July 29, 2011

குமுதம் தலையங்கம்

தனக்கென்று சொந்தமாக சிறு துண்டு நிலமாவது வேண்டும் என்று கனவு காணாதவர்கள் யார் இருக்கிறார்கள்? நிலம் என்னும் நல்லாள் என்கிற பைந்தமிழ் வரிகள் சொல்கிறபடி நிலம் என்பது வெறும் மண் மட்டுமல்ல. அதில் எத்தனையோ மனிதர்களின் நம்பிக்கைகள் ஈரத்தோடு ஒட்டிக்கொண்டிருக்கின்றன.அப்படிப்பட்ட நிலத்தையும் வீட்டையும் அதிகார பலத்துடன் பயமுறுத்தி பெரும் கும்பல் அராஜகமாகப் பறித்திருப்பதுப் பற்றி என்ன சொல்ல? தமிழகத்தில் ஆட்சி மாறியதும் வந்த புகார்களைப் பரிசீலித்து நில ஆக்கிரமிப்புத் தடுப்புக்காக சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டு சில வாரங்களிலேயே இரண்டாயிரத்து நானூறுக்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்திருப்பது மலைக்க வைக்கிறது. நிலத்தைப் பறிகொடுத்தவர்களில் பெரும்பாலானோர்கள் முதியவர்கள், கூடவே பெண்களும்,விதவைகளும் அதிகமாக ஏமாற்றப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்ற விசயங்கள் பீதியை ஏற்படுத்துகின்றன. முன்னாள் இந்நாள் அமைச்சர்கள் என்கிறப் பாரபட்சமற்றுப் புகார்கள் கொடுக்கப் பட்டிருக்கின்றன. இதில் சிலர் மிரட்டப்பட்டு புகார்களைத் திரும்பப் பெறும் நிலை உருவாகிவிட்டால் ஆயிரக்கணக்கானோரின் நம்பிக்கை பலனில்லாமல் போய்விடும். கட்சி பேதமற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி அப்பாவியான பலரிடமிருந்து முறைகேடாகப் பறிக்கப்பட்ட நிலங்களையும் சொத்துக்களையும் திரும்ப அவர்களுக்குக் கிடைக்க வழி செய்ய வேண்டும். அதற்கான நம்பிக்கையை முதலில் உருவாக்க வேண்டும். எந்த ஆட்சியாக இருந்தாலும் இம்மாதிரியான சமூக விரோதமாகச் செயல்படும் கும்பல்கள் முளைத்துக் கொண்டுதான் இருக்கும். ஆனால் அந்தக் களைகள் வளர இந்த ஆடசி உரம் அளித்துவிடக் கூடாது என்பதுதான் தமிழகத்தில் இருக்கும் சராசரி தமிழனின் கவலை. நன்றி குமுதம் வார இதள்.

No comments: