March 21, 2012

ஊடகத்தில் என்றும் நிலைத்திருக்கப் போகும் ‘டிஜிட்டல் ரஜினி’ – த சன்டே இந்தியன் சிறப்புக் கட்டுரை!

உடல்நலக்குறைவில் இருந்து மீண்டு வந்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தொழில்நுட்ப உதவியுடன் புதிய படமான கோச்சடையானில் தோன்றுகிறார். ரத்தமும் சதையுமான ரஜினியைப் பார்த்து ரசித்த தமிழ் ரசிகர்கள், அவரது டிஜிட்டல் பிம்பத்தை ஏற்றுக்கொள்வார்களா?




சுல்தான் தி வாரியர், ராணா, கோச்சடையான் என்று ரஜினிகாந்த்தின் சமீபத்திய படம் பற்றிய மீடியா செய்திகளும் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. கடைசியில் கோச்சடையான் வேலைகள் தொடங்கியுள்ளன. ஆனால் ராணா என்கிற தலைப்பின் வசீகரத்தில் மயங்கிய அவர், அதே பெயரில் ஒரு கதையில் நடிக்கும் ஆசையில் இருக்கிறார். இயக்குநர் கே.வி. ஆனந்திடம் அந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது கடைசித் தகவல்.
ஆனால் எந்திரனுக்குப் பின்னால் இனியும் ரஜினி ரத்தமும் சதையுமாக நடிக்க இருக்கும் படமாக வேறெந்த படமும் இருக்குமா? எந்திரன்தான் ஒரு சினிமா முழுக்க தானே நேரில் வந்து ரஜினி நடித்த கடைசிப் படமாக இருக்கலாம். அவரது திரைவாழ்வில் மிக உச்சகட்டப் படமாக அதிக பொருட்செலவில், அதிக விளம்பரத் துடன் வெளியாகி கோடிகளைக் குவித்த படம் அது. இனி அப்படி யெல்லாம் வந்து அவர் கஷ்டப்பட்டு நடிப்பதற்கு அவசியம் இல்லை என்பதைக் காட்டுவதே கோச்சடையான்.
எந்திரனுக்குப் பின்னால் ரஜினிகாந்த் நடிக்கப்போவதாக அறிவிக்கப்பட்ட ராணா படபூஜை ஏவிஎம் ஸ்டுடியோவில் பழைய பிள்ளையார் கோயிலில் நடந்தது. அப்போது ஒரே ஒரு ஷாட் மட்டுமே எடுக்கப்பட்டது. அன்று மாலையே அவருக்கு உடல்நலம் மோசமாகி இசபெல்லா மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். பிறகு ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று, உயர்தர சிகிச்சைக்காக மே 27 ஆம் தேதியன்று சிங்கப்பூர் சென்றார்.
அமிதாப்பச்சன் பரிந்துரையின்பேரில் அங்கு சென்றவர் ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு உடல்நலம் தேறி ஜூலை 13 ஆம் தேதியன்று சென்னைக்கு வந்தார். மீண்டும் அதே சுறுசுறுப்புடன் ரஜினி உலவ ஆரம்பித்தார். இதெல்லாம் பழைய கதை. இதற்கு அடுத்ததாக ரஜினி என்ன செய்யப்போகிறார்? படங்களில் நடிக்க அவரது உடல்நிலை ஒத்துழைக்குமா என்று பலராலும் ஊகங்கள், கற்பனைகள் எழுப்பப் பட்டன.





கோச்சடையான் படத்தின் கதையைப் போலவே, ரஜினிகாந்த உடல்நலம் பற்றியும் பல கற்பனைக் கதைகள் வெளிவந்துகொண்டிருந்தன. அவர் மெதுவாகப் பேசுகிறார்; முன்பைப்போல அவரால் வேகமாக நடக்கமுடியவில்லை என்று சொல்லப்பட்டது. அதெல்லாம் பொய்யானவை என்பதை அவரே விழாக்களில் கலந்துகொண்டு பொய்யாக்கினார்.

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு நடந்த பாராட்டுவிழாவில் கலந்துகொண்டு எப்போதும்போல கலகலப்பாகப் பேசினார். அவரது பேச்சிலும் நடையிலும் எந்த சுணக்கத்தையும் பார்க்க முடியவில்லை. அதேபோல சமீபத்தில் ‘போர்பிரேம்ஸ்’ கல்யாணத்தின் மகன் திருமண விழாவில் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் உட்கார்ந்து வாழ்த்திச் சென்றிருக்கிறார். திருமதி. லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஸ்ரம் பள்ளியில் அவரது பெயரில் இயக்குநர் பாலசந்தருக்கு விருது வழங்கப்பட்டது. அங்கு இருபது நிமிடங்களுக்கு மேல் பேசிய ரஜினி, “என்னை திரையுலகில் அறிமுகப் படுத்திய குருநாதர் பாலசந்தர். அவருக்கு என் பெயரில் விருது வழங்குவது சரியல்ல. அடுத்த ஆண்டு முதல் அவருடைய பெயரில் மற்றவர் களுக்கு வழங்குங்கள்” என்று குறிப் பிட்டுள்ளார்.
எல்லா கற்பனைகளுக்கும் பதில் சொல்வதுபோல கோச்சடையான் என்ற புதிய படத்தில் ரஜினி நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டு பிரத்யேகப் புகைப்படங்களும் வெளியாயின. ஒரு மன்னனின் கெட்டப்புடன் வில்லுடன் ரஜினி நிற்பதுபோலவும் ஒற்றைக் காலில் கம்பீரமாக தவ நிலையில் இருப்பதுபோலவுமான காட்சிகள் வெளியிடப்பட்டன. இது அவதார் படத்தைப் போல 3 டி அனிமேஷன் தொழில்நுட்பத்தை முழுவதும் பயன்படுத்தி வெளிவரும் என்பது பட வட்டாரம் சொல்லும் தகவல். கோச்சடையான் என்ற பெயருக்குப் பின்னணியில் பல கதைகள் சொல்லப்படுகின்றன. நீண்ட சடைமுடியைக் கொண்ட சிவபெருமான் என்றும் பாண்டி நாட்டில் கோச்சடை பகுதியை ஆட்சிபுரிந்த குறுநிலமன்னன் ரணதீரன் என்றும் செய்திகள் உலவுகின்றன.
படப்பிடிப்புக்காக சில நாட்களில் இலண்டன் செல்லவிருப்பதாக தெரிவித்தார் த சன்டே இந்தியனிடம் பேசிய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்.
மேலும் பேசிய அவர், “சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உற்சாகத்துடன் கதை விவாதங்களில் கலந்துகொண்டார். படப்பிடிப்புக்குச் செல்வதற்கும் தயாராகிவிட்டார். கோச்சடையான் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறேன். இப்படம் தொடர்பான தொழில் நுட்பங்களை சௌந்தர்யா கவனித்துக் கொள்கிறார். அவர் இதற்காக சர்வதேச அளவில் அதிநவீன அனிமேஷன் தொழில்நுட்பம் பற்றி ஆய்வு செய்திருக்கிறார். அவதார் படத்தில் பணியாற்றிய வல்லுநர்கள் எங்கள் படத்தில் இருக்கிறார்கள். முதற்கட்டமாக இலண்டனில் படப் பிடிப்பை நடத்திவிட்டு சென்னைக்கு வந்து அடுத்த கட்டத்தை நடத்த இருக்கிறோம். இதுவொரு வரலாற்றுப் படம். எல்லாவற்றிலும் இப்படம் தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய தளத்தை அறிமுகப்படுத்தும்” என்று சுருக்கமாகக் குறிப்பிடுகிறார். இன்னொரு தகவலும் உண்டு.
‘‘ராணா என்று எடுப்பதாக இருந்த படத்தின் கதைக்கு முன்கதைதான் கோச்சடையான். ராணா கதாநாயகன் பெயரே கோச்சடையான் ரணதீரன் என்பதுதான். அதுதான் ராணாவாக அழைக்கப்பட்டது. லண்டன், ஹாங்காங், ஹாலிவுட் ஆகிய இடங்களைச் சேர்ந்த மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பம் நிபுணர்கள் பீட்டர் ஜாக்சன் என்பவர் தலைமையில் ஹாங்காங்கில் தங்கி படத்திற்கான பணிகளில் ஈடுபடுபடப்போகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு முதற்கட்டப் பணிகளுக்காக ஹாங்காங் சென்று வந்திருக்கிறார் சௌந்தர்யா. சண்டைக்காட்சிகளை வடிவமைப்பு செய்கிறவர்கள் பிரிட்டிஷ்காரர்கள். அவர்களை ஒருங்கிணைப்பவராக நம்மூர் சண்டைப் பயிற்சியாளர் பீட்டர்ஹெய்ன் செயல்படுகிறார்’’ என்று சொல்கிறார் விவரமறிந்த ஒருவர்.
கோச்சடையானைப் பொறுத்தவரை சர்ச்சைகளுக்கும் குறைவில்லை. படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளிவந்தது ரஜினிக்குத் தெரியாது என்று செய்திகள் வெளியாயின. “அதெல்லாம் பொய்யான தகவல். அப்பாவுக்கு அந்தக் கதை ரொம்பவும் பிடித்திருந்தது,” என்று டிவிட்டரில் பதில் சொன்னார் சௌந்தர்யா.
அதே டிவிட்டரில் திருமதி. லதா ரஜினிகாந்த்தும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு தன் கணவரை மேக்கப் சேரில் உட்கார்ந்து பார்ப்பது மிகவும் சந்தோஷம் தருவ தாகச் சொல்லி டிவிட் செய்திருக்கிறார்.
கோச்சடையான் படத்திற்காக அலுவலக அளவில் பூஜை நடத்திவிட்டார்கள். ‘‘ராணா படத்திற்கு நடத்தியதுபோலவே பிரம்மாண்ட விழாக்களை நடத்த ரஜினி விருப்பப்படவில்லை. அவரது நோக்கம் முழுவதும் படத்தை பிரம்மாண்டமாக எடுத்து மக்களிடம் காட்டவேண்டும் என்பதாகவே இருக்கிறது. கடந்த மாதத்தில் ஒரு நாள் ஏவிஎம் ஸ்டுடியோவின் ஆறாவது புளோரில் படத்திற்கான போட்டோ ஷூட் நடந்தது. கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்வையில், அவரது வரலாற்று கதாபாத்திரத்திற்கேற்ற விலையுயர்ந்த காஸ்ட்யூம்களில் ரஜினிகாந்தை படம்பிடித்திருக்கிறார் இப்படத்தின் இயக்குநரான சௌந்தர்யா. இப்படத்திற்கான கதையையும் அதுனுடன் கூடிய ஸ்டோரி போர்டையும் கணினியில் பார்த்த ரஜினிகாந்த், முழு படத்தையும் பார்த்த திருப்தி ஏற்பட்டதாகச் சொல்லியிருக்கிறார்’’ என்கிறார் நம்மிடம் பேசியவர்.
அதே மகிழ்ச்சியில்தான் ராணா படத்திற்கான கதையை கே.வி.ஆனந்திடம் எழுதச் சொன்ன சம்பவமும் நடந்துள்ளது. இதுபற்றி டிவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள ஆனந்த், ‘சுண்டெலி, சிங்கத்தை தூரத்திலிருந்து பார்க்கலாம். ரசிக்கலாம். கிட்டபோய் விளையாடற தகுதியெல்லாம் சுண்டெலிக்கு இல்லை’ என்றிருக்கிறார்.
ராணாவின் முதல் நாள் படப்பிடிப்பிலேயே படம் நின்று போனதால் தீபிகா படுகோனை மீண்டும் அழைக்க மாட்டார்கள் என்ற மூடநம்பிக்கை உடைந்திருக்கிறது. தீபிகாவை ரஜினி விடுவதாயில்லை. கோச்சடையானுக்கு தங்கையாக நடிக்கவிருந்த சிநேகா, அதே தேதிகளில் வேறொரு படப்பிடிப்பு இருப்பதால் அதிலிருந்து விலகிவிட்டார். இப்போது அந்த கதாபாத்திரத்தில் பொம்மலாட்டம் படத்தில் நடித்த, பாலேவும் பரதமும் தெரிந்த ருக்மணி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு சூப்பர்ஸ்டாரை சந்தித்துப் பேசிய சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், அவருடன் சேர்ந்து நடிக்கும் ஆசையை வெளிப்படுத்தினார். அது இப்போது நனவாகிவிட்டது. தனக்குக் கிடைத்த தெலுங்கு, கன்னடப் படவாய்ப்புகளைத் தள்ளிவிட்டு கோச்சடையானின் அரிதாரம் பூசக் காத்திருக்கிறார் சரத்குமார். வடிவேலுவை நடிக்க வைக்கலாம் என்று ரஜினியிடம் சொல்லப்பட, வீண் அரசியல் வதந்திகளும் செய்திகளும் மீடியாவில் வந்து படத்தின் கவனத்தைத் திசைதிருப்பும் என்பதால் மறுத்துவிட்டாராம்.
அதனால் சந்திரபாபு, நாகேஷ் இருவரில் ஒருவருடன் சேர்ந்து நடிப்பதுபோல புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் காட்சிகளை உருவாக்க யோசித்துள்ளனர். நாகேஷ் நடிப்பு மிகவும் பிடிக்கும் என்பதால் அவரை ஓகே செய்திருக்கிறாராம். அதற்கான பணிகளும் தொடங்கி விட்டனவாம். இந்தியாவின் முதல் ‘பர்மான்ஸ் கேப்சர் போட்டோ ரியலிஸ்டிக் பிலிம்’ என்று கோச்சடையான் என்று பட விளம்பரம் சொல்கிறது. இந்த பாணியை அவதார் படத்தில் ஜேம்ஸ் காமரூனும், அட்வென்சர்ஸ் ஆப் டின்டின் படத்தில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கும் பயன்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
எப்போதும் ரஜினிகாந்த் படங்களில் ஏஆர் ரகுமானுடன் இணைந்து சூப்பர்ஹிட் பாடல்களைத் தந்துள்ளவர் கவிஞர் வைரமுத்து. இந்த முறை முந்தைய சூப்பர்ஸ்டார் படப் பாடல்களின் சாயல் ஏதுமில்லாத, அவற்றை ஞாபகமூட்டாத புதுமையான பாடல் வரிகளை எழுதப்போகிறாராம்.
திடீர் உடல்நலக்குறைவால் ராணா படம் நின்றுபோனதால், தற்போது உருவாகிவரும் கோச்சடையான் படத்தைப் பற்றிய தகவல்கள் அதிகமாக மீடியாவில் வெளிவராமல் சௌந்தர்யா பார்த்துக்கொள்கிறாராம். ஏனெனனில் மிகையான தகவல்களும் செய்திகளும் பழைய படத்தைப் போன்ற ஒரு தோற்றத்தைத் தந்துவிடும் என்ற அச்சம்தான் காரணம்.
முன்பைப்போல அதிக டேக்குகள் எடுத்து நடிப்பதற்கு ரஜினியின் உடல்நலம் ஒப்புக்கொள்ளாது என்பதால், அவருடன் நடிக்க இருக்கும் மற்ற நடிகர்களுக்கு படப்பிடிப்புக்கு ஒரு வாரத்திற்கு முன்பு ரிகர்சல் செய்யச் சொல்லியுள்ளார்களாம்.
ரஜினிகாந்த் பற்றிய பிரத்யேக இணையதளங்களான ரஜினிலைவ்.காம் மற்றும் என்வழி.காம் ஆசிரியர் எஸ் சங்கர் ‘தசஇ’யிடம் பேசும்போது, இது ஒரு முழுமையான டெக்னிக்கல் படம் என்கிறார். “தொழில்நுட்பத்தின் உச்சம் என்று சொல்லலாம். இந்தியாவில் வெறெந்த படத்துக்கும் செய்யத் துணியாத பல விஷயங்களைச் செய்கிறார்கள். அவர்கள் திட்டமிட்டபடி எடுத்தால் பெருமைக்குரிய படமாக இருக்கும். ரஜினிகாந்த் உண்மையிலேயே ஆர்வம் காட்டிவருகிறார். அவருக்குப் பதிலாக டூப் போடுகிறார்கள் என்பது பொய்யான செய்தி. தன்னால் முடியவில்லை என்றால் அந்த புராஜெக்ட்டை செய்யவேவேண்டாம் என்பதுதான் கே.எஸ்.ரவிக்குமாரிடம் ரஜினி நேரடியாக சொன்ன வார்த்தை. ரசிகர்களை ஏமாற்றவேண்டும் என்ற எண்ணம் அவரிடம் எப்போதும் கிடையாது” என்று உறுதியாகச் சொல்கிறார்.
புவனா ஒரு கேள்விக்குறி தொடங்கி ரஜினியை ஹீரோவாக வைத்து 25 படங்களை இயக்கிய மூத்த இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், “எதுவாக இருந்தாலும் ரஜினி யோசித்துத்தான் முடிவெடுப்பார். நாம் சொல்வதை உள்வாங்கிக்கொண்டு பிறகுதான் கருத்துத் தெரிவிப்பார். அந்தக் காலத்திலிருந்தே ஒரு படத்தின் முதல் நாள் படப்பிடிப்பிலிருந்து அது ரிலீஸாகும் தேதி வரையில் அவருடைய உழைப்பும் ஈடுபாடும் குறையாது. சிவாஜி படப்பிடிப்பு சமயத்தில் ஏவிஎம் ஸ்டுடியோவில் அவருக்காக ஒரு கேரவான் நிறுத்தப்பட்டது. அதைப் பற்றி விசாரித்தவர், அதெல்லாம் எதுக்கு புதுப் பழக்கம். எப்போதும் நமக்குன்னு ஒரு மேக்கப் அறை இருக்கு. அதுபோதுமே என்று மறுத்துவிட்டார். இந்தக் குணம்தான் அவரை மக்கள் மனதில் ஒரு சூப்பர் ஸ்டாராக இடம்பெற வைத்திருக்கிறது. கோச்சடையானிலும் அது தொடரும்” என்கிறார் அவர்.
ரஜினியே நேரடியாக எல்லா வற்றையும் செய்யத் தேவையில்லாத, கிராபிக்ஸ் உத்தியில் வெளிவரும் இப்படத்தை அவரது ரசிகர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? என்று சங்கரிடம் கேட்டோம். “கோச்சடையான் படத்தின் அறிவிப்பு வந்தபோது ரசிகர்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. ஆனால் ஒரு பொம்மையைப்போல ரஜினி இப்படத்தில் வரப்போவதில்லை. அவருடைய உண்மையான பிம்பத்தை காட்டப்போகிறார்கள் என்று தகவலைக் கேள்விப்பட்டதும் மகிழ்ந்தோம். முத்து படத்தைப் போல இந்தப் படத்திலும் சூப்பர்ஸ்டார் படத்தின் எல்லா அம்சங்களையும் பார்க்கலாம் என்று கே.எஸ்.ரவிக்குமார் உறுதியளித்திருக்கிறார். இந்திய அளவில் வேறெந்த நடிகரும் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடிக்க முன்வராதபோது துணிச்சலாக நடிக்கிற ரஜினியின் ஆர்வம் பாராட்டுக்குரியது. இது 100 சதவிகித சூப்பர் ஸ்டார் படமாக இருக்கும். அந்த நம்பிக்கையுடன் நாங்கள் காத்திருக்கிறோம்” என்கிறார்.






‘‘ஆனால் ரஜினி அசலான ரஜினி அல்ல. அவரது உருவ அமைப்பைப் படம்பிடித்துக்கொண்டு கிராபிக்ஸ் மூலம் காட்சிகளை அமைக்கப் போகிறார்கள். அவர், தன் நடிப்புலகப் புகழின் உச்சியில் இருக்கிறார். மிக முக்கியமான இக்காலகட்டத்தில் ரஜினியால் முழு வேகத்தில் நடிக்க இயலவில்லை. ஆனால் அவரது உருவத்தைப் பயன்படுத்தி உருவாக்கும் அனிமேஷன்கள் இதை நிரப்பும். ரசிகர்களை திருப்திப்படுத்துவதோடு கூடவே அவரது வர்த்தகச் சந்தையைப் பயன்படுத்திக்கொள்வதும் நடந்து விடும். இது சரியான வர்த்தகத் திட்டம். ஆனால் ரத்தமும் சதையுமான ரஜினியை திரையில் கண்ட ரசிகர்கள் அவரது போலியான பிம்பம் தோன்றும் படத்தை எப்படி ரசிப்பார்கள்? என்பதில் இருக்கிறது இப்படத்தின் எதிர்காலம்’’ என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத ஒரு சினிமா விமர்சகர்.
குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என சகலர் மனதிலும் அதிரும் பிம்பம் ரஜினி. தமிழில் முதன்முறையாக ஒரு நடிகர் மேம்பட்ட கார்ட்டூன் நாயகனாக மாறும் நிகழ்வாக அவர் கோச்சடையானில் அடியெடுத்து வைக்கிறார். இந்த சாகச நாயகன் அனிமேஷன் உருவமாக மாறுவதன் மூலம் காட்சி ஊடகத்தில் என்றென்றும் நீடிக்கப் போகிற பாத்திரமாக உருவாகிவிட்டார். அவரை வைத்து எதிர்காலத்தில் கார்ட்டூன் சீரியல்கள் கூட உருவாக்கப் படலாம். ஜாக்கிசான் கார்ட்டூன்களை சுட்டி டிவியில் பார்க்கும் உங்கள் வீட்டுக் குழந்தையிடம் இது பற்றிக் கேட்டுப்பாருங்கள்!
-நன்றி: த சன்டே இந்தியன்,சுந்தரபுத்தன்,envazhi.com..........

No comments: