November 25, 2011

ஸ்டீபன் ஹாஃக்கின்ஸ் என்றொரு தன்னம்பிக்கை.

தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக ஸ்டீபன் ஹாஃக்கின்ஸை தாராளமாக கூறலாம்.மொத்த உடலுமே இயங்காத நிலையில் அண்டத்தை பற்றி பல புத்தகங்கள் காலத்தைப் பற்றிய ஆராய்ச்சி என மனிதர் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறார்.எனக்கு ஹாஃக்கின்ஸ் அறிமுகமானது டிஸ்கவரி தொலைக்காட்சி மூலமாகத்தான்.இந்த சாதனை மனிதரைப் பற்றி சில குறிப்புகள் http://ewow.lk இணையத்தின் உதவியுடன் கீழே.


2005-ம் ஆண்டு வீல் நாற்காலியில் அமர்ந்தபடி தொலைக்காட்சி நிலையத்துக்கு செவிலியர்கள் துணையுடன் வந்தார் 63 வயதான ஸ்டீபன் ஹாஃக்கின்ஸ்.கை,கால்,வயிறு,தலை என உடலின் எந்தப் பாகமுமே செயல்படாத நிலை.அவரது வீல் நாற்காலியில், வலது கண் அசைவின் மூலமாக இயங்கும் கணினியும், வாய்ஸ் ஸென்சரும் இருந்தது. பிரிட்டிஸ் டே டைம் டாக் ஷோ நிகழ்ச்சி நடத்திய ரிச்சர்ட் மற்றும் ஜூடி கேட்ட கேள்விகளுக்கு கணணி மூலம் எளிதாகப் பதில் சொன்னார் ஸ்டீபன்.
‘‘பெருவெடிப்பு எனப்படும் ‘பிக் பாங்’ ஏற்படும் முன்னர்,அண்ட வெளியில் என்ன இருந்தது?’’ என்று கேட்டார் ரிச்சர்ட். ‘‘வட துருவத்தின் வடக்கில் என்ன இருக்குமோ அது!’’என்று சாதுர்யமாகப் பதில் சொல்லி அனைவரையும் அசத்தினார் ஸ்டீபன். கை தட்டிப் பாராட்டியவர்கள், ‘‘வாழ்க்கை எப்படி இருக்கிறது?’’ எனக் கேட்டார்கள். ‘‘முன்னை விட சுவாரஸ்யமாகவும், சவால் நிறைந்ததாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது’’ என்றார். ‘‘இந்த உடல் நிலையுடன் உண்மையில் சந்தோஷமாக இருக்க முடியுமா?’’ என்று தயங்கித் தயங்கிக் கேட்டார்கள். ‘‘எதை இழந்தீர்கள் என்பதல்ல; என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!’’ என்றார் ஸ்டீபன்.


பிரிட்டனில் 1942-ம் வருடம் பிறந்த ஸ்டீபன், படிப்பில் படு சுட்டியாக இருந்தார். ஆக்ஸ்ஃபோர் யூனிவர்சிட்டியில் மூன்றாவது வருடம் படித்துக் கொண்டு இருந்தபோது, தன் உடல் தளர்ந்திருப்பதை உணர்ந்தார். காரணமின்றி அடிக்கடி கீழே விழுந்தார்.21-வது வயதில் உடலெங்கும் தசை மாதிரிகளை வெட்டி எடுத்துப் பரிசோதித்தும், மருத்துவர்களால் தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை. ஆனால், இரண்டு அல்லது மூன்று வருடத்துக்கு மேல் உயிர் வாழ முடியாது என்பதை மட்டும் தீர்மானமாகச் சொன்னார்கள்.
துயரத்திலிருந்த ஸ்டீபனுக்கு எதிர் வார்டில் ஒரு சிறுவன் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டான். சில நாட்களிலேயே எதிர்பாராமல் நிகழ்ந்த அந்தச் சிறுவனின் மரணம், ஸ்டீபனுக்கு பயம் தருவதற்குப் பதிலாகத் தைரியம் கொடுத்தது. அந்தச் சிறுவனைவிட தான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்பதை உணர்ந்தார். உடல் தன் கட்டுப்பாட்டில் இல்லா விட்டாலும் மூளையும் சிந்தனையும் முழு உற்சாகத்துடன் இருப்பதை உணர்ந்தார். வீல் நாற்காலியில் இருந்தபடியே பல்கலைக் கழக ஆய்வினை முடித்து,பேராசிரியர் ஆனார். திருமணம் முடிந்து, மூன்று குழந்தைகளும் பிறந்தன.
ஏ.எல்.எஸ். எனக் கண்டறியப்பட்ட நரம்பு நோய் முற்றியதால், 1985-ம் வருடம் அவரது உடல் முழுமையாகச் செயலிழந்தது. ஆனாலும், நம்பிக்கை இழக்காமல் வலக்கண்ணை மட்டுமே அசைத்து எழுத்துக்களை அடையாளம் காட்டிப் பாடம் நடத்தியதுடன், வரலாற்றுத் திருப்பு முனையான புத்தகம் ஒன்றும் எழுதினார். ‘எப்ரீஃப் ஹிஸ்ட்ரி ஆஃப் டைம்’ என்கிற அந்தப் புத்தகம் ஸ்டீபனின் புகழை உச்சிக்கு உயர்த்தியது. கலிஃபோர்னியாவைச் சேர்ந்த கணினி நிபுணர் ஒருவர் ஸ்டீபனின் கண்ணசைவுக்கு இயங்கும் கணணி மென்பொருள் கண்டு-பிடித்து, வீல்சேரில் பொருத்தித் தர,சிரமம் குறைந்து அதிகமாகச் சிந்தித்து நிறைய எழுதிக் குவித்தார் ஸ்டீபன்.
‘காலம் எப்போது தொடங்கியது? எப்போது முடியும்? காலத்தை பின்னோக்கிச் சென்று காண முடியுமா? விண்வெளிக்கு எல்லை உண்டா?’ என எல்லோர் மனதிலும் இருக்கும் கேள்விகளுக்கு அறிவியல் ரீதியாக பதில் சொல்லி மலைக்க வைத்த ஸ்டீபன் ஹாஃக்கின்ஸின் வாழ்வு, மருத்துவர்களுக்கு இன்றும் ஒரு புதிர்தான். உடல் நிலை மோசமான காலகட்டத்தில் மனைவியும், குழந்தைகளும் அவரை விட்டுப் பிரிந்தனர். ஸ்டீபன் அப்போதும் மனம் தளராமல், தன்னை அன்புடன் கவனித்துக் கொண்ட நர்சை இரண்டாவதாகத் திருமணம் முடித்தார்.
‘‘இந்த நோயால் பாதிக்கப்பட்டதால்தான் வெளி உலக கவனச் சிதறல்கள் இல்லாமல், முழுக் கவனமும் செலுத்தி என்னால் புத்தகங்கள் எழுத முடிகிறது. உண்மையில் நான் அதிர்ஷ்டம் செய்தவன்’’ என்று ஸ்டீபன் நம்பிக்கையுடன் பேசக் காரணம், ‘எதை இழந்தீர்கள் என்பதல்ல; எது மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!’ என்கிற மந்திரச் சொல்லின் மகத்துவம் தான்!

நன்றி.www.ewow.lk

No comments: