுக்குப் பின்புறம் ஒரு பூங்காவில் அனா மர்ஸலா ஏர்ஸ், ரோக்கியோ கன்ஸ்லேஸ் என்ற இரண்டு பெண் பத்திரிகையாளர்கள் கழுத்து நெரிக்கப்பட்டு ,இறந்த நிலையில் கண்டு எடுக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் உடலில் துப்பாக்கியால் சுடப்பட்ட அடையாளங்களும் இருக்கின்றன.
இரண்டு பேருக்குமே 48 வயது. போதைப் பொருள் வியாபாரிகள் மற்றும் ஆட்சியாளர்களை கடுமையான விமர்சனம் செய்யும்,கான்ட்ரலினியா என்ற வார இதழில் நிருபர்களாகப் பணியாற்றியவர்கள்.
கொல்லப்பட்ட இரண்டு பெண்களில் ஒருவர் எங்கள் பத்திரிகையில் விளம்பர பிரிவில்தால் வேலை செய்தார். அரசை விமர்சனம் செய்யும் பத்திரிகை என்பதால் அரசு விளம்பரங்கள் எங்களுக்குக் கிடைப்பதில்லை. இருந்த போதும் எங்கள் பத்திரிகை தொடர்ந்து வெளி வருகிறது என்றால்...அதற்கு அவரது திறமை மூலம் கிடைக்கும் விளம்பர வருமானம்தான் முக்கிய காரணம். விளம்பர வருமானம் நின்று விட்டால் பத்திரிகையை முடக்கி விடலாம் என்ற எண்ணத்தில் இந்த கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.
அரசாங்கத்தை மட்டுமின்றி,அதிகாரமும் செல்வமும் நிறைந்த ஊழல்வாதிகளைப் பற்றியும் நாங்கள் விமர்சிப்பதால் எங்கள் பத்திரிகை சந்திக்கும் வழக்குகளுக்கு அளவே கிடையாது.அதனால் இந்தக் கொலைக்கு யார் காரணம் என்பதை எங்களால் யூகிக்க முடியவில்லை... என்று அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் வருத்தத்துடன் சொல்கிறார்.
ஊர் எதுவானாலும், நாடு எதுவானாலும் அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்கள் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள்.
நன்றி
ஜூனியர் விகடன்
14.9.2011
No comments:
Post a Comment