August 23, 2011

வரலாற்று நாவலாசிரியர் சாண்டில்யன் அவர்களைப்பற்றி ஒரு சிறு குறிப்பு

வரலாற்று நாவலாசிரியர்கள் என்றால் உடனே ஞாபகத்திற்கு வருபவர்கள் இருவர்.ஒருவர் கல்கி ர.கிருஷ்ணமூர்த்தி மற்றொருவர் சாண்டில்யன்.


நாம் இப்போது பார்க்க போவது சாண்டில்யன் அவர்களைப் பற்றி.

நான் படித்த முதல் வரலாற்று நாவல் சாண்டில்யன் அவர்கள் படைத்த யவனராணி. இந்த நாவலை நான்கு பாகங்களாக வெளியிட்டிருந்தார்கள்.ஒவ்வொரு பாகமும் கிட்டத்தட்ட நாநூறு பக்கங்களுக்கு மேல் கொண்டவை.

ஒவ்வொரு பாகத்திலும் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது அவ்வளவு நளினத்தோடு எழுதியிருப்பார்.வரலாற்றுச் சான்றுகள் பாதி கற்பனை பாதி என்றிருந்தாலும்,அந்த கதாப் பாத்திரங்களோடு நாமும் இணைந்துவிடுவோம் இது சாண்டியல்யன் அவர்களின் தனிச் சிறப்பு.

அதுபோல கடல்புறா,ஜலதீபம்,மூங்கில் கோட்டை,மாதவியின் மனம் இன்னும் நிறைய நாவல்களை இப்படிச் சொல்லிக் கொண்டேச் செல்லலாம். அனைத்து நாவல்களும் நம்மைக் கவரக்கூடியதே.

சாண்டில்யன் அவர்களுடைய நாவல்கள் பெரும்பாலும் நல்ல தமிழ் மசாலா திரைப்படம் போலதான்.

காதல்,நகைச்சுவை,பாசம்,நட்பு,சண்டை இப்படி எல்லாம் கலந்து ஒரு அறுசுவை உணவாக படைக்கப்பட்டவை.அந்த உணவை உட்கொண்டு நானும் இன்புற்றேன் என்பதில் ஐயமில்லை.


அவருடைய இளமைக்காலம்,பணிபுரிந்த இடங்கள்,படைத்தப் புதினங்கள் ஆகியவை தமிழ் விக்கிபீடியா உதவியுடன் தொகுக்கப்படுகிறது.





பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவிலூரில் நவம்பர் 10, 1910ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்- ராமனுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோவில்வல்லி. சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மற்றும் நேஷனல் மாடல் பள்ளிகளில்பயின்றார். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம்பெற்றார். கல்லூரியில் இருந்தபோது ராஜாஜி சி. ராஜகோபாலாச்சாரியின் தாக்கத்தால் இந்திய விடுதலை இயக்கம் இந்திய சுதந்திர போரட்டத்தில் இணைந்து இந்திய தேசிய காங்கிரசு இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினரானார்.
1929இல் ரங்கநாயகியை என்பவரை மணந்தார்.
கல்லூரி படிப்பை முடித்தபின் 1930களில் சென்னை தி.நகரில் குடியேறினார்.அருகாமையில் வசித்த பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு. வி. கலியாணசுந்தரனார்(திரு. வி. க)நடத்திய வார இதழ் ''நவசக்தியில்'' பணியாற்றிய வி. சுவாமிநாதனும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள்.

அவர்கள் அளித்த ஊக்கத்தால் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் சிறுகதை ''சாந்தசீலன்'' ஆகும்.

அவரது சிறுகதைகளின் சிறப்பைக் கண்ட கல்கி, ''கண்ணம்மாவின் காதலி'', ''அதிர்ஷ்டம்'' என்ற இரு சிறுகதைகளை ஆனந்த விகடனில் வெளியிட்டார். இந்த வெற்றி அவரை திருக்கண்ணபுரம் சீனிவாசாரியார் என்ற தமிழ்ப் பண்டிதரிடம் முறையாக தமிழ்மொழியைப் பயிலத் தூண்டியது.

சுதேசமித்திரன் வார இதழில் சிறுகதைகள் எழுதினார். 1935-45வரை சுதேசமித்திரனில் நிருபராகப் பணியாற்றினார். ஆங்கில நாளிதழ் ஹிந்துஸ்தான் டைம்சில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார்.


ஹிந்துஸ்தான் டைம்ஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது விஜயா ஸ்டுடியோவின் பி.என்.ரெட்டி, நடிகர் சித்தூர்.வி. நாகையா இருவருடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பே இவர் திரைப்படத்துறையில் அடியெடுத்து வைக்க வழிவகுத்தது. ''சுவர்க்க சீமா'' (1945), என் வீடு (1953) ஆகிய இரு திரைப்படங்களுக்கு திரைக்கதைகளை எழுத உதவினார். பிற்காலத்தில் தனது திரைப்படத்துறை அனுபவங்களை ''சினிமா வளர்ந்த கதை'' (1985) என்ற புத்தகமாக வெளியிட்டார். ''பெர்த் ஆஃப் நியூஸ்பேப்பர்'' என்ற ஆவணப்படமும் தயாரித்து வெளியிட்டார்.


ஹிந்துஸ்தான் டைம்சில் வேலை பார்த்த பின்பு சுதேசமித்திரனில் மீண்டும் பணியில் சேர்ந்தார். முழுநீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். ''பலாத்காரம்'' என்னும் அரசியல் புதினத்தை எழுதித் தானே வெளியிட்டார். அமுதசுரபி போன்ற பிற பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுதினார். . ''பாலைவனத்துப் புஷ்பம்'', ''சாந்நதீபம்'' இரண்டும் அவரது முதல் வரலாற்றுப் புதினங்கள்.பின் குமுதம் வார இதழில் இவரது கதைகள் தொடர்களாக வர ஆரம்பித்தன.

இதனால் குமுதத்தின் விற்பனை கூடியது. குமுதத்தில் தனது கதைகளுக்காக மாத வருமானம் வாங்கிய மிகச்சிலருள் இவரும் ஒருவர். குமுதத்தை விட்டு வெளியே வந்தபின் சொந்தமாக ''கமலம்'' என்ற வார இதழ் ஆரம்பித்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. அவரது புதினங்களை வானதி பதிப்பகம் புத்தகங்களாக வெளியிட்டது. அவை விற்பனையில் சிகரத்தை எட்டின. முதல் வெளியீடு வந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அவரது புதினங்கள் இன்னமும் அச்சில் உள்ளன. (கமில் சுவெலபில், )சாண்டில்யனை மிகப் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் நான்காவதாக குறிப்பிடுகிறார். சாண்டில்யன் செப்டம்பர் 11, 1987ல் இவ்வுலகத்தை விட்டு பிரிந்தார்.

அவர் நம்மை விட்டு பிரிந்தாலும் அவருடைய படைப்புகள் பல நூற்றாண்டுகள் அவருடைய நினைவலைகளை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கும்.


(சாண்டில்யன் அவர்களி படைப்புகள் அடுத்த இடுகையில் )

No comments: