January 24, 2014

ஜில்லா,வீரம் ஒரு பார்வை சின்னதாக..

இந்த இரண்டு திரைப்படங்களையும் ரசித்து பார்ப்பதற்கோ சுவைப்பதற்கோ
அவசிமில்லை.காரணம் நாயகர்களின் கதைத் தேர்வு அப்படி.இயக்குநர்களின்
இயக்கமோ எப்படியோ அப்படி.இனி ஒப்பிடலாம்.

அஜித்.
.
மங்காத்தாவில் வெள்ளை முடியோடு வந்த அஜித்தை ஏற்கமுடிந்த எனக்கு
வீரத்தில் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.கதைக்கே ஒட்டாத பாத்திர
வடிவமைப்பு.இது தேவையில்லாத விளம்பரம்தான்.அடுத்த படத்திலாவது சினிமாவை
சினிமாவாக காட்டுங்கள்.யதார்த்தமில்லாத கதையை
திரைப்படுத்திவிட்டு,யதார்த்தமான தோற்றத்தை திரையில் கொண்டு வருவது ஏன்?
.
.
விஜய்.
நீங்கள் ஒரு கல்லூரி மாணவன் என்று சொன்னால் ஒப்புக்கொள்ளத்தான்
வேண்டும்.ஏன்னா இளமை கூடிக்கொண்டே போகிறது.அழகு ஏறிக்கொண்டேச்
செல்கிறது.ஆனா ஒரு காவலதிகாரியாக உங்களை! மிடியல வேண்டாம் விட்ருங்க.
.
.
காஜல் அகர்வால்,தமன்ன,
பெருசா ஒண்ணுமில்லை அவங்களை பற்றி சொல்வதற்கு..
.
.
இயக்குநர் சிவா,
சிறுத்தைனு ஒரு சிறப்பான படத்தை பார்க்காமலே அஜித் இந்தப்பட வாய்ப்பை
உங்களுக்கு தந்திருப்பார் என நினைக்கிறேன்.வில்லனுடைய கெத்தே உங்களால்
உடைபடுகிறது சிவா.அடுத்தப் படத்திலாவது கொஞ்சம் யதார்த்தத்தை
கலக்குங்க...கவனிக்க...அடுத்தப்படம் கெடைச்சா.
..
.
இயக்குநர் நேசன்.
உங்கள் திறமை பாராட்டப்படுகிறது.ஏன்னா இந்த படத்தில் மோகன்லாலை நடிக்க
சம்மதிக்க வைத்ததற்கு.எப்படி முடிந்தது உங்களால் ஒரு மொக்கை கதையால் நல்ல
கலைஞனை கவர்ந்திழுக்க.உங்கள் ஒருசில காட்சியமைப்புக ள் அருமையாக
கையாளப்பட்டிருந்தது.ஆனால் காட்சி முடிவில் அந்த கோர்வை
கைவிடப்பட்டுவிடுகிறது.நாயக துதிபாடி சினிமா எடுக்க நினைக்காதீர்கள்.
.
.
நகைச்சுவை.
நகைத்து சுவைப்பதற்கான காட்சிகள் இரண்டு படத்திலும் ஒன்றுமில்லை.ஏதோ
சிரிக்கலாம் .சந்தானத்தையும்,சூரியையும் கதையில் திணித்திருக்கிறார்கள்
என்றே சொல்ல வேண்டும்.மனதில் நிற்கா நகைச்சுவைகள்.
.
.
வசனங்கள்.
இரண்டு இயக்குநர்களும் டிவிட்டர்,பேஸ்புக் பக்கம் அதிகமாக வலம்
வருவார்கள் போல நிறைய ஸ்டேட்டஸ்களும்,டிவீட்டுகளும் நன்றாக இருந்தன.ஆனா
அதை பன்ச் பாணியில் பேசும்போதுதான் கொஞ்சம் கடுப்ப கெளப்புது.வசனம்
நன்று.
.
.
.
பாடல்கள்.
அஜித் திரைபடத்தில் பாடல்கள் ஹிட்டாகி ரொம்ப வருசம் ஆயிடிச்சி.அந்த
வரிசையில் வீரமும் ஒன்று.
விஜய் இதில் மாறுபடுகிறார் .விஜய்யின் படத்தில் குறைந்தபட்சமாக இரண்டு
பாடலாவது ஹிட்டாகிவிடும் இந்தப்படத்திலும் அது தொடர்கிறது.
.
.
கதை.
அப்பன் வெப்பன் இரண்டு படத்துலேயும் இதுதான் கதை.அதாவது ஜில்லாவுல
வெப்பன் வைச்சுருக்கிற அப்பனை திருத்த முயல்கிறார் விஜய்.வீரத்தில்
நாயகியின் அப்பனுக்கு வெப்பனால் வரும் ஆபத்திலிருந்து காப்பாற்ற
முயல்கிறார் அஜித்.
.
..
.
பொதுவாக பெரிய கதாநாயகர்களின் திரைப்படங்கள் அவர்களின் ரசிகர்களை
திருப்திபடுத்தவே எடுக்கப்படுகின்றன.அப்படிதான் எடுக்கவும்
செய்கிறார்கள்.அந்த வரிசையில் இரண்டு எண்ணிக்கை கூடியிருக்கிறது அவ்வளவே.
.
.
.
பின்குறிப்பு.
இது என்பார்வையில் மட்டும்..
நன்றி..

January 23, 2014

ஆடு இல்லை ஆடுவேன்..

ஒரு விவசாயின் கண்காணிப்பில் வளர்ந்த ஆடு ஒன்று வழிதவறி அருகில் இருந்த
காட்டுக்குள் நெடுந்தொலைவு சென்றுவிட்டது.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைபசேலன தாவரங்களும்,புல் பூண்டுகளும்
செழித்து கிடந்தன.ஆனால் ஆவலாய் உண்பதற்கான மனநிலையில் ஆடு இல்லை.பயத்தோடு
பதறியபடி ஓடி ஓடி ஓய்ந்து போனதுதான் பலன்.

ஏற்கனவே பதறிபோன நெஞ்சை பதறவைக்கும் விதமாக புதருக்குள் இருந்து பாய்ந்து
வந்தான் எமன் சிறுத்தை.திடீர் தாக்குதலை சற்றும் எதிர்பாராத ஆடு
நிலைகுலைந்துதான் போய்விட்டது.பாய்ந்தது கிழட்டு சிறுத்தை போல்
கழுத்துக்கு வைத்த குறி தவறி போய் அருகில் இருந்த மரத்தில்
முட்டிக்கொண்டது.இந்த சிலவினாடி புலியின் தடுமாற்றத்தை சாதகமாக்கி
சிட்டாக பறந்தது ஆடு.ஓடியது ஓடியது மணிக்கணிக்கில் ஓடி சோர்ந்து
விழுந்தது.உடலில் வலுவில்லாத நிலையில் மரணபயத்துடன் தன் சுயநினைவை இழந்து
கொண்டிருந்து ஆடு


சிறிது நேரம் கழித்து கண் விழித்த ஆட்டின் எதிரே ஒரு கரிய உருவம் நின்று
கொண்டிருந்தது.அது ஒரு காட்டாடு.கண்விழித்த ஆடு காட்டாடைப்பார்த்து அலறத்
துவங்கியது.காட்டாடே கொஞ்சம் அரண்டுதான் போனது .இருந்தாலும் பொறுமையாக
பயப்படாதே நண்பா நான் உன் இனம்தான்.உனக்கு உதவலாம் என்ற எண்ணத்தில் இங்கு
நின்று கொண்டிருக்கிறேன்.

வேண்டாம் நீ எனக்கு உதவ வேண்டாம் இங்கிருந்து நகர்ந்தாலே போதும்.

நீ இந்த காட்டிற்கு புதியவன் என நினைக்கிறேன்.இந்த சூழ்நிலையில் என் உதவி
கட்டாயம் உனக்கு தேவைப்படும்.

கொஞ்சம் யோசனையோடு காட்டாடை நோக்கியது கிராமத்து ஆடு.

குறிப்பறிந்த காட்டாடு பயப்படாமல் உன்னைப்பற்றிய விவரத்தை சொல் என்றது.

சிறிய தளர்வுடனான தயக்குத்துடன் தன் முழுக்கதையையும் சொல்லியது.

கதையை கேட்ட காட்டாடு உனக்கு நான் உதவுகிறேன்.அதற்கு முன்பு நான்
சொல்வதைக் கேள்.இந்த இயற்கை அளப்பரிய வளங்களை நமக்கு
கொடுத்திருக்கிறது.விதவிதமான உணவுகள், விருப்பமான பகுதிகளுச் செல்ல முழு
சுதந்திரம் என எல்லாமே இங்கேதானே இருக்கிறது.அதனால் இங்கேயே இருந்து
விடலாமே.

ஒருக்காலும் முடியாது.சற்று முன்னர் உன் காட்டில் நடந்த அனுபவமே போதும்
என் வாழ்நாள் முழுமைக்கும் இந்த காட்டை வெறுக்க.அதனால் தயவுசெய்து என்
கிராமத்துக்குச் செல்வதற்கான வழியை காட்டு என்றது.

காட்டாடு எவ்வளவு எடுத்துச் சொல்லியும் பலன் இல்லாததால் வெள்ளாட்டின்
கிரமாத்திற்கு செல்வதற்கான வழியை தேட தீர்மானித்தது.

ஒரு வார தீவிர தேடலுக்குப் பிறகு இரு ஆடும் கிராமத்தை அடைந்தன.இந்த ஒரு
வாரத்தில் நான்கு முறை நான்கு விதமான விலங்குகளின் தாக்குதலிலிருந்து
இரண்டும் தப்பின.இதில் வெள்ளாட்டின் நிலைதான் பரிதாபத்துக்குரியது.

காட்டாடு கிராமத்து ஆட்டைப்பார்த்து கேட்டது.

ஆமா உன் கிராமம் இவ்வளவு வறண்டு காய்ந்து கிடக்கிறதே.இங்கு அதிகபட்சம்
என்ன உணவு கிடைத்துவிடும்.என கேட்டது.

உணவை நான் தேடிப்போய் கிடைக்காமல் இருந்தாலும் என் முதலாளி எங்களுக்கான
உணவை நாள்தோறும் சிறிதளவேனும் தருவார்.முதலாளியின் பாதுகாப்பில் உணவோடு
பயமில்லாமல் இருக்கிறேன்.உன்னைப்போல் உயிருக்கு பயந்து ஓடிக்கொண்டிருக்க
வேண்டிய அவசியமில்லையே.அதனால் நீயும் என்னுடன் வந்துவிடு முதலாளி
உன்னையும் ஏற்றுக்கொள்வார் என்றது.

காட்டாடு சிரித்து கொண்டே சொன்னது உன் முதலாளியின் அடிமைகளின்
எண்ணிக்கையை அதிகரிக்க நீ சிரமபடவேண்டாம்.என் வழி வேற உன் வழி வேற அதனால
நான் இப்போதே விடைப்பெற்றுக்கொள்கிறேன்.

சிறிது நேர நட்பு பாராட்டுதல்களோடு நன்றி நவிதல்களும் முடிந்து இரு
ஆடுகளும் தங்கள் பகுதிக்கான பாதையில் நடக்கதுவங்கின.

சிறு நேரத்தில் வீட்டை அடைந்த ஆடு தன் மந்தையோடு ஒட்டிக்கொண்டது.

விசாரித்த சகாக்களுக்கு தன் அனுபவத்தை விவரிக்க ஆரம்பித்தது.

மறுநாள் காலை மந்தையை பார்வையிட்ட விவசாயியின் கண்ணில் நம் ஆடும்
தென்பட்டது.திருடு போய்விட்டது என்று கருதிய ஆடு ஒரு வாரத்தில் திரும்ப
வந்திருக்கிறது.அதுவும் கொஞ்சம் கொழுத்துபோய் வந்திருக்கிறது.விவசாயி
இரட்டிப்பு மகிழ்சியோடு அன்றைய பொழுதை கழிக்கச் சென்றான்.

இப்படி இரண்டுநாள் கடந்திருக்கும் மந்தைக்கு வந்த விவசாயியோடு மூன்றுபேர்
வந்திருந்தனர்.அவர் மூன்று நான்கு ஆடுகளை சுட்டிகாட்டி பேசியபடி
இருந்தனர்.சிறிது நேரத்தில் கையில் கொண்டுவந்த கயிற்றால் மூன்று ஆடுகளை
கட்டி இழுத்துச் சென்றனர்.அதில் நம் ஆடும் ஒன்று.

மூன்று ஆடுகளும் ஒரு நிகழ்ச்சியை சிறப்பிக்க இறுதியாக பயணிக்கிறார்கள்
என்பது மட்டும் உறுதி.


இந்த கதையின் நீதி.

நம் வாழ்க்கையில் எடுக்கப்படும் முடிவுகள் நாம்தாம்
எடுக்கவேண்டும்.அம்முடிவு தவறாக போய்விடினும் கூட இறுதிவரை போராடினால்
நூலிளையில் தப்புவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

ஆனால்

நம் முடிவுகளை வேறொருவர் தீர்மானித்தால் எவ்வளவுதான் போராடினாலும்
மீள்வதற்கு வாய்ப்பு மிகமிக குறைவு.ஏனென்றால் முடிவு நம்முடையதல்ல...

February 1, 2013

இனியொரு ஆயுதம் வேண்டாம்.

என்ன உலகமோ,என்ன மக்களோ ஒண்ணுமே புரியல எழுநூறு கோடி மக்கள் தொகையில் அதே
அளவு ஜாதிகளும் ,மதங்களும்,மொழிகளும்,கலாச்சாரமும்,ஏற்றத்தாழ்வுகளும்
வியாபித்து அதில் கட்டுண்டு கிடக்கின்றனர்.இதற்கு காரணமாக நாம் பலவற்றை
அணுகலாம் ஆனால் எதனிடத்திலும் திருப்திகரமான பதில் பெற்றுவிட முடியாது
வினாவே விழும்பில் நிற்கும்.அந்த வினாவில்தான் நாம் ஒளிந்துகொண்டு
வியாக்யானம் பேசிக்கொண்டிருக்கிறோம்.பதில் தராத எல்லா கேள்விகளும் நமக்கு
சாதகமாகிறது அல்லது அதற்கு புது அர்த்தங்கள் கற்பித்து
நம்முடையதாக்குகிறோம்.அந்த புதுப்புது அர்த்தங்கள்தான் இன்றளவும் மனிதன்
என்ற மிருகத்திடம் குடி கொண்டிருக்கிறது.அதை அவரவற்கு விருப்பமான
நிறங்களில் சாயம் பூசி இன்னும் மெருகேற்றிக் கொண்டிருக்கிறோம்.சாயம்
வெழுக்கும்போதெல்லாம் நஞ்சு தோய்த்த சாயத்தை இன்னும் கடுமையாக பூசி
மொழுகுகிறோம்.வினாவில் மறையவே விரும்புகிறோமேயொளிய பதிலை தேட நாம்
முனைவதில்லை.
பதில் கிடைத்தாலும் அதை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.காரணம் வினாவில்
இருந்தே பழகிவிட்டோம்.அந்த வட்டத்தில் இருந்து வெளிவர நாம்
முயற்சித்ததேயில்லை.




சக உயிர்களான மிருகங்களை ஆயுதங்களால் அடக்கியாள முடிந்த நம்மால் நம்மை
எந்த ஆயுதம் கொண்டும் அடக்க முடியவில்லை.அதற்கான தேடலில் கிடைத்ததுதான்
ஜாதி,மதம் என்ற இரு பெரும் ஆயுதங்கள் .அதைக்கொண்டு எளிதாக பலச்சாதனைகளை
புரிந்து காட்டினோம்.இன்றும் காட்டிக்கொண்டிருக்கிறோம்.அந்த ஆயுதங்களைப்
பற்றி கேள்வி கேட்டால் கண்ணுக்கு தெரியாத ஏதோ ஒன்று என்று
மழுப்பினோம்.அந்த கண்ணுக்கு தெரியாத ஏதோ ஒன்றால் எவ்வளவோ பிரச்சனைகள்
யுத்தங்களாக மாறியிருக்கின்றன.இருந்தாலும் நாம் திருந்தமாட்டோம்
ஏனென்றால் அழிவு வலியதாக இருந்தாலும் கண்டுபிடிப்பு நமதாயிற்றே.எப்படி
நம் ஆயுதத்தை நாமே குறை கூறமுடியும்.ஒவ்வொரு மனிதனும் ஏதேனும் ஒரு
ஆயுதத்தை தன்னுடன் வைத்துக்கொள்ள நிர்பந்திக்கப்டுகிறான்.பெரும்பாலும்
அவன் அனுமதி இங்கு அவசியப்படுவதில்லை.அவன் அறியாமாலே ஆயுதம் அவனுள்
சொருகப்பட்டு விடுகிறது.சொருகப்பட்டதை அவ்வளவு எளிதில் எடுத்து எறிந்து
விட முடியாது.அது அவன் மூளையின் அடிவரை பாய்ந்திருக்கிறது.மூளையை பதம்
பார்க்காமல் ஆயுதத்தை பிரித்தெடுக்க தேவைப்படுவது மற்றொரு ஆயுதமல்ல
கேள்விக்கான பதில்.

இப்படிக்கு,
இ.புதியவன்.

July 22, 2012

மீனாட்சி அம்மன் கோயில் ஓர் அனுபவம்.

தமிழ் நாட்டில் எவ்வளவோ சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றன,அவைகளில் நான் பார்த்து ரசித்தது ஒன்றோ இரண்டோதான்.அந்த வகையில் சமீபத்தில் பார்த்து வியந்த இடம் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்.அதை கோயில் என்பதைவிட கலைகளின் மறு வடிவம் என்றே கூறலாம்.அவ்வளவும் கலை நயமும்,வேலைப்பாடும்,நவீனமும் கலந்த ஓர் அம்சம்.கோயிலைப் பற்றி விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை.




கோயிலுக்கு உள்ளே நுளையும் முன்பே வானுயர்ந்த கோபுரங்களையும் அதன் வேலைப்பாடுகளையும் பார்த்து வாய் பிளந்து விட்டேன்.பிளந்த வாயுடனே நுளைவாயிலினில் நுளைந்தேன்.அங்கு கோயிலுக்கு வருபவர்களை சோதனையிட காவல் அதிகாரிகள் நின்று கொண்டிருந்தனர்.இரண்டு பாதைகளில் சோதனை நடந்து கொண்டிருந்தது.வலப்புற பாதையில் இரண்டு மூன்று ஆட்கள் வரிசையில் நின்று கொண்டிருந்ததால் இடது பக்கமாக போவோம் என்று போனேன்.முன்னால் சிறு பகுதி துணியால் மறைக்கப்பட்டிருந்தது.அது என்னவென்று யோசிப்பதற்குள் வலது புறமிருந்து ஓர் அதட்டல் கேட்டது...யோவ் எங்கேயா போற இங்க வாய்யா என்று, நான் அதிர்ச்சியில் திரும்பினால் காவலதிகாரி என்னையே முறைத்துக் கொண்டிருந்தார்.அப்போதுதான் எனக்கு புரிந்தது நான் போன பாதை பெண்களக்கானது என்று.கொஞ்சம் விட்டிருந்தால் அந்த துணி மறைப்பினுள் நுளைந்திருப்பேன்.நல்ல வேளை காவலதிகாரி குரல் கொடுத்ததால் அடிவாங்காமல் தப்பினேன்.செய்த தவறுக்காக காவல் அதிகாரியிடம் சாரி என்றேன்,என்ன சாரி பூரின்னுகிட்டு என்று நக்கலாக கேட்டுகொண்டே விட்டுவிட்டார்.

அப்படியே அசடு வளிந்தபடியே கோயிலுனுள் நுளைந்தேன்.பழைய அதிர்ச்சி நீங்கி புத்துணர்ச்சி வந்தது.அத்தனையும் மனிதனின் கைவிரல் செய்தது.பெரிய கற்களில் செதுக்கப்பட்ட சிற்பங்கள்,பெரிய பாளங்களாக அறுக்கப்பட்ட கற்களினால் மேற்கூரைகள்,ஒரே கல்லாலான துண்கள் என அனைத்துமே பிரம்மாண்டம்.இந்த கோயில் சுமார் 3600 ஆண்டுகளுக்கு முன்னர் குலசேகர பாண்டியனால் துவங்கப்பட்டு கி.பி 1700களில் மதுரையை ஆண்ட நாயக்கர் மன்னர்களால் கட்டிமுடிக்கப்பட்டதாக அங்கிருந்த குறிப்புப்பலகை கூறியது.(விக்கிப்பீடியாவிலும் இதே தகவல்தான்)
எனக்கு கேள்வியாக இருந்தது ஆயிரங்கால் மண்டபத்தை பற்றிதான்.எதற்காக இதைக் கட்டினார்கள் என்று புரியவில்லை. ஏனென்றால் மண்டபம் முழுவதுமே தூண்களால் நிரம்பியிருக்கின்றன,அப்படி இது எதற்காக பயன்படுத்தப்பட்டிருக்கும்?ஒரு வேளை பொது மக்களுக்கு சாப்பாடு போடுவதற்காக இருக்கும் என நினைத்துக் கொண்டேன்.தூண்களின் இடையில் வரிசையாக அமர்ந்து சாப்பிடலாம் அதற்கான இடைவெளிமட்டுமே இருக்கிறது.அதுபோக அங்குள்ள சிற்பங்கள்,தூண்கள்,மற்றும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பழையகாலத்து சிலைகள் என அனைத்துமே பரவசமேற்படுத்தக் கூடியவை.


ஆசைதீர ஓடி ஓடி கோயிலை சுற்றிப்பார்த்தேன்.எல்லாமுமே நன்றாக இருக்க கோயிலுனுள் சில முரண்பாடுகள்.

பொதுமக்கள் வழிபடுவதற்காக மன்னர்கள் கட்டிவைத்த கோயிலை இப்போது சந்தையாக்கியிருக்கிறார்கள்.குறைந்தது நூறு கடைகளாவது கோயிலின் உட்புறம் காணலாம்.அடுத்தது வெளிநாட்டினர் சாமியை சந்நிதானம் சென்று தரிசனம் செய்ய அனுமதியில்லை.ஆனால் 200 ரூபாய் கட்டினால் வெளிநாடோ உள்நாடோ எவன் வேண்டுமென்றாலும் உள்ளே போகலாம்.என்னே ஒரு கலாச்சாரம்.அடுத்து போட்டோ, வீடியோ எதுவும் எடுக்கக்கூடாது.கண்டிப்பா எடுக்கணும்னா வீடியோக்கு 250 ரூபாய் போட்டோவுக்கு ஐம்பது ரூபாய் அது கோனிக்காவுல எடுத்தாலும் சரி மொபைல்ல எடுத்தாலும் சரி அது உங்கபாடு.இப்படி வருமானத்தை பெருக்கிக் கொள்ளும் கோயில் நிர்வாகம் அந்த பணத்தை வைத்து பொதுவான நலத்திட்டங்கள் ஏதேனும் செய்தனரா என்றால் இல்லை என்றே பதில் இருக்கும்.
இப்படி எதற்காக பொதுமக்களிடமிருந்து பணத்தை பறித்துக் கொள்ள வேண்டும்?(ஒரு வேளை பஞ்சத்துல இருப்பாங்களோ...)இப்படி வசூலிப்பதற்கு ஒரு தடை உத்தரவு கொண்டு வரமாட்டார்களா?
இது மாதிரி ஒரு சில வழிப்பறிகளை தவிர்த்து விட்ட கோயிலை பார்த்தால்,ரசித்தால் மனதிற்குள் பட்டாம்பூச்சி பறக்கும்.எனக்கு மனதுக்குள் பறந்தது.


சின்ன சந்தேகம்....
மீனாட்சி அம்மன் கோயிலில் இந்த பாதாள அறை,ரகசிய அறை எதுவும் இல்லையா?ஏன்னா நம்ம திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில்ல உள்ள சில பல அறைகளில் பத்து,இருபது லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் இருப்பதாக சொல்கிறார்கள்.இங்கும் எதேனும் அறைகள் இருந்தால் அதில் நூறோ ,இருநூறோ கோடி இருந்தால் பண தட்டுப்பாடில் இருக்கும் மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகத்தினருக்கு உதவியாய் இருக்குமே.....






மேலும் மீனாட்சி அம்மன் கோயிலைப் பற்றி அறிந்து கொள்ள விக்கிப்பீடியாவின் இந்தச் சுட்டி சொடுக்கவும்.


மதுரை மீனாட்சி அம்மன் கோயில்.