August 22, 2011

நீதித்துறையின் மரண தண்டனை?

இப்போது பரபரப்பாக அனைவராலும் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் விசயம் தூக்குதண்டனை பற்றியதுதான்.முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் இருந்த பேரறிவாளன்,சாந்தன்,முருகன் ஆகிய மூவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதுதான் இதற்கு காரணம்.

இது ஏறக்குறைய உறுதிசெய்யப்பட்டது போல்தான்.இறுதி வாய்ப்பான ஜானாதிபதியிடம் கொடுக்கப்படும் கருணைமனு நிராகரிக்கப் பட்டதன் விளைவு இது.


இந்தியாவிலும் இன்னும் சில நாடுகளில் மட்டுமே மரணதண்டனை செயல்முறையில் உள்ளது. 125 நாடுகளுக்கு மேல் மரணதண்டனை சட்டத்தை ஒளித்துவிட்டார்கள்.அது போல இந்தியாவிலும் மரணதண்டனை சட்டத்தை நீக்க வேண்டுமேன பல மனித உரிமை ஆர்வலர்கள் போராடிவருகிறார்கள்.

அவர்களில் முக்கியமானவர் ஆந்திரமாநிலத்தின் வரவர ராவ். அவர் ஜுனியர் விகடனில் தூக்குத்தண்டனைக் குறித்து தனது பார்வைகளை முன் வைத்திருந்தார்.அதில் சில பகுதிகள் இங்கே,,,



ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட வழக்கில் மூன்று தமிழர்களுக்கு இப்போது அறிவிக்கப்பட்டு இருக்கிற மரணதண்டனை,இன அடிப்படையில் ஆனதென்றால் ,மத்தியில் அஃப்சல் குருவுக்கு வழங்கப்பட்டிருக்கிற மரணதண்டனை மத அடிப்படையிலானது.

இன்றைக்கு இருக்கும் சட்டங்கள் எல்லாம் செல்வந்தர்களுக்கு சாதகமானதாகவே இருக்கின்றன.

பணம் படைத்தவனுக்குத்தான் நீதி.கை ஏந்துபவனோ நிர்க்கதியில்தான்.சமூகத்தின் கீழ்தட்டில் இருப்பவனைக் காக்க வேண்டிம சட்டமே, அவனை அழித்து ஒழிக்கும் முயற்சியில் இறங்குகிறது.

இன்றைக்கு மரணதண்டனைக் கைதிகளைப் பாருங்கள், அவர்கள் நசுக்கப்பட்ட இனத்தைச் சார்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.மாறாக ஒரு பணக்காரரை உங்களால் சுட்டிக் காட்ட முடியுமா? அல்லது இதுவரை எந்த பணக்காரனாவது தூக்கு மேடையில் ஏறி இருப்பானா?


நமது சட்டங்கள் பொதுவாக பண்ணையார் தத்துவத்தையே நியாயப்படுத்துகின்றன.ஒரு சிவில் வழக்கில் தனிநபர் ஒருவர் மற்றொரு தனிநபருடன் வாதாடலாம். ஆனால் கிரிமினல் வழக்குகளிலோ தனிநபர் ஒருவருக்கு எதிராக,அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடுவார்.அதாவது ஒவ்வொரு குற்ற வழக்கும் காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்டு அரசு தனக்கு எதிரானவரை எதிர்க்க வழக்கறிஞர் ஒருவரை நியமிக்கிறது.

வழக்கின் ஒவ்வொரு நகர்வையும் காவல் துறையினர்தான் தீர்மானிக்கிறார்கள். வாக்குமூலங்கள் பெறுவதிலேயே எவ்வளவு வன்முறைகளைப் பிரயோகிக்கிறார்கள் என்பது நாம் அறிந்ததுதானே?


அரிதிலும் அரிதான குற்றங்களில்தான் மரணதண்டனை வழங்கப்படுகிறது என்கிறார்கள். காவல் துறையினரால் என்கவுன்ட்டர் என்ற பெயரில் பலர் சாகடிக்கப்படுகிறார்களே... அதுவும்கூட அரிதிலும் அரிதானதுதானா? ஆக சட்டத்துக்கு புறம்பாக காவல்துறையினர் கொலை செயதால் அது என்கவுன்ட்டர்கள்.அதையே நியாயப்படி செய்ய வேண்டும் என்றால் அதற்குப் பெயர் மரணதண்டனை.இதுதானா உங்கள் நீதி?


பண்டைய கிரேக்க எகிப்திய நாடுகளில் இருந்த அடிமைகள் அந்த நாட்டின் குடிமகன்களாக அங்கீகரிக்கப்படவில்லை. அவர்களின் உரிமையாளர்கள் மட்டுமே குடிமகன்களாக அங்கீகரிக்கப்பட்டார்கள்.உரிமையாளர்களுக்கு மட்டும்தான் சட்டம்,நியாயம்,தீர்ப்பு ,நீதி எல்லாம். அடிமைகளுக்கு எப்போதும் மரணம் ஒன்றுதான்,தண்டனையாகவும்,தீர்ப்பாகவும்,நியாயமாகவும்,நீதியாகவும் அவர்களுக்கு இருந்து வந்திருக்கிறது.


இன்றைக்கு நிராகரிக்கப்பட்டு இருக்கிற கருணை மனுக்களைக் குறித்து நாம் எண்ணிப் பார்க்கையில் ஒரு வகையில் நாம் எல்லோரும் இந்நாட்டின் அடிமைகள்தானோ?

சாமான்யன் செய்த குற்றத்துக்கு மரணதண்டனை வழங்குவதன் மூலம் சட்டம் இன்னொரு குற்றம் செய்வது , எப்போதும் சமமாகாது, நீதியும் ஆகாது!" என்று வேதனையோடும் கோபத்தோடும் வெடித்தார் வரவர ராவ்.

அரசாங்கம் கொலை செய்யக்கூடாதென்று சொல்கிறது. எப்படி தெரியுமா? கொலை செய்வதன் மூலமாக, என்று தன் ஏழை படும்பாடு நாவலில் எழுதியிருக்கிறார் விக்டர் ஹியூகோ.



இப்படி பல சமூக ஆர்வலர்கள் மரணதண்டனையை எதிர்த்துக் குரல் கொடுத்தாலும் அரசாங்கம் இன்னு இடித்தப்புளி மாதிரி இருப்பது ஏனோ?...









நன்றி,
ஜுனியர்விகடன்
24.8.2011

No comments: