October 2, 2011

முதன் முதலாக இந்தியாவில் இரண்டு அடுக்கு பயணிகள் ரயில்.

இந்தியாவில் முதன் முறையாக இரண்டு அடுக்கு குளிர்சாதன வசதியுடன் அதிவேக ரயில் ஹவுரா மற்றும் தன்பாத் இடையே நேற்று முன்தினம் தொடங்கிவைக்கப்பட்டது.


மேற்கு வங்காளம் ஹவுராவிலிருந்து ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் நகருக்கு இடையே இந்த ரயில் இயக்கப்படுகிறது. ஹவுரா ரயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில், ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி பச்சைக் கொடி அசைத்து ரயில் பயணத்தை தொடங்கி வைத்தார்.
வாரத்தில் ஐந்து நாட்கள் இந்த ரயில் இயக்கப்படும். தசரா பண்டிகை பரிசாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த 2 அடுக்கு ரயில் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. அமரும் இருக்கைகள் கொண்ட இந்த ரயில் பெட்டி (சேர் கார்) வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வெள்ளி, சனி ஆகிய 5 நாட்கள் தன்பாத்திலிருந்து காலை 5.00 மணிக்கு புறப்பட்டு 9.15 மணிக்கு ஹவுரா சென்றடையும்.

அதேபோல் ஹவுராவிலிருந்து ஞாயிறு, திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய 5 நாட்களில் மாலை 3.20க்கு புறப்பட்டு 7.40 மணிக்கு தன்பாத் சென்றடையும்.
ஹவுரா மற்றும் தன்பாத் இடையே தூரம் 270 கி.மீ.
ஒன்பது ரயில் பெட்டிகளைக்கொண்ட இந்த ரயிலில் ஏழு குளிர்சாதன 2 அடுக்கு ரயில் பெட்டிகள் உள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் 128 இருக்கைகள் உள்ளன.
இதனுடன் இரண்டு ஜெனரேட்டர் ரயில் பெட்டிகளும் இணைக்கப்பட்டு உள்ளன.

இந்த ரயில் பர்தமான் துர்காபூர், அசன்சால், பாராக்கர், குமார்துபி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் ஹவுராவிலிருந்து பரதமான் வரை குறுக்கு பாதையில் செல்லும். இந்த இரண்டடுக்கு ரயில் அறிமுகம் குறித்து ஏற்கனவே ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிநவீன தொழில் நுட்ப வசதிகளுடன் குளிர்சாதன 2 அடுக்கு ரயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இந்திய ரயில்வேயின் திறமையை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டு உள்ளது.

October 1, 2011

உங்களைப் பார்த்தால் பிறருக்கு என்ன தோன்றும் அதற்கு பதில் சொல்கிறது ஓர் இணையதளம்.

நாம்
எல்லோருமே மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கின்றனர்கள் என்பதை அறிவதில் ஆர்வம் இருக்கும். இதில் யாருமே விதி விலக்கல்ல என்றே கருதுகிறேன். சிலர் வெளிப்படையாகவே கேட்டு விடுவார்கள்.
இன்னும் சிலர் மற்றவர்கள் நினைக்காததை எல்லாம் நினைப்பதாக நினைத்து கொண்டு கவலைப்பட்டு கொண்டிருப்பார்கள்.
மற்றவர்கள் நினைப்பது பற்றி அலட்டிக்கொள்ளாதவர்களும் இருக்கவே செய்கின்றனர். இவை ஒருபுறம் இருக்க, உங்களை பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியென்றால் அதற்காக என்றே ஒரு இணையதளம் இருக்கிறது.
ஜட்ஜ்.மீ என்னும் அந்த தளம் சக இணைய தள நண்பர்கள் உங்களை பற்றி என்ன நினைக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள வழி செய்கிறது.
மற்றவர்களின் எண்ணங்களை அறிய நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த தளத்தில் உங்கள் புகைப்படத்தை இடம்பெற செய்வது மட்டும் தான். அதன்பிறகு உறுப்பினர்கள் உங்களை பற்றிய அவர்களுடைய கருத்தை தெரிவிப்பார்கள்.
பர்ஸ்ட் இம்ப்ரஷன் ஈஸ் தி பெஸ்ட் இம்ப்ரஷன் என்று ஆங்கிலத்தில் ஒரு சொல் வழக்கு உண்டல்லவா? அதே போலவே உங்களை பார்த்ததும் தோன்றக்கூடிய பிம்பத்தை இந்த தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொருவருக்கும் உங்களை பார்க்கும் போது எத்தகைய எண்ணம் ஏற்படுகிறது என்பதை அவர்கள் உங்கள் புகைப்படத்தை பார்த்ததும் தெரிவிக்கும் கருத்துக்கள் வழியே அறிந்து கொள்ளலாம்.
எப்படியும் தினந்தோறும் நம்மை எத்தனையோ பேர் பார்க்கின்றனர். அவர்களுக்கு எல்லாம் நம்மைப்பற்றி ஒரு எண்ணம் தோன்றும். அந்த எண்ணங்களை தெரிந்து கொள்ள இந்த தளம் உதவுகிறது.
எண்ணங்கள் என்றவுடன் பக்கமாக கருத்துக்களோ அல்லது விமர்சனங்களோ கிடையாது. அழகாக வரைபடத்தின் வாயிலாக உணர்த்தப்படுகின்றன.




ஒவ்வொரு புகைப்படத்தின் அருகிலும் இந்த வரைபடம் தோன்றுகிறது. சகஜமாக பேசக்கூடியவர், கூச்ச சுபாவம் உள்ளவர், புத்திசாலியானவர், அழுத்தமானவர் என நான்கு காரணிகளின் அடிப்படையில் வரைப்படத்தில் ஒருவரை பற்றிய மதிப்பீடு காட்டப்படுகிறது.
புகைப்படத்தை பார்த்ததும் தோன்றக்கூடிய எண்ணங்களை இணைய நண்பர்கள் வரைபடத்தின் மீது கிளிக் செய்து உணர்த்தலாம். இணைய நண்பர்களின் கருத்தையும் வரைபடத்தில் அவற்றின் முடிவுகளையும் அழகாக காணலாம்.
தேர்தல் போன்ற நேரங்களில் கட்சிகளின் செல்வாக்கு அலசி ஆராயப்பட்டு வரைபடத்தின் மீது காட்டப்படுவது போல நீங்களும் உங்களைப் பற்றிய அலசலை வரைபடமாக காணலாம்.
ஆர்வம் உள்ளவர்கள் இந்த தளத்தில் புகைப்படத்தை சமர்பித்து மற்றவர்களின் கருத்துக்களை அறிந்து கொள்ளலாம். அதே போல இந்த தளத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள மற்றவர்களின் புகைப்படங்களையும் பார்த்து நமக்கு தோன்றும் முதல் எண்ணத்தையும் தெரிவிக்கலாம்.
இந்த மதிப்பீட்டு தளத்தை பார்க்கும் போது மற்ற மதிப்பீட்டு தளங்களுக்கு எல்லாம் முன்னோடியாக கருத்தப்படும் ‘ஹாட் ஆர் நாட்’ தளத்தின் நினைவு வரலாம்.
ஹாட் ஆர் நாட் தளம் ஒருவர் அழகாக இருக்கிறாரா இல்லையா என்பதை தெரிந்து கொள்வதற்காக அவர்களின் புகைப்படத்தை பார்த்து மற்றவர்கள் மதிப்பெண்கள் அளிப்பதை அடிப்படையாக கொண்டது. இந்த தளம் சுவாரஸ்யமானது என்றாலும் இதன் மீது பல்வேறு விமர்சனங்கள் உண்டு.
ஆனால் ஜட்ஜ்.மீ தளம் அவ்வாறு இல்லாமல் எவருக்குமே ஆர்வம் இருக்ககூடிய தங்களைப் பற்றிய மற்றவர்களின் முதல் எண்ணங்களை அறிய உதவுகிறது. இதன் அடிப்படையில் ஒருவர் பொதுவாக தங்களைப் பற்றி அறிந்து கொண்டு தேவை என்றால் தங்களை மாற்றி கொள்ளவும் முற்படலாம்.











நன்றி


http://etamilnews.com

September 30, 2011

இணையத்தின் சக்கரவர்த்தி கூகுல்.பாகம் ஐந்து.

கூகுல் பல்வேறு விதமான வசதிகளை பயனாளர்களுக்கு வழங்கி வருகிறது. அவைகளில் மின்னஞ்சல் சேவை வழங்கும் ஜிமெயிலின் பணி மகத்தானது.ஜிமெயில் பற்றி சில முக்கிய தகவல்கள்.



ஜிமெயில்


ஜிமெயில், ஏப்ரல் 1 , 2004 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகப் படுத்தப்பட்ட காலப் பகுதியில் இச்சேவைகளைப் பெற்றுக்கொள்ள ஜிமெயில் மின்னஞ்சல் சேவையை ஏற்கனவே பயன்படுத்துபவரின் அழைப்பிதழ் தேவை. ஆரம்பத்தில் அமெரிக்காவில் அழைப்புக்கள் குறுஞ்செய்திகள் வழியாக வழங்கப்பட்டது. தொடக்கத்தில், 1 GB அளவாக இருந்த சேமிப்புத் திறன் ஏப்ரல் 1, 2005 முதல், ஜிமெயிலின் ஓராண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக 2 GB ஆக கூட்டப்பட்டது.(தற்போதைய சேமிப்புத் திறன் 8GB SEP,2011 )ஆரம்பத்தில் இதன் வளர்ச்சி வீதம் கூடுதலாகவே இருந்தது. இதன் தற்போதைய வளர்ச்சி விகிதம் நாளுக்கு 3.348 மெகா பைட் ஆகும்.
ஜிமெயில் ஏஜாக்ஸ்ஸை மிகப்பெருமளவில் பயன்படுத்துகின்றது. தற்கால உலாவிகளின் ஜாவாஸ்கிரிப்ட் முறையைப் பயன்படுத்தி சிறந்த பயனர் அனுபவத்தைத் தருகின்றது. இதற்கு இன்டநெட் எக்ஸ்ப்ளோரர் 5.5, பயர்பாக்ஸ் 0.8+, மொஸிலா அப்ளிக்கேசன் ஸ்யூட் 1.4+, சவாரி 1.2.1+, நெட்ஸ்கேப் 7.1+, ஒபேரா 9+, ஆகிய உலவிகள் மூலம் பயன்படுத்தப்பட்டது .பழைய உலாவிப் பதிப்புகளில் இன்ரநெட் எக்ஸ்ளோளர் 4.0+, நெட்ஸ்கேப் 4.07+, ஒபேரா 6.03+ அடிப்படை HTML பார்வையைத்தரும் . ஜிமெயில் நகர்பேசிகளில் WAP முறையிலும் அணுகக்கூடியது.
ஏப்ரல் 12 , 2006 முதல் கூகிள் காலண்டர் சேவையையும் இணைத்துக் கொண்டது.



ஜிமெயிலின் அந்தரங்கத் தன்மை Privacy policy குறித்துக் கேள்விகள் எழுந்துள்ளன. ஜிமெயில் மின்னஞ்சல் கணக்குகள் அழிக்கப்பட்ட பின்னரும் சிறிது காலத்திற்கு இவை பாதுகாக்கப்படும். மேலும் பொதுப் பாதுகாப்பிற்காக மின்னஞ்சல் படிக்கக் கூட கொடுக்கப்படும்.
இது பெரும்பான்மையோருக்கு பிடிக்கவில்லை என்றாலும் ஜிமெயிலின் புது புது வசிதிகளுக்காக பயன்படுத்துகின்றனர்.


ஜிமெயில் தற்போது, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் இடைமுகத்தை அளிக்கின்றது. அரபு , பல்கோரிய, குரோத்தியன், செக், டெனிஸ், டச்சு , எஸ்தோனிய, பினிஷ் , பிரெஞ்சு , ஜெர்மன் , கிரேக்கம் , ஹீத்ரு, ஹிந்தி , ஹங்கேரியன் , ஐஸ்லாந்திக், இந்தோனேசியன், இத்தாலி, ஜப்பானிஷ், கொரியன், லத்வியா, லித்துவேனியா, போலிஷ் , போத்துக்கீசியன், உரோமானிய, ரஷ்யன், செர்பியன், சீனம், ஸ்லோவாக், ஸ்லோவேனியன், ஸ்பானிஸ், ஸ்வீடிஸ், ராகாலெக், தாய் , சம்பிரதாய சீனம் , துருக்கி , பிரிட்டீஷ் ஆங்கிலம் , அமெரிக்கன் ஆங்கிலம், உக்ரேனிய, வியட்நாமிய மொழிகளில் இடைமுகமானது வெளிவந்துள்ளது.






இன்னும் தேடுவோம்............

September 29, 2011

2010 ல் ஆயுதங்கள் வங்கியதில் இந்தியா முதலிடம்.

இந்தியா எந்த துறையில் வளர்கிறதோ இல்லையோ ஆனால் நாட்டின் பாதுகாப்பிற்கென செலவிடும் பணத்தின் அளவில் மற்ற நாடுகளை விட இந்தியாவுக்கு வேகமான வளர்ச்சிதான். கடந்த 2010 ம் ஆண்டில் ஆயுதங்கள் வாங்கியதில் வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தை பிடித்தது. அந்த வகையில் பாதுகாப்பு மேம்பாட்டுக்காக ரூ.28,420 கோடி மதிப்பில் ஆயுதங்களை இந்தியா வாங்கியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. 2010 ல் ரஷ்யாவிடம் ரூ.7,350 கோடி மதிப்பிலான 29 எம்.ஐ.ஜி. மற்றும் 29 கே போர் விமானங்கள், இங்கிலாந்திடம் 57 ஹவாக் ஜெட்கள், இத்தாலியிடம் 12 ஏ.டபிள்யூ 100 ஹெலிகாப்டர்களையும் இந்தியா வாங்கியுள்ளது.
இது போன்று ஆயுதங்கள், கருவிகள் வாங்கியதில் இந்தியா முதலிடமும், தைவான், சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் அடுத்தடுத்த இடங்களை பிடித்தன. இந்தியாவுக்கு ஆயுதங்கள் வழங்கியதில் ரஷ்யா முதலிடத்தில் உள்ளது. மேலும் உயர் தொழில் நுட்ப ஆயுதங்களை இஸ்ரேல், பிரான்ஸ், அமெரிக்காவிடம் இருந்தும் இந்தியா பெற்றுள்ளது.
வளரும் நாடுகளுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஒப்பந்தங்களில் அமெரிக்கா, ரஷ்யா முதல் 2 இடங்களில் உள்ளன. உலக அளவில் 2010 ம் ஆண்டில் ஆயுதங்கள் பரிமாற்ற ஒப்பந்தங்களின் மதிப்பு 1.98 லட்சம் கோடி. 2009 ல் இது ரூ.1.87 லட்சம் கோடியாக இருந்து குறிப்பிடதக்கது.

பறவைகளின் அழிவுக்கு காரணமான மனிதன்.

நம் உலகில் பல்லாயிரக் கணக்கான பறவையினங்கள் உயிர் வாழ்ந்தன.ஆனால் இப்போது சில ஆயிரங்கள் என சுருங்கிவிட்டது.பறைவையினங்கள் அழிவதற்கும் அழிந்து கொண்டு வருவதற்கும் மனிதர்களாகிய நாம்தான் முக்கிய காரணம் என்பதை மறுக்க இயலாது.பறவைகளுக்கு பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்துவதும் அதே மனிதான் .



கி. பி. 1500 க்குப் பின்னர்தான் நூற்றுக்கும் அதிகமான பறவை இனங்கள் அழிந்துள்ளன. அத்துடன் பறவையினங்களின் அழிவு வீதமும் அதிகரித்துச் செல்வதாகவே உள்ளது. இப்பொழுது உலகில் உயிர்வாழும் ஏறத்தாழப் பத்தாயிரம் இனப் பறவைகளில் 1200 இனங்கள் அழியும் அபாயத்திலுள்ளதாகக் கருதப்படுகிறது. பெரும்பாலும் தீவுகளில் வாழும் குறிப்பாகப் பறக்க இயலாத பறவையினங்களே அதிக ஆபத்தை சந்திக்கின்றன.

சில நூறு வருடங்களுக்கு முன்பு ஓக்குகள் என அழைக்கப்படும் பறவையினங்கள் கனடாவுக்கு அருகிலுள்ள தீவுகளிலும் கிரீன்லாந்து ,ஐஸ்லாந்து ,நார்வே, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து போன்ற இடங்களில் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டன. காலப் போக்கில் இப்பறவைகள் மனிதர்களாலும் விலங்குகளாலும் அழிந்து போகும் வரை வேட்டையாடப்பட்டன. இவ்வினத்தின் கடைசி ஜோடிகள் 1844 ல் ஜூலை 3ல் ஐஸ்லாந்துக்கு அருகில் உள்ள ஒரு தீவில் வைத்துக் கொல்லப்பட்டன.இவைகள் தங்கள் சிறகுகளை உபயோகித்து நீருக்கடியில் நீந்த வல்லவை. சிறிய ஓக்குகளைப் போல பெரிய ஓக்குகளால் பறக்க முடியாது. இதனால் தான் இப்பறவைகள் மனிதருக்கு இலக்காகக் கூடியனவாக இருந்தன.பெரிய ஓக்குகள் ஒரு வருடத்தில் ஒரு முட்டையை மட்டுமே இடுகின்றன.




டேடோ அழிந்த பறவையினங்களில் இதுவும் ஒன்று. இது மொரீசியஸ் தீவில் வாழ்ந்த பறக்க முடியாத பறவையாகும். ஏறத்தாழ ஒரு மீட்டர் உயரமான டேடோ நிலத்தில் கூடு கட்டி வாழ்ந்தது; பழங்களை உணவாகக் உண்ணக்கூடியது.மாமிச உண்ணிகள் இல்லாத தீவில் வாழ்ந்த பறவை என்பதால் டேடோ மனிதர்களைக் கண்டு அஞ்சாமையால் அதன் அழிவுக்கு காரணமானது. மொரீசியஸ் தீவுகளுக்கு போர்த்துக்கீசியர்கள் 1505 இல் சென்றனர். பின்னர் டச்சுக்காரர்கள் அங்கு குடியேறினர். மனிதர்களாலும் அவர்களது வளர்ப்பு விலங்குகளாலும் ஏறத்தாழ நூறாண்டுக் காலத்தில் படிப்படியாக டேடோ பறவையினம் முற்றுலுமாக அழிக்கப்பட்டது. டேடோ பறவை மெல்ல மெல்ல சூழல் பாதுகாப்புச் சின்னமாக மாறி வருகிறது.




யானைப் பறவை அழிந்துபோன பறவையினங்களில் ஒன்றாகும்.மடகாஸ்காரில் காணப்பட்ட இவை பதினாறாம் நூற்றாண்டுடன் அழிந்து விட்டதாகக் கருதப்படுகிறது. யானைப் பறவையே உலகின் மிகப் பெரிய பறவையாக இருந்தது. அது மூன்று மீட்டரை விட உயரமானதாகவும் அரை டன் எடை உடையதாகவும் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. யானைப் பறவையின் முட்டைகளின் எச்சங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில ஒரு மீட்டரை விட அதிக சுற்றளவுடையனவாக இருந்தன. யானைப் பறவைகளின் அழிவுக்கும் மனிதன் அவற்றை வேட்டையாடியதே காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

தற்போதைய சூழ்நிலையில் நமக்கு நெருக்கமாக இருக்கும் நாம் எப்போதும் பார்க்கக் கூடிய சிறிய பறவையினமான சிட்டுக்குருவிகள் அழிந்து கொண்டு வருவதாக ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. அதற்கான காரணமாக அலைப்பேசி கோபுரங்களைக் சுட்டிக்காட்டுகின்றனர். அதிலிருந்த வெளிப்படும் மின் காந்த அலைகள் சிட்டுகுருவிகளை வெகுவாக பாதிப்பதால் அவைகள் அழிந்து வருவதாக கூறுகின்றனர்.

பறவையினங்களை காப்பாற்ற எத்தனை அமைப்புகள் ஏற்படுத்தினாலும் மனிதனின் செயற்கையான படைப்பால் இயற்கையான படைப்புகள் அழிந்து கொண்டிருக்கின்றன என்பதுதான் உண்மை.

September 28, 2011

ஞாபக சக்தி குறைபாட்டை தவிற்க சில தகவல்கள்.

ஞாபக சக்தி குறைவு என்பது இப்போது பெரியவர்களுக்கு மட்டுமல்ல பள்ளிக்கூடம் செல்லும் சிறவர்களுக்கும் இதன் பாதிப்பு இருக்கிறது.பெரும்பாலும் உணவு முறை மற்றும்,மனக்கவலைகள் காரணமாகத்தான் இந்த குறைபாடு தோன்ற காரணம். உணவு
வகைகளில் சில மாற்றங்களை மேற்கொண்டு உணவு உண்ணும் பழக்கத்தை மேற்கொண்டால் கூடுமானவரைக்கும் ஞாபக சக்தி குறைபாட்டை தவிற்கலாம்.


அதற்கான சில வழிமுறைகள் இதோ.



1.ஞாபக சக்தி அதிகரிக்க நாள்தோறும் காலையில் ஐந்து நிமிடம் தியானம் செய்வது நல்லது.


2.வாரம் ஒரு முறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது. இதுவும் ஞாபக சக்தியை அதிகரிக்கும். இக்கீரையை வெயிலில் காயவைத்துப் பொடியாக்கிக்கொண்டு, தினமும் அரை தேக்கரண்டியைப் பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் பிள்ளைகள் மற்றும் பெரியவர்கள் நல்ல நினைவாற்றலுடன் சுறு சுறுப்பாகத் திகழ்வார்கள். நகரங்களில் இருப்போற்கு வல்லாரை கிடைப்பதற்கான வாய்ப்பு குறைவு.அவர்கள் வல்லாரை கேப்ஸ் யூல்களைப் பயன்படுத்தலாம்.

3.சிறுவர்களுக்கும் ,பெரியவர்களுக்கும் நாள்தோறும் காலையில் தண்ணீரில் ஊறபோட்ட பாதாம் பருப்பை அரைத்து உட்கொள்ள தரலாம். 100 கிராம் பாதாம் பருப்பில் 490 மில்லி கிராம் பாஸ்பரஸ், தாது உப்பு இருக்கிறது. குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது.


4. இருபது கிராம் அக்ரூட் பருப்புகளுடன் பத்து கிராம் உலர்ந்த திராட்சைப் பழத்தை தினமும் ஒருவேளை சாப்பிட்டு வந்தாலும் மூளை வலுப்பெற்று நினைவாற்றல் அதிகரிக்கும். செலவில்லாமல் சாப்பிட 50 கிராம் வேர்க்கடலை போதும்.


5. ஞாபக சக்தியை அதிகரிக்கும் முதல் பழம் ஆப்பிள். இரண்டாவதாக பேரீச்சை, திராட்சை, மாதுளை, ஆரஞ்சு முதலியன.


6. சமையலில் சீரகம், மிளகு ஆகியவை கண்டிப்பாக இடம் பெறவேண்டும். இவை மூளையில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன.


7. கோதுமை, சோளம், பார்லி, காராமணி, பாசிப்பருப்பு, கேரட், தண்டுக்கீரை, பீட்ரூட், முருங்கைக்காய், சோயாபீன்ஸ், வெங்காயம், வெள்ளைப் பூண்டு, புதினா முதலியவற்றில் பாஸ்பரஸ் உப்பு அதிக அளவில் உள்ளது.இவை தவிர பால், தயிர் போன்றவற்றையும் உணவில் சேர்க்க வேண்டும்.


சத்தான உணவு வகைகள் உண்பதன் மூலம் ஞாபக சக்தி குறைபாட்டிற்கு நிவாரணம் கிடைத்தாலும், நாமும் கூடுமானவரை தேவையில்லாத கவலைகளையும்,பிரச்சனைகளையும் மூளைக்கு அனுப்பாமல் இருந்தாலே ஞாபக சக்தி குறைபாட்டை கொஞ்சம் தவிற்கலாம்.